10) உலக வாழ்வா? மறுமை வாழ்வா?
“இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்’’ என்று நபியே உமது மனைவியரிடம் கூறுவீராக!
நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, “உங்களில் நல்லவர்களுக்காக மகத்தான கூலியை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் இந்த (33:28,29) வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.
நூல்: (முஸ்லிம்: 2946)
ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது’’ எனக் கூறுவீராக!
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு) விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன.
அப்போது தலைவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், ‘வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்களின் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன’ என்று பதிலளித்தனர். ‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே, உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்’ என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
‘திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது ‘உக்காழ்’ சந்ததையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ‘ஃபஜ்ரு’த் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர்.
அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) ‘வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்’ என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, ‘எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்’ என்று கூறினர்.
மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, ‘ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது’’ எனக் கூறுவீராக!…’ என்று தொடங்கும் இந்த (72வது) அத்தியாயத்தை அருளினான். ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹீ’யின் மூலம் தான் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
நூல்: (புகாரி: 4921)
அவர்களில் மற்றவர்களுக்காகவும் (அவரை அனுப்பினான்) அவர்களுடன் இவர்கள் இன்னும் சேரவில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 4897)
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
உமர் (ரலி), ‘இவ்வசனம் (அல்குர்ஆன்: 5:3) ➚ எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்’ என தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 45)