11) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 9

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

யூதர்களின் சந்தேகம்

இப்போது ஏசு, கல்லறையில் வைக்கப்பட்டு விட்டார். கல்லறை என்றதும் ஆறடி நீளம், இரண்டடி அகலம் என்று கற்பனை செய்ய வேண்டாம். அது பெரிய காற்றோட்டமான அறை என்று சொல்லலாம்.

“கிறிஸ்து இறந்த அந்த நாள்’ என்ற நூலில் ஏசுவின் கல்லறை 5 அடி அகலம், 7 அடி ஆழம், குறுக்கு வாட்டக் கம்புகள் கொண்ட அறை என்று ஜிம் பிஷப் என்பவர் குறிப்பிடுகின்றார்.

குடிசை வாழ் மக்களுக்கு இது போன்ற இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள்.

இப்படிப்பட்ட விசாலமான அறையில் தான் ஏசு அடக்கம் செய்யப்படுகின்றார். அடக்கம் செய்யப்பட்ட பின் யூதர்களுக்கு ஐயப்பாடும், அமைதியின்மையும் ஏற்படுகின்றது. ஏன்?

  1. கல்லறை மிக மிக அருகில் அமைந்திருந்தது.
  2. அந்தரங்க சீடர்களின் உதவிகள்.
  3. இன்னும் ஏசுவின் சிலுவைக் கூட்டாளிகள் உயிருடன் இருந்தது.
  4. உடலைப் பெறுவதற்கு பிலாத்தின் அவசர அவசரமான அனுமதி

இத்தனையும் யூதர்களின் சந்தேகப் புயல்களைக் கிளப்பி விட்டன. உடனே அவர்கள் பிலாத்திடம் ஓடோடி வருகின்றார்கள்.

மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள்.

அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது “மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.

ஆகையால் மூன்று நாள் வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, “இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையை விடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்” என்றனர்.

மத்தேயு 27:62-64

ஆனால் அவர்கள் மறுநாள் அதாவது ஞாயிற்றுக் கிழமையன்று பிலாத்திடம் வந்து புகார் செய்கின்றார்கள். நீங்களே போய் காவல் காத்துக் கொள்ளுங்கள் என்று பிலாத் கூறி விட்டார்.

இங்கே முந்தைய தவறு என்று யூதர்கள் குறிப்பிடுவது, ஏசுவின் காலை முறிக்காமல் சிலுவையிலிருந்து இறக்க அனுமதித்ததைத் தான். கடைசித் தவறு என்று குறிப்பிடுவது கல்லறையைச் சரியாக மூடாமல் விட்டதை!

அதாவது குதிரையைக் கட்டிப் போட்டு விட்டு, லாயத்தை மூடச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது, குதிரை மாயமாகி விட்டது என்பது! கடவுளின் இந்தத் திருவிளையாடல் அவர்களுக்குத் தெரியவில்லை.

வாரத்தின் முதல் நாள்! ஞாயிற்றுக்கிழமை முதன் முதலில் மகதலா மரியா மட்டும் வருகிறாள்.

வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார்.

மாற்கு 16:9

எதற்காக அவள் அங்கு சென்றாள்?

ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமி என்பவளும் அவருக்குச் சுகந்த வர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு,

மாற்கு 16:1

To anoint him – அவருக்கு சுகந்த வர்க்கமிடுவதற்காக!

இது உயிருள்ளவர்களைக் குறிக்கும் சொல்! இதற்கு எபிரேய மொழியில் மஸஹ், தடவுதல், மஸாஜ் செய்தல், தேய்த்து விடுதல் என்று பொருள்.

இறந்தவரின் உடலில் மூன்று நாளுக்குப் பிறகு தேய்த்து விடக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யூத, கிறித்தவர்கள் இதுபோன்று செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது முஸ்லிம்கள் இப்படிச் செய்வார்களா? எவருமே இப்படிச் செய்வதில்லை.

அப்படியானால் மக்தலா மரியா என்ற யூதப் பெண் இறந்து போனவரின் (ஏசுவின்) உடலுக்கு 3 நாளுக்குப் பிறகு எதற்காக நறுமணப் பொருள் தேய்த்து விட வருகின்றார்?

