10) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 8

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

வியப்புக்குள்ளாகும் பிலாத்து

கடவுள் அந்தரங்கமான, மறைமுகமான வழியில் செயலாற்றுபவர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் படைவீரர்களின் உள்ளங்களில் ஏசு இறந்து விட்டார் என்ற எண்ணத்தைப் போட்டது!

படை வீரர்கள் சிலருக்கு இப்படி ஓர் எண்ணத்தைப் போட்ட அதே கடவுள், இன்னொரு படைவீரரை ஏசுவின் விலாப்புறத்தில் ஈட்டியால் குத்தும்படி தூண்டுகிறார். அவ்வாறு குத்தியவுடனே தண்ணீரும் ரத்தமும் வடிந்தன. இது ஏசுவின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அமைந்தது. இவ்வாறு இரத்தம் வெளியேறுவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மறுபடியும் சீராவதற்கு உதவுகின்றது.

சிலுவை என்ற தலைப்பில் கலைக் களஞ்சிய பைபிளில் 960ஆம்  பக்கத்தில் வெளியான கட்டுரை, ஏசுவின் உடலில் ஈட்டி ஊடுறுவுகையில் அவர் உயிருடன் இருந்தார் என்று உறுதிப்படுத்துகின்றது. அந்தக் கட்டுரை, தண்ணீரும் இரத்தமும் சேர்ந்து உடனடியாக வெளியானதையும் உறுதிப்படுத்துகின்றது.

ஈட்டியின் தாக்குதல் உடலில் அதிகமான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக இரத்தக் குழாய்களின் நரம்பு மண்டலங்கள் நிலை குலைந்து தண்ணீர் வெளியாகின்றது என்று 1949ஆம் ஆண்டு வெளியான திங்கர்ஸ் டைஜஸ்ட் என்ற இதழில் மூத்த மயக்க மருந்து மருத்துவர் பிரிமோஸ் என்பவர் தெரிவிக்கின்றார்.

ஏசு எத்தனை மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்டார் என்பதில் ஒருமித்த கருத்து எந்த பைபிள் எழுத்தாளருக்கும் இல்லை. ஆனால் யோவான் 19:14 வசனத்தின்படி பகல் 12 மணி வரை பிலாத்து முன்னிலையில் ஏசு இருந்திருக்கிறார்.

அதுபோல் எத்தனை மணிக்கு அவரது ஆவி பிரிந்தது என்பதையும் பைபிள் எழுத்தாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் பகல் 3 மணிக்கு அவர் உயிர் துறந்தார் என்பதில் எழுத்தாளர்களுக்கு மத்தியில் கருத்தொற்றுமை நிலவுவதாகத் தெரிகின்றது.

கிறிஸ்துவின் வாழ்க்கை என்ற நூலில் 421ஆம் பக்கத்தில் டீன் ஃபர்ரார் என்பவர், ஏசு சிலுவையில் மூன்று மணி நேரம் கிடந்தார் என்று தெரிவிக்கின்றார். சிலுவையில் கட்டப்பட்டவர்கள் சாதாரணமாக கால் எலும்பு உடைக்கப்பட்டாலே தவிர 3 மணி நேரத்திற்குள்ளாக இறப்பதில்லை.

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் ஏசுவின் உடலைத் தரும்படி பிலாத்திடம் கேட்கின்றார். பிலாத்து உடனே நூற்றுவர் தலைவரிடம், ஏசு இறந்ததைக் கேட்டு வியக்கின்றார்.

ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, “அவன் இதற்குள் இறந்து விட்டானா?” என்று கேட்டான்.

மாற்கு 15:44

துப்பாக்கி ஏந்திய படையை நோக்கி நிற்கும் ஒருவன் சுடப்பட்டு சாகின்றான் என்றால் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு தூக்கு மேடையில் தொங்கும் ஒருவன் சாகின்றான் என்றால் அதிலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அதே சமயம் நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேர் மாற்றமாக அவர்கள் பிழைத்துக் கொண்டால் தான் நமக்கு அது வியப்பளிக்கும்.

ஏசு உயிருடன் இருக்கிறார்; இறக்கவில்லை என்று பிலாத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் இறந்து விட்டார் என்று தகவல் வந்ததும் அவர் வியப்பிற்குள்ளாகிறார்.

இப்போது அரிமேத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்புக்கு ஏசுவின் உடலை எடுத்துச் செல்ல அனுமதியளிக்கின்றார். இறுதிச் சடங்கில் அரிமேத்திய ஊரைச் சார்ந்த யோசேப், நிக்தேகம், மகதலா மரியா, யாகோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் வந்திருந்தனர்.

குளிப்பாட்டுதல், நறுமணம் பூசுதல் போன்ற காரியங்கள் இரண்டு மணி நேரத்திற்கு நடக்கின்றன. இவையும் அங்குள்ள யூதர்களை ஏமாற்றுவதற்காக, ஏசு இறந்து விட்டார் என்று நம்ப வைப்பதற்காகத் தான் நடந்திருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஏசுவின் உடலில் உயிர்த் துடிப்பைக் காண்கின்ற போது அதை வெளிப்படுத்தி, மாட்டிக் கொடுக்கின்ற அளவுக்கு அவர்கள் அறிவிலிகள் அல்லர். ஏனெனில் அப்போது ஏசு உயிருடன் இருக்கிறார் என்று சொன்னால் அது மீண்டும் அவரைத் தொலைத்துக் கட்டுவதற்கு ஏதுவாகி விடும்.

எனவே கடவுள் இவ்வாறு ஒரு பாதுகாப்பை வழங்கி, ஈட்டியின் மூலம் அவரது ரத்த ஓட்டத்தைச் சரிப்படுத்தி, அவரது சீடர்களிடம் ஏசுவை ஒப்படைத்து அவரைப் பாதுகாத்திருக்கின்றார். இந்த நிகழ்வும் ஏசு இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.