11) உங்களைப் போன்ற மனிதனே!

நூல்கள்: இணை கற்பித்தல் ஓர் விளக்கம்

இறைவனுடைய நேசர்களிலேயே மிகச் சிறந்த நேசர்களாகத் திகழ்ந்த நபிமார்கள், தங்களுடைய சமுதாய மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களாகவோ, இறைவனுடைய சில அம்சங்களைப் பெற்றவர்களாகவோ, அவர்களைப் பார்த்து மக்களெல்லாம் அரண்டு, பயந்து ஓடுகிற வகையிலோ அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கவில்லை என்பதை நாம் சென்ற இதழில் பார்த்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களும் மக்களிடத்தில் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது எல்லா சமுதாய மக்களுமே, “நீர் என்ன தூதர்? நீரும் எங்களைப் போல மனிதர் தானே!’ என்ற காரணத்தைச் சொல்லித் தான் ஏற்றுக் கொள்வதற்கு மறுத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து நபிமார்களும் மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர மந்திரவாதிகளாக இருக்கவில்லை என்பதைப் பார்த்தோம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மக்கள் தான் தூதர்களை, இவர்கள் தங்களைப் போன்று மனிதர்கள் தான் என்று கூறினார்கள் என்று பார்த்தால், சத்தியத்தை எடுத்துச் சொல்ல வந்த அத்தனை நபிமார்களுமே “நாங்கள் உங்களைப் போன்று மனிதர்கள் தான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதை நாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது.

(அல்குர்ஆன்: 14:11)

அந்த மக்கள், “நீங்களும் எங்களைப் போல ஒரு மனிதர் தான்’ என்று இறைத்தூதர்களை நோக்கிச் சொன்ன போது, அத்தூதர்கள், “நாங்கள் மனிதர்கள் அல்லர். நாங்கள் மந்திரவாதிகள்; நாங்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள்; அற்புத ஆற்றல் படைத்தவர்கள்’ என்று சொல்லாமல், அவர்களுடைய கூற்றுக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அவர்கள் கூறியதை இன்னும் உறுதிபடுத்தினர்.

ஆக, தூதர்களைப் பார்க்கின்ற மக்களுக்கும் அவர்கள் மனிதர்களாகத் தான் தென்படுகிறார்கள். அந்தத் தூதர்களும் மக்களிடம் சென்று, “நாங்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களாக உங்களிடத்தில் வரவில்லை; உங்களுக்கு மனிதன் என்ற முறையில் என்னென்ன காரியங்களை செய்ய முடியுமோ அதைப் போன்றே எங்களாலும் செய்ய இயலும்’ என்று சொன்னார்கள்.

இறைத் தூதர்களை மக்களும் மனிதர்கள் என்று சொன்னார்கள்; தூதர்களும் தங்களை மனிதர்கள் என்றே சொன்னார்கள் என்பதைப் பார்த்தோம். அது மட்டுமல்லாமல் இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வஹீயை அறிவித்த படைத்த இறைவனும் அவர்களை மனிதர்கள் என்று தான் சொல்கிறான். அவ்வாறு மக்களிடம் சொல்லுமாறும் கட்டளையிடுகிறான்.

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம்.

(அல்குர்ஆன்: 25:20)

உம்மை மட்டுமல்லாமல், உமக்கு முன்னால் அனுப்பிய எல்லாத் தூதர்களையும் உணவு உண்பவர்களாகவும், உணவுக்காகக் கடைவீதிகளுக்குச் சென்று உழைப்பவர்களாகவும் தான் அனுப்பியிருக்கிறோம்.

மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக, மந்திரத்தின் மூலம் உணவு வரவழைத்து அதை உண்பவர்களாக நாம் அனுப்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கட்டளையிடுகிறான்:

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:110)

அதே போல் நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றியும் இவ்வாறே இறைவன் கூறுகிறான். ஏனென்றால் ஈஸா நபியைப் பொறுத்த வரை அவரை ஓர் அற்புதர் என்று சொல்லலாம். அவர் தந்தை இல்லாமல் பிறக்கிறார்; அவரை அல்லாஹ் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி வானத்திற்கு உயர்த்துகிறான். பிற்காலத்தில் வானத்திலிருந்து இறந்து வந்து, பிறகு மரணிப்பார்.

இப்படி அவர்களுடைய பிறப்பு, இறப்பு இரண்டுமே அதிசயமாக இருக்கிறது. இது எந்த நபிமார்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு. இதனால் இவரை ஒரு சாரார் கடவுளாகவும், கடவுளின் குமாரர் என்றும் எண்ணி வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த அவர்களைப் பார்த்தும் இறைவன், அவர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் கிடையாது; இவரும் மனிதர் தான் என்று கூறுகிறான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (அல்குர்ஆன்: 5:75)

அவர் தந்தை இல்லாமலும் பிறந்தாலும், அவருடைய பிறப்பு அதிசயமாக இருந்தாலும் அவர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு இறைத் தன்மை உடையவராக இருக்கவில்லை. அவருக்கும் மற்ற மனிதர்களைப் போல் பசி இருந்தது. உணவின் பால் தேவையுடையவராக இருந்தார். பிறகு எப்படி அவரை நீங்கள் கடவுள் என்று சொல்லலாம்? என்று இவ்வசனத்தில் கூறுகிறான்.

உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை. (அல்குர்ஆன்: 21:8)

இதற்கு முன்னால் நாம் அனுப்பிய தூதர்களை உணவின் பக்கம் தேவையில்லாமல், உணவு உண்பதற்கு அவசியமில்லாத ஒரு விசித்திரமான, வித்தியாசமான உடலமைப்பு கொண்டவர்களாக அவர்களை நாம் ஆக்கவில்லை.

ஒருவரைக் கடவுள் என்றோ, மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்றோ சொல்வதாக இருந்தால் அவர் இவ்வுலகில் நிரந்தரமாக இருக்க வேண்டும். அவ்வாறு யாராவது இருக்கிறார்களா? அவர்களுடைய கப்ருகள் தான் இருக்கின்றன. இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கிறார்களோ அத்தனை பேருடைய கப்ருகள் தான் இருக்கின்றதே தவிர அந்த ஆட்கள் நிரந்தரமாக இருப்பதைக் காணோம். எப்போது ஒருவர் இறந்து, அடக்கம் செய்துவிட்டார்களோ அப்போதே அவர் நிரந்தரமானவர் கிடையாது; அவர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் கிடையாது; கடவுள் தன்மை கொண்டவரும் இல்லை என்று தெரிந்து விடுகின்றது.

மேலும் நபிமார்கள் மனிதர்கள் தான் என்பதற்கு அல்லாஹ் வேறொரு சான்றைக் கூறுகிறான். அதாவது ஆண்களாகப் படைக்கப்பட்டவர்களுக்கு ஜோடியை (பெண்ணை) வாழ்க்கைத் துணையாக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இறைநேசர்களுக்கு அவ்வாறு கிடையாது. அவர்கள் அதையெல்லாம் வென்றவர்கள் என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இன்றும் கூட சிலர் அவ்வாறு சொல்லிக் கொண்டு தன்னை ஞானி, மகான் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இறைவனோ, ஆணுக்குப் பெண் என்றும், பெண்ணுக்கு ஆண் என்றும் ஏற்படுத்தியிருக்கின்றான். இந்த அடிப்படையில் அத்தனை நபிமார்களுக்கும் நாம் வாழ்க்கைத் துணையை ஏற்படுத்தியிருக்கின்றோம் என்று வல்ல இறைவன் கூறுகிறான்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 13:38)

