10) பறந்து வந்த பலூன்களும் பயந்து ஓடிய ஒட்டகங்களும்
மதீனாவிற்கு உள்ளே வந்த மதம் மாறிய கூட்டத்தை ஊருக்கு வெளியே விரட்டி அடித்தது மட்டுமல்ல, அவர்களை வேரறுக்கவும் முடிவு கட்டி, அபூபக்ர் (ரலி) ஜமாதுல் ஆகிரா மாதத்தில் ஒரு படையெடுப்பை நடத்தினார்கள். எல்லைப் புறத்தில் நின்ற படைத் தளபதிகள், மதீனாவாசிகள் அடங்கிய படையுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் மதீனாவுக்குள் வந்த மதம் மாறிய அரபியர்களை நோக்கிச் சென்றார்கள்.
அப்துல் கிளையார், முர்ரா கிளையார், துய்பான் ஆகியோர் அவர்களுக்குத் துணை புரிந்த கிளாளா கிளையார் ஆகியோருடன் அபூபக்ர் (ரலி) அவர்களின் படை மோதத் தயாரானது. இவர்களுக்கு உதவியாக முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட தலீஹா என்பவன் தனது தம்பி மகன் ஹிபாவை அனுப்பி வைத்திருந்தான்.
இரண்டு அணியினரும் மோதவிருக்கும் வேளையில் அபூபக்ர் (ரலி)யுடன் அணி வகுத்து வந்த ஒட்டகங்களின் முகங்களுக்கு நேராக எதிரிகள் பலூன்களைப் பறக்க விட்டனர். இந்தப் பலூன்கள் கொழுப்புப் பைகளால் ஆனவை! எதிரிகள் இந்தப் பைகளில் காற்று ஊதி உப்ப வைத்து மலைகள் மீதிருந்து கொண்டு உருட்டி விட்டனர். இந்தப் பலூன்கள் ஒருவிதமான ஓசை எழுப்பிக் கொண்டு, ஒட்டகங்களின் முகங்களை நோக்கி வரவே அவை கண், மூக்கு தெரியாமல் கலைந்து ஓட ஆரம்பித்தன!
பொதுவாக ஒட்டகங்கள் எதைக் கண்டும் கலைவதில்லை. ஆனால் இநதக் கொழுப்புப் பைகளைக் கண்டால் காட்டுத் தனமாக விரண்டு ஓடும்! எதிரிகள் இந்த யுக்தியைக் கையாண்டு ஒரு தற்காலிக வெற்றியைக் கண்டு விட்டனர். காரணம் கலைந்து ஓடிய ஒட்டகக் கூட்டம் மதீனாவுக்குத் திரும்பி விட்டது.
கலைந்தோடிய ஒட்டகங்களில் பயணித்த முஸ்லிம்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகாதவாறு அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான். எதிர்பாராத இந்த நிகழ்வால் முஸ்லிம்கள், தாங்கள் தோல்வி அடையப் போகின்றோம் என்று கவலைப் பட்டனர். ஒட்டகங்கள் கலைந்து ஓடியதைக் கண்ட எதிரிகள், இன்னும் அதிகமான பலூன்களை பறக்க விடுவதற்காக கொழுப்புப் பைகளைக் கொண்டு வரும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.
விரக்தியடையாத வீரத்திருமகன்
அபூபக்ர் (ரலி) அவர்களோ கலையாமல், நிலை குலையாமல் உறுதியாக களத்திலேயே அன்றைய இரவைக் கழிக்கின்றார்கள். மக்களை உற்சாகப் படுத்தி ஒருவாறாக இரவின் கடைசி வேளையில் மக்களைப் போருக்காகப் புறப்படச் செய்தார்கள். தன் வலது பக்கத்தில் நுஃமான் பின் முக்ரினையும், இடது பக்கம் அப்துல்லாஹ் பின் முக்ரினையும் தனக்குப் பின்னால் சுவைத் பின் முக்ரினையும் தளபதிகளாக நிறுத்திய வண்ணம் போரைத் துவக்கினார்கள்.
ஃபஜ்ர் நேரம் உதயமாகவில்லை. ஆனால் அதற்குள்ளாக இரண்டு அணியினரும் போராட்டக் களத்தில் சந்தித்தனர். முஸ்லிம்களின் காலடி ஓசை காதில் விழுந்தது தான் தாமதம், எதிரிகள் தாங்கள் ஏந்திய ஆயுதங்களைப் போட்டு விட்டு, களத்தை விட்டு ஓட்டமெடுத்தனர்.
சூரியன் தன் சுடர் முகத்தைக் காட்டுவதற்கு முன்னாலேயே பகையாளிகள் புறமுதுகிட்டு ஓடினர். சோதிடக்காரன் தலீஹாவின் சகோதரன் மகன் சுற்றி வளைக்கப் பட்டு கொல்லப் பட்டான். ஓடுகின்றவர் ஓடட்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் விட்டு விடாமல் தில்கிஸ்ஸா என்ற இடம் வரை அவர்களைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்தார்கள். தில்கிஸ்ஸாவில் கூடாரமடித்துத் தங்கி தன் படை பலத்தை நிலை நாட்டிக் காட்டினார்கள். இது ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள், மதம் மாறியவர்களுக்கு எதிராக நடத்திய முதல் போரில் கண்ட வெற்றியாகும்.
