10) சமகால சூழல்

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

போலிப் புகழுரைகளில் தலைவர்கள் மயங்கிக் கிடப்பதும், புகழ்பாடித் திரிகின்ற அத்தகைய இரட்டை வேடக்காரர்களை பொறுப்புகளில் அமர்த்தி மகிழ்வதும் பொது வாழ்வைப் பொய்களின் புகலிடமாக ஆக்கியுள்ளன.

சுவரொட்டிகளும், வண்ண விளம்பரங்களும், பார்வையை மிரள வைக்கும் பதாகைகளும், கட் அவுட்களும் எத்தகைய செய்தியினை இந்த சமூகத்திற்கு சொல்கிறது? தலைவர்களையும், தமது மனங்கவர்ந்த நடிகர்களையும் துதி பாடுவதற்காகத் தொண்டர் கூட்டம் செய்கின்ற மாபெரும் பொருட் செலவை ஒழித்து, அவற்றை மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட இன்றைய வருவதில்லை. அரசியல் பெருந்தலைவர்களுக்கு மனம்

சுயநலனை மையமாக கொண்டு, அரசியல் அங்கீகாரத்திற்காக சமீப காலங்களில் உருவான கட்சிகள் மட்டுமல்லாமல், சுயமரியாதை இயக்கத்தின் வார்த்தெடுப்பு என சொல்லிக் கொண்டு, இந்த மண்ணில் மலர்ந்த திராவிட இயக்கங்களிலும் கூட இத்தகையசுயமரியாதை கடும் அவஸ்தையை அனுபவிப்பது வேடிக்கை.

கடவுளின் பெயரால் மனிதனின் சுயமரியாதை காவு கொடுக்கப்படுவதை எதிர்ப்பதற்காக, கடவுளே இல்லை என முழங்கினர். இந்த முழக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக, அங்கே மனிதனே கடவுளாகிப் போன அவல நிலையை காண்கிறோம்.

பெரியாருக்கு அஞ்சலி, அவரது சமாதியில் வழிபாடுகள்.. என கடவுளே இல்லை என முழங்கிய இவர்களது வழிகாட்டியே இவர்களின் மறைமுக கடவுளாகி போனது தான் இத்தகையோரின் பரிதாப நிலையாக இருக்கின்றது.

சினிமா கூத்தாடிகளெல்லாம் கண் கண்ட தெய்வம்.., கட்சித் தலைவர்களெல்லாம் இதய தெய்வங்கள்.. இப்படி தானே இன்றைய சமூகத்தின் அவல நிலை சந்தி சிரிக்கிறது?

ஆன்மீக போதனைகள் என்பது மக்களை நன்னெறிப்படுத்துவதற்காகவும், கெட்ட செயல்களிலிருந்து மனிதர்கள் தவிர்ந்து வாழ வழிகாட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்கிற நிலை மாறி, இன்று அதுவே மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கான ஊடகமாகமாறி வருகிறது.”

எதற்கும் பயந்தவர்களாக, வரும் துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கத் தெரியாதவர்களாக, அனைத்திற்கும் ஆறுதல் தேடும் மனங்களைக் கொண்ட மனிதன், கடைசியில் வந்து சேருவது இறை வழிபாட்டில் மட்டுமே.

இதில் தற்போது ஒரு படி மேலே சென்று, குறி சொல்பவன். கைரேகை பார்ப்பவன், ஜாதகம் கணிப்பவன், கிளி ஜோசியம் பார்ப்பவன், கணிப்பொறியில் ஜாதகம் கூறுபவன், ராசிபலன் கூறுபவன், “வெறும் கையில்” திருநீரு வரவழைக்கும் வித்தை கற்றவன், என ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுவோரிடம் அதிகம் தஞ்சம் புகுந்து தனக்கு வந்த சோதனைகளைத் தீர்க்க வழி தேடுகின்றனர்.

பாமர மனிதனை விட மாறுபட்ட ஆடை அமைப்பையோ, நடை, உடை, உடல் மொழிகளையோ அல்லது மாறுபட்ட வாழ்க்கை முறையையோ ஒருவர் கொண்டிருந்தால் அவரை மனிதர்களுல் புனிதர்கள் என எண்ணத் துவங்கி விடுவது மனிதர்களின் பலிகிகனங்களுல் ஒன்று.

இந்த மடமையான புரிதல்களை கொள்வதில் எந்த மதத்தை சார்ந்தவர்களும் சளைத்தவர்களில்லை.