ஆக நபியாக இருந்தாலும் அவருக்கும் தாம்பத்ய உறவு என்பது தேவை. அவர் சந்தோஷமடைவதற்கு ஒரு துணை அவசியம். அவர் மனநிறைவு அடைவதற்கு பிள்ளைகள் அவசியம். எவ்வாறு மற்ற எல்லா மனிதர்களுக்கும் இது தேவையாக இருக்கிறதோ அதே போன்று நபிமார்களுக்கும் இது தேவையுடையதாக இருக்கிறது. இதனால் இவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ஆக, அல்லாஹ்வைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நபிமார்களாக இருந்தாலும் இறைநேசர்களாக இருந்தாலும் அவர்கள் பிறரைச் சார்ந்து இருக்கிறார்கள்; பிறரின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள்.

இத்தனை தேவையுடையவனாக மனிதன் இருக்கும் போது, எப்படி ஒருவரை மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்ல முடியும? மகான் என்று சொல்லி தனிப் பிறவிகளாக்க முடியும்? நம்மைப் போன்ற ஒரு மனிதர் என்று தான் சொல்ல வேண்டும்.

மகான்கள், அவ்லியாக்களைக் கண்டுபிடிக்க முடியாது என்பது தனி விஷயம். அப்படி கண்டுபிடித்தால் கூட அவர்களுக்கு விழா கொண்டாட வேண்டுமா? அவர்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமா? அவர்களிடம் நம்முடைய கோரிக்கைகளை வைக்கலாமா? கூடாது. ஏனென்றால் அவரும் நம்மைப் போன்ற மனிதராகத் தான் இருக்கிறார். அவருக்கு மனிதத் தன்மை இல்லாமல் கடவுள் தன்மை இருந்தது என்றால் அவரிடம் நம்முடைய கோரிக்கைகளை வைப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அவரும் வாழும் காலம் வரைக்கும் மனிதராகத் தான் வாழ்கிறார். இறக்கும் போது பிணமாகத் தான் இறக்கிறார்; மனிதராகக் கூட இல்லை. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

எல்லா நபிமார்களும் மக்கள் மத்தியில் மனிதராகத் தான் காட்சி தந்தார்கள். எந்த விதமான சோதனைகளுக்கு உட்படுத்திய போதும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட எந்த அம்சமும் அவர்களிடத்தில் காணப்படவில்லை. அந்த மக்களும் அவர்களை மனிதர்களாகத் தான் கருதினார்கள். அந்த நபிமார்களும் தங்களை அப்படித் தான் கருதினார்கள். அல்லாஹ்வும் அப்படித் தான் சொல்கிறான்.

இதைத் தவிர பல நபிமார்களுடைய வரலாற்றை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். அவர்களுடைய வரலாற்றை நாம் எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அவர்கள் செய்த பிரச்சாரம் தான் அதிகமாக இருக்கும். இன்றைக்கு சிலர் மகான், அவ்லியா வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்திருப்பது போல் கட்டுக்கதைகள் குர்ஆனில் இருக்காது.

அந்த மகான் அங்கு பிறந்தார். இன்னார் அவருடைய பெற்றோர்கள். இன்னார் அவருடைய பாட்டன்மார்கள். அவர் செய்த அற்புதங்கள் என்பது போன்று, கதைப் புத்தகத்தைப் படிப்பது போன்று குர்ஆனில் எந்த வரலாறும் சொல்லப்படவில்லை. அந்த நபிமார்கள் எவ்வாறு சத்தியத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். அவ்வாறு எடுத்துச் சொன்ன போது எத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்தார்கள். அந்த எதிர்ப்புகள், பிரச்சனைகளின் போது எந்த மாதிரியான வழிமுறைகளைக் கையாண்டார்கள் என்ற வரலாறைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அனைத்து வரலாறுகளையுமே இறைவன் மக்களுக்குப் படிப்பினையாகவும், முன்மாதிரியாகவும் ஆக்குவதற்காக அந்த வரலாறுகளைச் சொல்கிறான். மேலும் பிரச்சாரம் அல்லாமல், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களையும் நமக்குப் படிப்பினையாக இருந்தால் அதையும் சொல்வான். அந்த மாதிரி சில நபிமார்களுடைய சம்பவங்களையும் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

