மரணமும் மறுமையும் -09

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

மரண நேரமும் மவுத் சோறும்

கண்கள் நிலைகுத்தும்

ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎

عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ « إِنَّ الرُّوحَ ‏إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ ». فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ فَقَالَ « لاَ تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ إِلاَّ بِخَيْرٍ فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا ‏تَقُولُونَ ». ثُمَّ قَالَ « اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا ‏رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ ».‏

அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக் காணப்பட்டது. ‎உடனே அதை மூடினார்கள்.  உயிர் கைப்பற்றப்படும் போது ‎பார்வை அதைத் தொடர்கிறது  என்றும் கூறினார்கள்.‎

அறி: உம்மு ஸலமா (ரலி)‎

(முஸ்லிம்: 1528)

உயிர் கைப்பற்றப்படும் முறை

நீண்ட ஹதீஸ் ஆரம்பம்: ”ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளரிக்கொண்டிருந்தார்கள்.

எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்த கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம் .(திடீரென) நபி (ஸல்) அவர்கள் தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள்.

இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத்தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் (சக்கராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களது சுவர்க்கத்துக்கு கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும் சுவர்க்கத்தின் நறுமணத்திலிருந்து நறுமணத்தையும் வைத்து கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரை கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார்.

அவரை நோக்கி நல்ல ஆத்மாவே! ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு என கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும் .

அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல் அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள். (பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.

இவருக்காக முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர் கூறுவார். வானம் திறக்கப்படும். இப்படி ஏழு வானம் திறக்கப்படும். அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்லிய்யீனிலே பதிவு செய்யுங்கள். அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான்.

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்துவிடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார்.

அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஒட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல் அவனுடைய உடலிலிருந்து உயிர் கைப்பற்றப்டும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்க மாட்டார். உடனே கம்பளி துணியில் வைத்துவிடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்டார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஒதிக் காட்டினார்கள்.

(நீளமான இந்த ஹதீஸ் அடுத்த தலைப்பிலும் தொடர்கிறது)

(அஹ்மத்: 18534, 17803)

நல்லோர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுதல்

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!” என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 16:32)

“எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!” எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 41:30, 56:88)

தீயோர் நிலை

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99)

வானவர்களை அவர்கள் காணும் நாளில் குற்றவாளிகளுக்கு அன்று எந்த நற்செய்தியும் இருக்காது. “(எல்லா வாய்ப்புகளும்) முழுமையாகத் தடுக்கப்பட்டு விட்டன” என்று அவர்கள் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 25:22)

وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏

(ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

(அல்குர்ஆன்: 8:50)

நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கத் தான் போகிறோம்

யாருக்கோ நடக்கப்போகிறது என்று நினைக்காமல் நமக்கு நாளை இது வரத்தான் போகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். மரண நேரம் என்பது ஒட்டுமொத்தமாக இந்த உலகை விட்டு வேறு உலகுக்கு செல்லக்கூடிய பிரம்மாண்டமான நேரம். நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய நிகழ்வு.

கற்பனை செய்து பார்க்கவே முடியாத வித்தியாசமான உலகம். இறை நம்பிக்கையாளர்கள் எதையெல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு இருந்தார்களோ அதை காணும் ஒரு நேரம். இறை மறுப்பாளர்களும் நயவஞ்சகர்களும் எதையெல்லாம் பொய் என்று கருதிக் கொண்டிருந்தார்களோ அதை கண்ணால் காணும் ஒரு நேரம்.

எதற்கடா இந்த உலகத்திற்கு வந்தோம் என்று பயந்து செத்து பதறும் நேரம். என் நன்மை தீமை என எதையும் செய்ய முடியாத ஒரு நேரம்.

(அஹமது 18534 ஹதீஸின் மீதி தொடர்ச்சி) ….

اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَـنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِىْ سَمِّ الْخِيَاطِ‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ‏

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

(அல்குர்ஆன்: 7:40)

ஏக இறைவன் உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஸிஜ்ஜீன் என்ற இடத்திற்கு எறியப்படும். பிறகு பின்வரும் வசனத்தை ஒதிக்காட்டினார்கள் .

حُنَفَآءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖ‌ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ اَوْ تَهْوِىْ بِهِ الرِّيْحُ فِىْ مَكَانٍ سَحِيْقٍ‏

அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதவர்காளாக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.

(அல்குர்ஆன்: 22:31)

இவ்வாறு (கெட்டவர்களின் ஏடான) ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்படும் (ஹதீஸ் சுருக்கம்)”

(அஹ்மத்: 18534)(17803)

மந்திரிப்பவரை கூப்பிடுங்கள்
75:26   كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ‏
75:27   وَقِيْلَ مَنْ رَاقٍۙ‏

75:26, 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக்குழியை அடைந்து விடும்போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும்.26

75:28   وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ‏

75:28. “அதுவே பிரிவு” என்று அவன் விளங்கிக் கொள்வான்.