இணை வைத்தவர்கள் அடைந்த இழிவு
ஜகாத்தைக் கொடுக்க மாட்டோம் என்று சமர் புரிய வந்த இணை வைப்பவர்கள் இழிவைத் தழுவினர். முஸ்லிம்கள் கண்ணியமடைந்தனர். இப்படிப் பட்ட ஒரு சூழலில் துய்பான் கிளையினர், அப்ஸ் கிளையினர் தங்கள் பகுதியிலிருந்த முஸ்லிம்களைக் கொலை செய்தனர். இவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் இதே நடைமுறையைப் பின்பற்றினர். இப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களைக் கொன்றவர்களைப் பழிவாங்காது விட மாட்டேன் என்று சபதமேற்று மதீனாவை நோக்கி வெற்றி வாகையுடன் திரும்பினார்கள். கவலைப்பட்ட முஸ்லிம்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். மதீனா நகர் மீதுள்ள பழைய மரியாதை மீண்டும் மதீனாவைச் சுற்றி வாழும் மக்களிடம் மலர்ந்தது.
ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று புரட்சி செய்த மக்களின் கொட்டம் அபூபக்ர் (ரலி) அரசாங்கத்தின் போர்ப் பிரகடனம் மூலம் அடக்கப் பட்டதால் அது வரை நிலுவையாக நின்ற ஜகாத் நிதியாதாரங்கள் இரவு நேரங்களிலேயே ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவை நோக்கி அணி வகுத்து வர ஆரம்பித்து விட்டன.
“ஜகாத் வசூல் அதிகாரியான ஸவ்பான், ஜகாத் தொகையுடன் வருகின்றார்’ என்று எல்லைப் புற இராணுவத் தளபதி ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நன்மாராயம் கூறினார்கள். நன்மாராயம் கூறப்பட்ட ஸவ்பான் இரவின் முற்பகுதியில் மதீனாவுக்கு வருகையளித்தார்.
இது போல் “ஜகாத் தொகையுடன் ஸப்ரிகான் வருகின்றார்’ என்று எல்லைப்புற இராணுவத் தளபதிகளில் ஒருவரான அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) நன்மாராயம் கூறினார்கள். ஸப்ரிகான் நடு இரவில் வருகையளித்தார். “அதிய்யி பின் ஹாதம், ஜகாத் தொகையுடன் வருகின்றார்’ என்று எல்லைப்புற இராணுவ அதிகாரியான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நன்மாராயம் கூறினார்கள். அவர் கடைசி இரவில் வருகையளித்தார்.
இப்படி புரட்சியாளர்கள் அடக்கப்பட்டு, அவர்களின் போர் முழக்கங்கள் ஒடுக்கப் பட்டு, ஷரீஅத்தின் முக்கியக் கூறான ஜகாத் சட்டம் தனக்குரிய இடத்தை மீண்டும் பெற்றுக் கொண்டது. இருப்பினும் புரட்சியாளர்களுக்கு எதிரான அபூபக்ர் (ரலி)யின் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. இப்போது அவர்கள் புரட்சியாளர்களின் முக்கியக் கூடாரமான தில்கிஸ்ஸாவை நோக்கிப் புறப்படுகின்றார்கள்.
தில்கிஸ்ஸாவை நோக்கி ஆட்சித் தலைவர் தானே நேராகக் கிளம்பும் போது, அலீ (ரலி) மற்றும் மற்ற நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி)யிடம், “தாங்கள் போர்க் களத்திற்குச் செல்ல வேண்டாம். மதீனாவில் உள்ள ஆட்சிப் பொறுப்பைக் கவனியுங்கள். படைக்குத் தலைமை தாங்கிச் செல்ல தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமியுங்கள்’ என்று வேண்டினர். அதற்கு அபூபக்ர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று மறுக்கின்றார்கள். நானே நேரடியாக இந்தப் போருக்குச் செல்லப் போகின்றேன் என்று பிரகடனப் படுத்துகின்றார்கள்.
