09) மதம் மாறியவர்களுடன் நடந்த போர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தனது செல்வத்திற்கும், உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே!” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில் ஜகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செலுத்தி வந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! (ஜகாத் வழங்க மறுத்தவர்கள் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கி விட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று சொன்னார்கள். (புகாரி: 7285)

அபூபக்ர் (ரலி) மேலும் கூறியதாவது:

“நாம் அறியாமைக் காலத்தில் ஆர்ப்பரிக்கும் ஆற்றல் மிகு அடலேறுகளாக இருந்தோம். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின்பு அடங்கிப் போய், அஞ்சி ஆட்டம் காணும் கோழைகளாகி விட்டோமா? நூற்றுக்கு நூறு மார்க்கம் முழுமை பெற்ற நிலையில் இறை அறிவிப்பு (வஹீ) நின்று போனது. (முழுமை பெற்ற அந்த மார்க்கம்) நான் .உயிருடன் இருக்கும் போதே குறைவு பட வேண்டுமா?” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் வைரம் பாய்ந்த வார்த்தைகளை அள்ளிச் சொரிந்தார்கள்.
(நூல்: ரஸீன்)

மக்களிடம் இறங்கிச் செல்ல வேண்டும், விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னால் மார்க்கத்தில் ஏதோ கோளாறு இருக்கின்றது, கோணல் இருக்கின்றது என்ற கூறுவது போல் ஆகி விடும் அல்லவா? நிச்சயமாக கோளாறுகளும், குளறுபடிகளும் மனித மனங்களில் தான் இருக்கின்றனவே தவிர அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கிடையாது. எனவே கோணல் புத்திக்காரர்கள் இந்த மார்க்கத்தை நாணல் போல் வளைக்க நான் ஒரு போதும் அனுமதியேன்! அதற்காக என் உயிரையும் அர்ப்பணம் செய்து அறப் போர் செய்ய ஒரு கணம் கூட தயங்க மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) இடியென அதிர்ந்தார்கள். வளையப் போவதும் வளைந்து முறியப் போவதும் அவர்களின் முதுகெலும்புகள் தானே தவிர முழுமை பெற்ற இந்த மார்க்கம் அல்ல! என்று முழங்கினார்கள்.

அபூபக்ர் (ரலி)யின் இந்த உறுதியான போக்கு, உமர் (ரலி)யின் உள்ளத்தில் எதிர் விளைவை ஏற்படுத்தாது, உடன்பாட்டு விளைவையே ஏற்படுத்தியது. அவர்கள் ஓடும் திசையிலேயே ஒத்தோடும் இசைவு உணர்வையே தோற்றுவித்தது.
தான் செல்லும் தடம் வல்ல அல்லாஹ்வின் தடம் என்ற அடிப்படையில் அபூபகர் (ரலி) அவர்கள் தன் பாதையில் தடம் புரளாமல் சென்றார்கள். அதன் உச்சக்கட்டமாக தன் இலட்சியப் பயணத்தில் மாற்றம் இல்லை என்பதைப் பிரகடனப் படுத்தும் முகமாக மதீனத்து மக்கள் மன்றத்தில் ஒரு வீர உரையை ஆற்றுகின்றார்கள். அந்த வீர உரையின் வெற்றி வரிகள் இதோ:

போதிய வகையில் நேரிய வழி காட்டிய வல்லவன் அல்லாஹ்வுக்கே வாஞ்சை மிகு புகழனைத்தும் சொந்தம்! அறிவு ஞானம் என்பது முற்றிலும் அற்று அறுந்துப் போயிருந்தது! இஸ்லாம் என்பது அரிதாகி, அதன்பால் இழுத்துச் செல்லும் கயிறு இற்று பலம் குன்றியிருந்தது! அதற்குக் காரணம், அதைப் பின்பற்றிய மக்கள் அதன் பிடியை விட்டும் விலகி வழி கெட்டிருந்தனர். அந்த வேளையில் தான் அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பினான்.

அல்லாஹ்வின் சாபம் வேதக் காரர்கள் மீது உண்டாவதாக! அவர்களுக்கு அல்லாஹ் (வேதம் எனும்) நன்மையை வழங்கியிருந்தான். அந்த நன்மையை அவர்கள் சரியாகப் பேணாததால் அல்லாஹ் மீண்டும் அந்த நன்மையை அவர்களுக்கு வழங்கவில்லை! அவர்கள் மீது அல்லாஹ் தீமையை அண்ட விடவில்லை. காரணம், அவர்கள் அழிந்து போவதற்குரிய போதிய தீமை அவர்களிடம் மண்டிக் கிடந்தது. அவர்கள் தங்கள் வேதத்தை மாற்றியமைத்து விட்டனர். அவ்வேதத்தில் கலப்படம் செய்து தங்கள் கைவரிசையைக் காட்டினர்.