அதில் ஜக்கரியா (அலை) அவர்களும் ஒருவர். இவரும் நபிமார்களில் சிறந்த நபி. இவர் யஹ்யா நபியுடைய தந்தை ஆவார். மர்யம் (அலை) அவர்களை எடுத்து வளர்த்தவர்கள். இவர்கள் அனைவருமே ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்களாவர். இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இந்த நபிக்கும் மற்ற மனிதர்களைப் போன்று குழந்தைப் பாசம் இருந்தது. நமக்கு இத்தனை வயதாகியும் குழந்தை பாக்கியம் இல்லையே என்ற ஏக்கமும் இருந்தது. இதைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப் பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 19:3)

“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். (அல்குர்ஆன்: 21:89)

இவ்வாறு அவர்கள் இறைவனிடத்தில் பிரார்த்தித்த போது “நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 15:53)

“ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (என இறைவன் கூறினான்) (அல்குர்ஆன்: 19:7)

யஹ்யா என்ற பெயரைக் கொண்ட ஒரு குழந்தையை அவருக்கு இறைவன் நற்செய்தியாகச் சொல்கிறான். ஆனால் அவரால் இதை நம்ப முடியவில்லை. அவர் தான் இறைவனிடத்தில் குழந்தையை தா என்று கேட்டார். அவன் நினைத்தால் இந்தப் பருவத்தில் கூட குழந்தை பாக்கியத்தைத் தருவான் என்று நம்பியும் இருந்தார். ஆனால் அவ்வாறு நம்பியிருந்தும் இறைவனிடத்தில் அதற்கான சான்றைக் கேட்டார்.

“இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!” என்று அவர் கேட்டார். அதற்கு இறைவன் அத்தாட்சியாக “மூன்று நாட்கள் மக்களிடம் சைகையாகவே தவிர உம்மால் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்று. உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும் மாலையிலும் துதிப்பீராக!” என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன்: 3:41)

இதை நாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால் மிகப் பெரிய இறைநேசர் ஜக்கரியா நபியவர்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வழங்கியிருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு நபிக்கு இத்தனை ஆண்டுகளாக பிள்ளைகளை வரம் இல்லாமல் இருந்திருக்கிறார். இவருக்கு ஆற்றல், கடவுள் தன்மை இருந்திருந்தால் குழந்தை பாக்கியத்தைத் தானாக உண்டாக்கியிருக்க வேண்டியது தானே? ஆனால் அவரால் முடியவில்லை. அதிலும் குறிப்பாக அவருக்கே பிள்ளை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், அவரால் பிறருக்குப் பிள்ளை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா? இறைவனும் அந்த ஆற்றலைக் கொடுக்கவுமில்லை.

மாறாக, அவர்கள் இறைவனிடத்திலே நம்பிக்கை வைத்து அவனிடத்திலேயே மன்றாடினார்கள். இவ்வாறு இருக்கையில் நாம் இன்று எந்த சக்தியும் இல்லாத, பேசாத, பிறர் பேச்சைக் கேட்காத இறந்து போனவர்களிடம் சென்று குழந்தையைத் தா என்று கேட்கிறோமே! அப்படி நபிமார்களிடம் இல்லாத சிறப்பு என்ன இவரிடத்தில் இருக்கிறது? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

ஆக, எந்த நபிமார்களுக்கும் அல்லாஹ் தனக்குள்ள அதிகாரத்தை வழங்கவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். அவர்களால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூடப் போக்க முடியாமல் இறைவனிடத்தில் தான் முறையிட்டார்கள். இதை அல்லாஹ் நமக்கு குர்ஆனில் கூறக் காரணம், நாமும் இதைப் போன்று ஈமானில் உறுதி மிக்கவர்களாக வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.