சாமியார்கள் என்கிற பெயரால் இந்துக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால், தர்கா, அவ்லியா எனும் பெயரால் முஸ்லிம்களும் ஏமாற்றப்படுகிறார்கள். ஏசு குணமாக்குகிறார் எனும் பெயரல் குருடர்களை பார்க்க செய்கிறோம், முடவர்களை நடக்க செய்கிறோம் என நிகழ்ச்சிகள் நடத்தி கிறுத்தவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.

மனிதன் எந்த நிலையிலும் அவன் மனிதனாக தான் இருப்பானேயொழிய, அவனுடைய நடை, உடை பாவனைகளோ, மாறுபட்ட தோற்றங்களோ, ஒருவனை இறைத்தன்மை பெற்றவனாக ஒரு போதும் ஆக்கி விடாது என்பதை அழுத்தமாக இஸ்லாம் இவ்வுலகிற்கு சொல்கிறது.

இந்த நம்பிக்கையில் உறுதியில்லாத பாமரர்களின் அத்தகைய அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி பணத்தையும், பெண்களின் கற்பையும் சூறையாடுவதற்கெனவே ஆன்மீகம் எனும் பெயரால் பலமோசடி கூட்டங்கள் நம் சமூகத்தில் செயலாற்றி வருவதைப் பார்க்கிறோம்.

தர்க்காக்களை கட்டி வைத்துக் கொண்டு, இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் உங்கள் கஷ்டங்களை குணமாக்குவார், எனவே தர்காவுக்கு காணிக்கை செலுத்துங்கள் என மூளை சலவை செய்யப்படுகிறது.

இறந்தவரால் எப்படி நம் கஷ்டங்களை தீர்க்க முடியும்? உயிருடன் இருப்பவர்கே கடவுள் தன்மை இல்லை எனும் போது இறந்து மண்ணோடு மண்ணாக போய் விட்ட ஒருவரால் எப்படி அந்த நிலையை அடைய முடியும்? என்கிற சாதாரண சிந்தனை கூட இத்தகைய சுரண்டலிலிருந்து மனிதனை விடுபட உதவி விடும்.

ஆனால், அடிப்படை சிந்தனை கூட இல்லாத பல மக்கள், தர்காவில் சென்று தங்கள் அறிவை அடகு வைப்பதோடு, பொருளாதாரத்தையும் கொட்டிக் கொடுக்கின்ற இழிவான நிலையை பார்க்கிறோம்.

இதே நிலை எல்லா மதங்களிலும் காணப்படுகிறது.

நமக்கு வரும் துன்பங்கள் காலப்போக்கில் தானே சரியாகிவிடும். காரணம் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயற்கை.

இந்த உண்மை அறியாதவர்கள், சாமியார்களிடம் சென்று தனது பிரச்சனைகளைக் கூற, இவர்களும் வந்துவிட்டார்களே என்று தனக்குத் தெரிந்த, தெரியாத பரிகாரங்களைக் கூற, வந்தவரும், பரிகாரம் செய்ய இறுதியில் சில காலத்திற்குப் பின் வந்தவரின் பிரச்சனை தானாகவே தீர்ந்து விடுவதால் அந்த சாமியாரிடம் சென்றேன் என் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று சாமியார் நிறுவனத்திற்கு விளம்பரதாரராக வந்தவர் மாறி விடுகிறார்.

காலப்போக்கில் அந்தச் சாமியாரின் புகைப்படமானது மக்களின் பூஜை அறையில் இடம் பெறும்.

இப்படி நம்மைப் போல் இருக்கும் ஒரு மனிதரை வழிபட, மக்கள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டனர்.

இதன் பலன்களை அறுவடை செய்து சுகமாக வாழ்பவர் சாமியார்கள் அல்லது அத்தகைய போலி ஆன்மீகவாதிகள்.

மக்களை ஆன்மீகத்தின் பெயரால் உயர்த்தப் போகிறோம், என்று சொல்லிக் கொண்டு சுரண்டலிலும், ஊழலிலும் ஈடுபட்டு கோடி கோடியாக செல்வம் சேர்க்கக் கூடியவர்கள் முதல், தனக்கு இறைசக்தி இருக்கிறது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பேன், ஒன்றுமில்லாதவற்றிலிருந்து மோதிரம் எடுத்து தர என்னால் முடியும் என்றெல்லாம் மக்களின் அறிவை மழுங்கச் செய்வோரிலிருந்து, தங்களிடம் வரும் பெண்களை தங்கள் காம இச்சைக்கு பயன்படுத்துவோர் வரை ஆன்மீகத்தின் பெயரை சொல்லி சமூகத்தில் மோசடியான பல காரியங்களில் ஈடுபடுவோரின் பட்டியல் மிக நீளம்.