75:29   وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ‏

75:29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.

75:30   اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمَسَاقُؕ‏

75:30. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.

75:31   فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ‏

75:31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.

75:32   وَلٰڪِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ‏

75:32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.

75:33   ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىؕ‏

75:33. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.

(சக்ரத்) சகராத் நிலை
وَ جَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَـقِّ‌ؕ ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيْدُ‏

50:19. மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)

 

“லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்”

மரணத்திற்கு பலதுன்பங்கள் உண்டு

 

إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي، وَفِي يَوْمِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ: دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ، وَبِيَدِهِ السِّوَاكُ، وَأَنَا مُسْنِدَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ، وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ، فَقُلْتُ: آخُذُهُ لَكَ؟ فَأَشَارَ بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ» فَتَنَاوَلْتُهُ، فَاشْتَدَّ عَلَيْهِ، وَقُلْتُ: أُلَيِّنُهُ لَكَ؟ فَأَشَارَ بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ» فَلَيَّنْتُهُ، فَأَمَرَّهُ، وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ – يَشُكُّ عُمَرُ – فِيهَا مَاءٌ، فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي المَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ، يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ» ثُمَّ نَصَبَ يَدَهُ، فَجَعَلَ يَقُولُ: «فِي الرَّفِيقِ الأَعْلَى» حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும்.

(இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன்.

நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்ததுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, ‘உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?’ என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், ‘ஆம்’ என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், ‘பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?’ என்ற கேட்டேன்.

அவர்கள், தம் தலையால், ‘ஆம்’ என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய ‘தோல் பாத்திரம் ஒன்று’ அல்லது ‘பெரிய மரக் குவளையொன்று’ இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) (தோல் பாத்திரமா? மரக் குவளையா அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு’ என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, ‘(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’ என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.

(புகாரி: 4449)

சக்ரத் வந்துவிட்டால், மனிதனின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாது

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

23:99, 100. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

மரண செய்தியை அறிவிப்பு செய்தல்

மரணத்தை அறிவிக்கக் கூடாது என்ற கருத்திலமைந்த ஹதீஸ்கள் யாவும் குறைபாடு உடையதாகும்.

‘மரண அறிவிப்புச் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும்’

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் (906) ஹதீஸ் உள்ளது. இதை அறிவிக்கும் அபூ ஹம்ஸா மைமூன் அல்அஃவர் பலவீனமானவர்.

‘நான் மரணித்து விட்டால் என்னைப் பற்றி அறிவிப்புச் செய்யாதீர்கள்! ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன்’ என்று ஹுதைபா (ரலி) கூறினார்கள்.

அறி: பிலால் பின் யஹ்யா

நூல் : திர்மிதி-907

பிலால் என்பார் ஹுதைபாவிடம் எதையும் செவியுற்றதில்லை என்பதால் ஹுதைபா கூறியதை இவர் அறிவிக்க முடியாது. எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

அதிகமானவர்கள் பங்கேற்க அறிவிப்பு செய்யவேண்டும்

ஒருவர் மரணித்து விட்டால் அது பற்றி மக்களுக்கு அறிவிப்பது தவறில்லை, என்பது மட்டுமில்லாமல், அது விரும்பத்தக்கதும் ஆகும். ஏனெனில் இறந்தவரின் ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கு பெறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

‘இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 1576)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் கதீத் என்ற இடத்தில் மரணித்து விட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் ‘குரைப்! மக்கள் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்று பார்த்து வா!’ என்றார்கள். நான் சென்று பார்த்த போது மக்கள் திரண்டிருந்தனர். இதை இப்னு அப்பாஸிடம் தெரிவித்தேன். ‘நாற்பது பேர் அளவுக்கு இருப்பார்களா?’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.

‘அப்படியானால் ஜனஸாவை வெளியே கொண்டு செல்லுங்கள்! எந்த முஸ்லிமாவது மரணித்து அவரது ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் பங்கெடுத்துக் கொண்டால் அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறினார்கள்.

அறி: குரைப்

(முஸ்லிம்: 1577)

அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொள்வது சிறப்பானது என்றால் மக்களுக்கு அறிவிப்புச் செய்தால் தான் இது சாத்தியமாகும். அதுவும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டால் தான் இன்றைய சூழ்நிலையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத நாற்பது பேர் தேறுவார்கள். எனவே மரணச் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது தான் சிறந்ததாகும்.

நஜ்ஜாஷி மன்னரின் மரணச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

அறி: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1245, 1318, 1328, 1333, 3880)

இன்னும் இது தொடர்பான பல செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்.