இறந்தவரின் உடல் இறந்து போன சிறிது நேரத்தில் விறைத்துப் போகத் தொடங்கும். மூன்று நாட்கள் ஆகி விட்டால் உடலில் திசுக்கள் உடைந்து, உடல் பொங்கி, நாற ஆரம்பித்து விடும்.

இப்போது தேய்த்தால் என்ன வரும்? சதை துண்டு துண்டாகப் பிய்த்துக் கொண்டு வரும். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு தேய்த்தல் என்பது அர்த்தமற்ற செயல்!

ஆனால் அதே சமயம் உயிருள்ள ஒருவரை தேய்த்து விடுதல் என்று சொன்னால் ஒரு அர்த்தமிருக்கும். அது தான் இங்கு நடக்கின்றது.

ஏசுவுக்கு இறுதிச் சடங்கு செய்தவர்கள், அரிமேத்திய ஊரைச் சார்ந்த யோசேப், மகதலா மரியா போன்றவர்கள் தான்.

அவர்களில் ஒருவரான மகதலா மரியா தான் 2 இரவுகள், ஒரு பகல் கழித்து யூதர்களின் புனித நாளான சனிக்கிழமைக்குப் பின் ஏசுவைக் கவனிப்பதற்காக வருகின்றார். அங்கு வந்த போது தான் அவருக்கு ஓர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருக்கின்றது.

ஏசுவுடைய கல்லறைக் கல் அகற்றப்பட்டிருந்தது. அவருடைய மேனியில் கிடந்த துணி உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;

கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.

அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.

இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?” (என்று கேட்டனர்)

லூக்கா 24:1-5

பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.

லூக்கா 24:12

திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.

அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.

அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.

அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, “நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.

அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

நீங்கள் விரைந்து சென்று, “இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.

மத்தேயு 28:2-7

அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.

லூக்கா 24:23

இயேசு உயிரோடு இருக்கிறார் (ஆப்ண்ஸ்ங்) என்று தான் வானவர்கள் கூறுகிறார்கள். உயிர் பெற்று எழுந்தார் என்று சொல்லவில்லை.

இது பல கேள்விகளை எழுப்புகிறது.

கல் ஏன் அகற்றப்பட்டது? மரணத்தை வென்றவர் என்றால் ஆவியாக வெளியேற வேண்டும். ஆவி வெளியேறுவதற்குக் கல் ஏன் அகற்றப்பட வேண்டும்? ஓர் ஆவி வெளியேற வேண்டும் என்றால் அதனுடைய உடலில் கிடந்த துணி ஏன் நீக்கப்பட வேண்டும்?

கற்கோட்டையின் சிறைச்சாலையோ, இரும்புக் கம்பியினால் ஆன கூண்டுகளோ ஆவியைத் தடுத்து நிறுத்த முடியாத போது இந்தக் கல்லறைக் கல் எம்மாத்திரம்?

அப்படியானால் ஏசுவை யாரும் கடத்தியிருக்க வேண்டும் என்று மகதலா மரியா அழுகின்றார். அதை ஏசு – வானத்திலிருந்து அல்ல – அருகில் நின்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.

யோவான் 20:15

தோட்டாக்காரர் வேடத்தில்…

ஏசுவுக்கு அவள் யாரென்று நன்கு தெரியும். அவள் யாரைத் தேடுகிறாள் என்பதும் ஏசுவுக்குத் தெரியும். தன்னைக் காணவில்லை என்பதற்காகத் தான் அவள் அழுகின்றாள் என்பதும் தெரியும். தான் ஒரு தோட்டக்காரர் போல் காட்சியளிப்பதால் அவளால் அடையாளம் காண முடியவில்லை என்றும் ஏசுவுக்குத் தெரியும். இருப்பினும் இப்படி ஒரு கேள்வி எதற்கு? ஒரு சின்ன விளையாட்டு காட்டுவதற்காகத் தான்.

