10) கால்நடைகளுக்கான ஜகாத் மீண்டும் மீண்டும் வசூலிக்க ஆதாரமாகுமா?
தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
இந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால்நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும்.
ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.
இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் தங்கள் கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் தமது வாதத்தை எவ்வாறு எடுத்து வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
மேற்கண்ட சட்டத்திலிருந்து இரண்டு எதிர்க்கேள்விகளை நம்மிடம் கேட்கின்றனர்.
ஒருவனிடம் 40 ஆடுகள் இருந்து அதற்குரிய ஜகாத்தை அவன் கொடுத்து விட்டான். சில நாட்களில் இன்னோர் 40 ஆடுகள் அவனுக்குக் கிடைக்கின்றன. இந்த 40 ஆட்டுக்கு ஓர் ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் 80க்கு 2 ஆட்டை கொடுத்தவர்களாவீர்கள். இது 120க்கு 1 என்ற ஹதீஸுக்கு முரணாக இருக்கிறது.
இரண்டாவதாக வந்த 40க்கு கொடுக்கத் தேவையில்லை என்று நீங்கள் கூறினால் முதல் 40 மட்டும் தான் சுத்தமாகி இருக்கின்றது. இரண்டாவதாக வந்த 40 எப்படி சுத்தமாகும்? என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். நாம் என்ன சொல்கிறோம் என்பது புரியாததால் எழுந்த கேள்வி இது.
நாற்பது ஆடு இருக்கும் போது ஒருவன் ஓர் ஆட்டைக் கொடுத்தான் என்றால் அது நாற்பது ஆட்டுக்குரிய ஜகாத் அல்ல. 40 முதல் 120 வரையுள்ள ஒரு ஸ்டேஜுக்கான ஜகாத் ஆகும். எனவே 120 வரை அவன் ஏதும் கொடுக்கத் தேவையில்லை.
மேலும் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது. அதையும் தமது இஷ்டத்துக்கு வளைத்து வியாக்கியானம் கொடுத்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.
ஒருவனிடம் முன்னூறு ஆடுகள் இருந்தன. அதற்கு அவன் மூன்று ஆடுகளைக் கொடுத்து விட்டான். அதன் பின்னர் நூறு ஆடு கிடைக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும்?எனவும் கேட்கின்றனர். ஏற்கனவே 300க்குக் கொடுத்து விட்டதால் அதிகப்படியான நூறுக்கு ஓர் ஆட்டைக் கொடுத்தால் மேற்கண்ட ஹதீஸ் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.
இதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதிலிருந்து இவர்கள் தமது வாதத்தை, வருடந்தோறும் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி நிலைநாட்டுவார்கள்? என்பது தான் முக்கியமான கேள்வியாகும்.
வருடா வருடம் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் எனக் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவதை விடுத்து நமக்கு மறுப்பு தான் சொல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது அவசியம் என்ற வாதத்துக்கு, திருக்குர்ஆனிலும், ஏற்கத்தக்க நபிமொழிகளிலும் எந்தச் சான்றும் இல்லை என்பதில் ஐயம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.