அதே போன்று, நாங்கள் ஜெபம் செய்தால் குருடர்களுக்கு காட்சி கிடைத்து விடும், முடவர்களுக்கு நடக்கும் ஆற்றல் கிடைத்து விடும் என சொல்லி, ஏற்கனவே பயிற்சியின் மூலம் தயாரித்து வைக்கப்படும் நடிகர்களைக் கொண்டு பொது மக்களின் மூளையை சலவை செய்து பணம் பறிக்கும் கூட்டமும் இருக்கத் தான் செய்கின்றன.

இது போன்ற பித்தலாட்டங்களுக்கு பாமரர்கள் பலிகடாவாக ஆவதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன.

அறியாமை, கடவுட் தன்மை பற்றிய சரியான புரிதலின்மை, பேராசை, வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சகித்துக் கொள்ள இயலாமை போன்ற பல காரணங்களால் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் தங்கள் வாழ்வை தொலைக்கிறார்கள்.

இஸ்லாம் இதற்கு தெளிவான தீர்வை சொல்கின்றது.

உலகில் மனிதர்கள் எதிர்கொள்கின்ற எந்த வகையான நிகழ்வாக இருப்பினும், அவை நன்மையானவைகளாக இருந்தாலும், தீமைகளாக இருந்தாலும் அனைத்துமே நம்மை படைத்த இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்பதை அடிப்படையில் நாம் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வை விட்டுவிட்டு, உமக்கு நன்மையோ, தீமையோ செய்ய இயலாதவற்றை நீர் பிரார்த்திக்காதீர்! அவ்வாறு நீர் செய்தால் அப்போது அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்! அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.

(அல்குர்ஆன்: 10:106-107)

இந்த நம்பிக்கை ஆணிவேராக பதிகின்ற போது தான் அத்தகைய நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நாம் விரும்பினால் அதை அந்த இறைவனிடத்திலேயே எதிர்பார்ப்போம்.

சிரமங்களை தர வல்லமை பெற்ற இறைவனுக்கு அதை போக்கிடவும் வல்லமை இருக்கிறது என்பதை இரண்டாவதாக நம்ப வேண்டும்.

சர்வ வல்லமை பெற்ற இறைவனுக்கு இடைத்தரகர்கள் என எவரும் இல்லை, எவராலும் அந்த இடத்தை அடைய முடியாது, அதற்கான தேவை இறைவனுக்கு இல்லை எனபதை மூன்றாவதாக நம்ப வேண்டும்.

அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல! எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20-21)

என்னை எப்படி என் இறைவன படைத்தானோ அதே போன்ற இந்திரியத்தால், மண்ணால் தான் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவரும் படைக்கப்பட்டார்.

என்னைப் போன்று தான் ஆன்மீகம் பேசுகிற அனைவருமே படைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆன்மீகத்தில் கரைகண்டவர்கள் எனக்காக இறைவனிடத்தில் பரிந்துரை செய்வார்கள் என்றால், என்னை இறைவனுக்கு நேரடியாக தெரியாது, அந்த ஆன்மீகவாதி தான் இறைவனிடத்தில் என்னைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டியிதிருக்கிறது என்கிற பாரதூர நம்பிக்கை அங்கே வந்து விடுகிறது.

இவ்வாறான நம்பிக்கை இறைவனின் தகுதியை குறைப்பது என்பதை விளங்கிக் கொண்டால் இறைவனுக்கு இடைத்தரகர் என்கிற பேச்சுக்கே இடமளித்திருக்க மாட்டோம்.

இறைவனுக்கு எவரைப் பற்றியும் வேறு எவரும் அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை. காரணம், இறைவன் அனைவரையும் அறிந்தவன், அனைத்தையும் தெரிந்தவன்.

மேலும், நமது சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும் மிக மிக அருகாமையிலேயே இறைவன் இருப்பதாக திருக்குர்ஆன் நமக்கு போதிக்கிறது.

(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டு, என்னையே நம்பட்டும்” (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!)

(அல்குர்ஆன்: 2:186)