10) நோன்பின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள்
இறைநம்பிக்கை கொண்டோரே உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.
இஸ்லாமிய வணக்கங்களில் நோன்பு மிக முக்கியமானதாகும். ரமலான் மாதத்தில் கடமையாக்கப்பட்ட நோன்பு மற்றும் பல சுன்னத்தான நோன்புகளும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய நோன்பை நோற்பதன் மூலமாக ஒரு முஸ்லிமிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
இறைநம்பிக்கை கொண்டோரே உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்: 2:18) ➚
மகத்தான கூலி பெற்றத் தரும் நோன்பு நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது அதற்கு நானே நற்பலன் அளிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். நூல்: (புகாரி: 1904)
நபி (ஸல்) கூறினார்கள்: சண்டையில் உங்களில் ஒருவரின் கேடயம் (காப்பதைப்) போன்று நோன்பு நரகத்திலிருந்து (காக்கும்) கேடயமாகும்.
நூல்: (அஹ்மத்: 15687)
இன்னும் பல சிறப்புகள் நோன்பிற்கு உண்டு. இத்தகைய நோன்பின் போது கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் குறித்து குர்ஆன், ஹதீஸில் தெளிவாக வழிகாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியர்கள் நோன்பை முன்னிட்டு பல விதமான பித்அத்தான காரியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
»ஸஹ்ர் நேரத்தை முற்படுத்துதல்.
»நோன்பு திறக்கும் நேரத்தை தாமதப்படுத்துதல்.
»ஸஹ்ர் செய்த பின் நவைத்து ஸவ்ம கதின் என்ற நிய்யத்தைக் கூறுதல்.
»நோன்பு திறக்கும் முன் அல்லாஹும்ம லக ஸும்து என்ற துஆவை ஓதுதல்.
»விடி ஸஹ்ர் செய்தல்.
»பிறைத் தகவல் கிடைத்தும் டவுன் ஹாஜி அறிவிக்க வில்லை என்று கூறி நோன்பு நோற்க மறுத்தல்.
»பிறைத் தகவல் கிடைத்தும் டவுன் ஹாஜி அறிவிக்க வில்லை எனக்கூறி பெருநாளில் நோன்பு நோற்றல்..
»ரமலான் 27 ஆம் நாளை மட்டும் லைலத்துல் கத்ர் என்பது.
»பராஅத் நோன்பு .
»மிஃராஜ் நோன்பு. இன்னும் இது போன்ற பல பித்அத்தான காரியங்களை நோன்பின் பெயரால் மக்கள் அரங்கேற்றி வருகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: (புகாரி: 2697)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : நஸாயி 1560
பி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி) நூல்: (அஹ்மத்: 16519)
(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ( பித்அத்தான) காரியங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் பித்அத். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி) நூல் : (அஹமத்: 17184)
நபி (ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் மக்கள் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுக்கப்படும் என்று எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.
தவறான புரிதலின் அடிப்படையிலும் இவ்வாறு செய்வதற்கு அதிக நன்மை கிடைக்கும் என்று எண்ணியும் தான் நோன்பு தொடர்பான பித்அத்தான காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர். இது தவறாகும். இதை விட்டும் மக்கள் விலகிட வேண்டும். எனவே மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக