10) உம்மு ஸலமா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

வயது 58க்கு மேல்

விதவைப் பெண்மணி

திருமணத்தின் போது நபியின்

வயது  58

நபியுடன் வாழ்ந்த காலம் 6 வருடம்

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு அபூஸலமா (ரலி) முதல் கணவர் ஆவார். அவர் மூலம் ஜைனப், ஸலமா, உமர், துர்ரா என்ற நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

உம்மு ஸலமா (ரலி) அவர்களின் குணத்திற்கும் அழகிற்கும் ஏற்றவாறு அன்பு நிறைந்த கணவராக அபூஸலமா (ரலி) அவர்கள் அமைந்தார்கள். பிற்காலத்தில் அவர்களை நினைவு கூரும் வண்ணம் அபூஸலமா (ரலி) நடந்து கொண்டார்கள்.

அவர்கள் இருவரும் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் அவர்களுக்கு இஸ்லாத்தின் எதிரிகள் மூலம் பெரும் தொல்லைகள் ஏற்பட்டன. அல்லாஹ்வை மன நிறைவோடு வணங்கிக் கொண்டு மக்கா நகரில் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் அபிஸீனியாவிற்கு நாடு துறந்து சென்றனர்.

பின்னர் உம்மு ஸலமா, அபூஸலமா மற்றும் அபிஸீனியாவிற்கு நாடு துறந்து சென்ற அனைவரும் மதீனா நகருக்கு நாடு துறந்து சென்றனர்.

இவ்வாறு புறப்பட்டுச் சென்றவர்களில் மதீனாவில் நுழைந்த முதல் பெண்மணி உம்மு ஸலமா (ரலி) என்று கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் உம்மு ஸலமா அவர்களின் கணவர் இறந்து போக நான்கு குழந்தைகளுடன் விதவையாகி ஆதரவற்று நின்ற உம்மு ஸலமா அவர்களையே நபி ஸல் அவர்கள் திருமணம் செய்தார்கள். (பார்க்க அல்இஸாபா 12061)