11) செல்வமும் விதியும்

நூல்கள்: இஸ்லாம் கூறும் பொருளியல்

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சிறுவனாக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்:

உனக்கு நான் சில சொற்களை கற்றுத் தருகிறேன். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ்வை கண் முன்னே பார்ப்பாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் நீ கேள்! மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் நீ அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! சமுதாயம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து உனக்கொரு தீமையை செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன.

(திர்மிதி: 2440)

இந்த நம்பிக்கை மிக முக்கியமான நம்பிக்கை! நாம் உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடம் தான் உதவி தேட வேண்டும். இப்படி இருந்தால் நாம் சுய மரியாதையுடன் இருக்கலாம். இப்படி இருந்தால் நாம் அல்லாஹ்வைப் பார்க்கலாம்.

நபி (ஸல்) கூறுகிறார்கள்: ஒட்டுமொத்த சமுதாயமே சேர்ந்து உனக்கு ஒரு தீமையோ, நன்மையோ செய்ய நாடினால் அது அல்லாஹ் நாடியதைத் தவிர எதுவும் நடக்காது. இப்படி ஒருவன் நம்பினால் அவன் எந்த நேரத்திலும், யாரிடமும் யாசகம் கேட்க மாட்டான்.

அனைத்தும் எழுதப்பட்டு ஏடுகள் காய்ந்து விட்டன என்றும் கூறுகிறார்கள். அப்படியென்றால் நமது நன்மை, தீமை எல்லாம் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு விட்டது. எவராலும் அல்லாஹ் விதியாக்கியதைத் தடுக்கவோ அல்லது தடுத்ததைக் கொடுக்கவோ முடியாது. இப்படிப்பட்ட ஒரு அடிப்படையை நாம் நம்பவேண்டும்

அல்லாஹ்வின் மீது நாம் உறுதியான நம்பிக்கை வைத்தால் ஒன்றுமில்லாமல் சூனியத்திலிருந்தும் தருவான். இதற்கு உதாரணமாக அல்லாஹ் குர்ஆனில் ஒரு சம்பவத்தை செல்லிக் காட்டுகிறான்.

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்” என்று (மர்யம்) கூறினார்.

(அல்குர்ஆன்: 3:37)

மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவருக்கு ஸக்கரியா (அலை) அவர்கள் தான் வழக்கமாக உணவைக் கொண்டு வருவார்கள்.

ஒருநாள் பள்ளியின் மிஹ்ராபில் சென்று பார்த்த போது உணவைக் கண்டார்கள். “மர்யமே! இது உனக்கு எப்படி வந்தது?” என்று கேட்ட போது, “இது எனக்கு அல்லாஹ்விடம் இருந்து வந்தது. அல்லாஹ் தான் நாடியோருக்குக் கணக்கின்றி கொடுக்கின்றான்” என்றார்கள்.

இது பரக்கத்தை விட மிஞ்சிய ஒன்று! நபிமார்களைப் பற்றிச் சொன்னால் இது அவர்களுக்கு மட்டும் உள்ளது என்று கூறி விடுவார்கள் என்பதால் தான் மர்யம் (அலை) அவர்களை பற்றிக் குறிப்பிடுகிறோம்.

ஏனென்றால் தன்னை நம்பினால் தானே தருகிறேன் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

(அல்குர்ஆன்: 65:2),3)

நாம் என்ன செய்வது? ஏது செய்வது என்று தவிப்பவருக்கு அல்லாஹ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமானால் அவருக்கு அல்லாஹ் போக்கிடத்தைத் தருகிறேன் என்று கூறுகிறான். அல்லாஹ் குர்ஆனில் சொன்னால் அதை நாம் நம்ப வேண்டும்.

அதே போன்று அல்லாஹ் குர்ஆனில் ஒரு மனிதரைப் பற்றி, அவருக்குச் செய்த பரக்கத்தைப் பற்றிக் கூறுகிறான்.

அவர் தான் இப்ராஹீம் நபி! அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி பாரான் பெருவெளியில் தனது மனைவியையும், மகனையும் விட்டு விட்டு வருகிறார்கள். அவருக்குச் செய்த பரக்கத் தான் உலகத்திலேயே பெரிய பரக்கத்!

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கு அருகில் விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்கும் கனிகளை உணவாக வழங்குவாயாக!

(அல்குர்ஆன்: 14:37)

இப்ராஹீம் நபி தனது மனைவியையும் பிள்ளையையும் அல்லாஹ் கூறியதற்காக பாரான் பெருவெளியில் விட்டுச் சென்றார்கள். அந்த ஊரை புதுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லாஹ் இப்ராஹீம் நபியிடம் கட்டளையிட்டான். காரணம் அந்த அல்லாஹ்வின் ஆலயம் சிதிலமடைந்து போயிருந்தது. பிறகு அது ஒரு ஊரானது.

அவர்களின் நம்பிக்கைக்கு அல்லாஹ் தந்த பரிசு தான் ஜம் ஜம் நீரூற்று! மக்காவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருக்கிறது. இப்போது மக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களுக்குத் தினமும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அல்லாஹ்வை மட்டும் நம்பினால் இப்படிப்பட்ட அதிசயத்தை அவன் நிகழ்த்துவான்.

நான்கு விஷயங்கள் மனிதன் கருவறையில் இருக்கும் போதே எழுதப்பட்டு விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ் (பெண்ணின்) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான். (அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும் போது) அந்த வானவர், “என் இறைவா! (இது ஒரு துü) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. என் இறைவா! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும் போது அவ்வானவர், “என் இறைவா! (இது) ஆணா அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போது எழுதப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி)

(புகாரி: 318)