10) குழந்தைகளின் நலம் நாடுதல்
குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் மாபெரும் அருள். ஆகவே குழந்தைகளை பெற்றோர் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் இருக்க முடிந்தளவு தக்க ஏற்பாடுகளை செய்வதோடு, அவர்களுக்கு அனைத்திலும் நல்வழி காட்ட வேண்டும்; நல்லொ ழுக்கங்களை போதிக்க வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அவர்களுக்கு இடையே பாகுபாடு பார்க்க கூடாது.
நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். “நான் சஅத் பின் கவ்லா (எனும் தோழர்) இறந்ததைப் போன்று நாடு துறந்து சென்ற இந்த மண்ணி லேயே (மக்காவிலேயே) இறந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக! இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக!” என மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.
நான், ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டுமே (இப்போது) வாரிசாக வருகிறாள். ஆகவே, என் செல்வங்கள் அனைத்திலும் (அவை அறவழியில் செலவிடப்பட இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்’ என்றார்கள். நான் ‘மூன்றில் இரண்டு பாகங்களில் (இறுதி விருப்பம் தெரிவித்து விடட்டுமா)?” என்று கேட்டேன்.
அதற்கும் ‘வேண்டாம்’ என்றார்கள். அவ்வாறாயின் பாதியிலாவது (இறுதி விருப்பம் தெரிவித்து விடட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கும் ‘வேண்டாம்’ என்று சொன்னார்கள். அவ்வாறாயின் மூன்றில் ஒரு பாகத்திலேனும் (இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘மூன்றில் ஒரு பாகமா! மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து (பிறருக்கு) ஈவதும் ஈகைதான். நீர் உம்முடைய குடும்பத்தாருக்கு வழங்கும் செலவுத் தொகையும் ஈகைதான். உமது செல்வத்திலிருந்து உம்முடைய துணைவி உண்பதும் ஈகைதான். நீர் உம்முடைய வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட (பொருளாதார) நலத்துடன் (அல்லது நல்ல நிலையில்) விட்டுச்செல்வதே சிறந்ததாகும்” என்று கூறினார்கள். கையேந்தும் நிலையில்’ என்று கூறும்போது) தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல் : (முஸ்லிம்: 3352)
என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காத வரையிலும் நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள்.
என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று. அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள். ‘உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு என் தந்தை, ‘இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல் : (புகாரி: 2587)
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 5998)