மகதலா மரியா அவரை ஏன் தோட்டக்காரர் என்று நினைக்க வேண்டும்? உயிர்த்தெழுந்து வந்தவர்கள் தோட்டக்காரர் போலவா காட்சியளிப்பார்? ஒருபோதும் கிடையாது.

அவள் ஏசுவைத் தோட்டக்காரர் என்று எண்ணியதற்குக் காரணம், அவர் தோட்டக்காரர் வேடத்தில் இருந்ததால் தான். அவர் ஏன் தோட்டக்காரர் தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும்? காரணம், அவர் யூதர்களைக் கண்டு பயப்படுவதால்! அவர் ஏன் யூதர்களைக் கண்டு பயப்பட வேண்டும்? காரணம் அவர் இறக்கவில்லை.

அவர் இறந்திருந்தால், அவர் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. காரணம், உயிர்த்தெழுந்தவர் மீண்டும் இறக்க மாட்டார். இவ்வாறு பைபிள் தான் கூறுகின்றது.

மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.

எபிரேயர் 9:27

பத்திரிகைகளில், “இறந்தவர் உயிருடன் திரும்பினார்’ என்று செய்தி வெளியிடுவார்கள். அதாவது இறந்து விட்டார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள்; டாக்டர் சான்றிதழ் அளித்திருப்பார்; ஆனால் அவர் தெய்வாதீனமாகப் பிழைத்திருப்பார். அந்தச் செய்தியை சாதாரணமாகப் போட்டால் அதற்கு ஒரு விறுவிறுப்பு இருக்காது. அதனால், “இறந்தவர்” உயிருடன் திரும்பினார் என்று வெளியிடுகின்றன. அதாவது அவர் உண்மையில் இறக்கவில்லை என்பதை இந்தக் கொட்டேஷன் மூலம் தெரிவித்து விடுகின்றன.

பிணத்திற்கு அவர் என்று சொல்வதுண்டா?

இப்போது மகதலா மரியாவின் உரையாடலுக்கு வருவோம்.

இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.

யோவான் 20:15

ஐண்ம் அவரை, அவரை எங்கே என்று மகதலா கேட்கிறாள். ஏசுவின் உடலை மகதலா கேட்கவில்லை. காரணம் இறந்தவரின் உடலை ஒரு பெண் தனியாகச் சுமக்கவும் முடியாது என்பது மகதலா மரியாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவள் கேட்டது, உயிருடன் உள்ள ஏசுவைத் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

இப்போது ஏசு, “மரியா’ என்று அழைக்கிறார்.

இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு “போதகரே” என்பது பொருள்.

இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், “என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” எனச் சொல்” என்றார்.

ஜான் 20:16, 17

இந்த அழைப்புக் குரல் யாருக்குச் சொந்தம் என்பதை மரியா புரிந்து கொள்கிறாள். உடனே ரபூனி என்று அழைக்கிறாள். ஆர்வத்தில் அவரைத் தொட முயற்சிக்கிறாள். அப்போது ஏசு, அதற்கு மேற்கண்டவாறு கூறுகிறார். இவ்வாறு அவர் கூறுவதற்குக் காரணம், உடல் மற்றும் மன ரீதியான காயங்கள் தான்.

அதாவது, நான் இன்னும் மரணிக்கவில்லை. ஆவியாக எழுந்து வரவில்லை. திரும்பத் தான் வந்திருக்கிறேன் என்று குறிப்பிடுகின்றார்.

“நான் இன்னும் என் தந்தையிடம் செல்லவில்லை’ என்றும் கூறுகிறார். இது யூதர்களின் வழக்கப்படி, “நான் இன்னும் மரணிக்கவில்லை’ என்றே பொருள்.

இதுவரை நாம் கண்ட விளக்கங்கள் அனைத்துமே, ஏசு இறக்கவில்லை, அவர் இறந்து மறுபடி உயிர் பெற்று வரவில்லை. கல்லறையில் உயிருடன் தான் இருந்தார். அதே உயிருடன் தான் எழுந்து வந்திருக்கின்றார் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றன.