இந்தக் கட்டத்தில் உஸாமா (ரலி) வெற்றிகரமாக தன் பணியை முடித்து விட்டு மதீனா திரும்புகின்றார்கள். இந்நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் இறந்த அறுபதாம் நாள் நடைபெறுகின்றது. திரும்பி வந்த உஸாமாவையே மதீனாவின் ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்குமாறு நியமித்து விட்டு, தன் பயணத்தைத் தொடருகின்றார்கள். ஏற்கனவே தன்னுடன் போருக்கு அழைத்துச் சென்ற நுஃமான் பின் முக்ரின், அப்துல்லாஹ் பின் முக்ரின், சுவைத் பின் முக்ரின் ஆகியோருடன் அபூபக்ர் (ரலி) கிளம்புகின்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள் தடுத்தது குறித்து இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது:
தில்கிஸ்ஸா என்பது மதீனாவிலிருந்து 14 மைல் தொலைவில் அமைந்திருக்கின்றது. உருவிய வாளுடன் தில்கிஸ்ஸாவை நோக்கிப் புறப்படும் போது, தன் வாகனத்தில் ஏறி அதன் கடிவாளத்தைப் பிடித்து அமர்ந்ததும் அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் பிரதிநிதியே! தாங்கள் எங்கு செல்கின்றீர்கள்?” என்று கேட்கின்றார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹத் தினத்தன்று “உன் வாளை உறையிலிடுக! உனக்கு இடர் ஏற்படுவதன் மூலம் எங்களை சங்கடத்தில் ஆழ்த்தாதே! (சென்று நல்ல நிலையில்) மதீனாவுக்குத் திரும்புக! உனக்கு ஒன்று நேரிட்டால் அது ஒரு போதும் இஸ்லாமியக் கட்டமைப்புக்கு உகந்ததாக ஆகாது’ என்று கூறியதையே நான் கூறுகின்றேன்” என்று கூறினார்கள். (நூல்: தாரகுத்னீ)
அலீ (ரலி) அவர்களும் அபூபக்ர் (ரலி)யுடன் சேர்ந்து கிளம்பி ரிப்தா என்ற ஊர்வாசிகளிடம் அப்ரக் என்ற இல்லத்தில் தங்குகின்றார்கள். அங்கு அப்ஸ் மற்றும் துய்பான், கினானா கிளையின் ஒரு சாராருடன் அபூபக்ர் (ரலி) தலைமையிலான படை மோதுகின்றது. இப்போரில் ஈடுபட்ட ஹாரிஸ் மற்றும் அவ்ஃபை அல்லாஹ் தோற்கடிக்கிறான். ஹதீஆ என்ற கிளையார் சிறைபிடிக்கப் படுகின்றார்கள். அப்ஸ் மற்றும் பக்ர் (துய்பான்) கிளையினர் ஓடி விடுகின்றனர். துய்பான் படையினரை அபூபக்ர் (ரலி) அவர்களின் படை வெற்றி கொள்கின்றது. இனி மேல் துய்பான் கிளையினர் ஒரு போதும் இந்த ஊரில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று முழங்குகின்றார்கள்.
தப்பிச் சென்ற அப்ஸ் மற்றும் துய்பான் கிளையினர் சோதிடக்காரன் தலீஹாவின் அரவணைப்பில் இணைகின்றனர். அப்போது அவன் புஸாகா என்ற ஊரில் தங்கியிருந்தான். இக்கால கட்டத்தில் அபூபக்ர் (ரலி) அப்ரகில் தங்கியிருந்து முஸ்லிம்களின் குதிரைப் படைகளை நிறுத்தி அதைக் காத்தார்கள். அத்துடன் அருகிலுள்ள ரிப்தா என்ற பகுதியைச் சேர்ந்த ஊர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து காத்தார்கள். இவ்வாறு தில்கிஸ்ஸாவை நோக்கிச் சென்று மாபெரும் வெற்றியைப் பெற்று மதீனாவை நோக்கித் திரும்பும் முன் அங்கிருந்து 11 பேர்கள் தலைமையில் 11 படைகளை அனுப்புகின்றார்கள்.
1. காலித் பின் வலீத் அவர்களை தலீஹா மற்றும் மாலிக் பின் நுவைராவுக்கு எதிராகவும்,
2. இக்ரிமா பின் அபீஜஹ்ல் அவர்களை முஸைலமாவுக்கு எதிராகவும்
3. ஷுர்ஹபீல் பின் ஹஸனாவை இக்ரிமாவுக்கு உதவியாக அவரைப் பின்தொடர்ந்து செல்வதற்காகவும்
4. முஹாஜிர் பின் உமைய்யாவை அன்ஸி, மஆனதில் அன்பா, கைஸ் பின் மக்ஷுஹுக்காகவும்
5. காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸை சிரியாவின் ஆட்சியாளர்களுக்காவும்
6. அம்ர் பின் அல்ஆஸ் அவர்களை குளாஆ, வதீஆ, ஹாரிஸ் ஆகியோருக்காகவும்
7. ஹுதைபா பின் மிஹ்ஸன் அல்கல்பானியை தபாவாசிகளுக்காகவும்
8. அரபஜாவை மஹ்ராவுக்காகவும்
9. துரைபாவை சுலைம் மற்றும் ஹுவாஸான் கிளையாருக்காகவும்
10. ஸுவைத் பின் முக்ரினை யமனுக்காகவும்,
11. அலா பின் ஹள்ரமியை பஹ்ரைனுக்காகவும்
ஆக மொத்தம் 11 பேர்கள் தலைமையிலான படைகளை அபூபக்ர் (ரலி) அனுப்பி வைத்தார்கள். இதன் பின்னர் தான் மதீனாவுக்குத் திரும்பினார்கள்.