அரபியர்களோ தாங்கள் அல்லாஹ்வின் அபயத்தில், அரவணைப்பில் இருப்பது போன்ற மிதப்பில் இருந்தனர். அதனால் அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதுமில்லை! அவனை அழைத்துப் பிரார்த்திப்பதுமில்லை! விரக்தியான வாழ்க்கை! வழிகெட்ட மார்க்கம்! வளங்கள் மாறி மாறி வலம் வந்தாலும் வறண்டு கிடந்தது அவர்களது பாலைவன பூமி! இந்த நேரத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் வடிவில் இறுதித் தூதுத்துவத்தை அல்லாஹ் அங்கே இறக்கி வைத்தான். அவர்களை நடுநிலைச் சமுதாயமாக ஆக்கினான். முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு உதவி புரிந்து வெற்றியளித்தான். அவர்களை எதிர்த்தோரைத் தோற்கடித்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததும் ஷைத்தான் தன் ஆதிக்கத்தைத் தொடர்ந்திருக்கின்றான். சிலரை வழிகேட்டில் வீழ்த்தி தன் வலையில் வளைத்துப் போட்டிருக்கின்றான். எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில், “முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்” (3:144) என்று கூறுகின்றான்.

(அதாவது முஹம்மது (ஸல்) இறந்தாலும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் மரணிக்காது. எனவே நீங்கள் மதம் மாறி விடாதீர்கள் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு மாற்றமாக) உங்களைச் சுற்றி வாழும் அரபியர் இஸ்லாமிய அரசிடம் ஜகாத்தாக செலுத்த வேண்டிய ஆடுகளை, ஒட்டகங்களை செலுத்த மறுக்கின்றார்கள். இப்போது அவர்கள் தங்களுடைய மார்க்கத்தில் இல்லை! அவர்கள் இந்த மார்க்கத்தில் திரும்பி விட்டால் (போர் தொடுக்காமல்) அவர்களை விட்டு விடத் தயார்!

இன்றைய தினம் (நபித்தோழர்களாகிய) நீங்கள் உங்களுடைய மார்க்கத்தில் மற்ற எவர்களை விடவும் வலிமையானவர்களாக விஞ்சி நிற்கின்றீர்கள். இது உங்கள் இறைத்தூதருக்கு வழங்கப் பட்ட அருள் வளமாகும். அந்த இறைத்தூதர் உங்களை எல்லாவற்றிற்கும் போதுமானவனாக திகழ்கின்ற அந்த வல்ல நாயனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருக்கின்றார். அவன் அவரை அறியதவராகக் கண்டு வழி காட்டினான். அவரை வறுமையில் தன்னிறைவு பெற்றவராக்கினான். நீங்கள் நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து காப்பாற்றினான்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றித் தரும் வரையில், அவனுடைய கட்டளையின் அடிப்படையில் இவர்களை எதிர்த்துப் போரிடுவேன். நம்மவர்களில் கொல்லப்படுபவர் நாளைய சுவனத்திற்குச் செல்லும் வீரத் தியாகிகள் ஆவர்! உயிர் வாழ்பவர் அவனது பூமியில் ஆள்பவராவார்! அல்லாஹ்வின் விதி அரங்கேறியே தீரும். இது அல்லாஹ் தன் திருமறையில், “அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய் தோருக்கு அல்லாஹ் வாக்களித் துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்” என்ற (24:55) வசனத்தில் கூறும் உண்மையாகும். இது மாறவே மாறாத அவனது வாக்குறுதியாகும்.

இந்த வீரம் சொட்டும் வசனங்களைப் பொழிந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பகைகளைப் புறங் கொள்ளச் செய்யும் போர்க்களப் பணிகளை நோக்கி போர்க்கால அடிப்படையில் விரைகின்றார்கள்.

அபூபக்ர் (ரலி)யின் இந்தப் பதில் உமர் (ரலி)க்காக மட்டும் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. உமர் (ரலி) மதீனாவில் மையம் கொண்டிருந்த மக்களின் கருத்துக்களைத் தான் அபூபக்ர் (ரலி)யிடம் பிரதிபலித்தார்கள். இப்படி ஒரு கருத்தாக்கம் மதீனா மக்களிடம் உருவாவதற்குக் காரணம், ஒரு கலகக் கூட்டமே களமிறங்கியிருந்தது தான்! இந்த கலகக் கூட்டத்திற்கென்று தலைவர்கள் இருந்தனர்.

1. அஸத் மற்றும் கத்பான் கோத்திரத்தார்கள்! இவர்களது தலைவன் தலீஹா பின் குவைலித் அல்அஸதி என்ற சோதிடக் காரன்.
2. கன்தா மற்றும் அதையடுத்த பகுதி வாழ் மக்கள்! இவர்களின் தலைவன் அஸ்அஷ் பின் கைஸ் அல் கன்தி
3. மத்ஹஜ் மற்றும் அதையடுத்த பகுதி வாழ் மக்கள்! இவர்களது தலைவன் அஸ்வத் பின் கஃம் அல்அனஸி
4. ரபீஆ கோத்திரத்தார்! இவர்களது தலைவர் மக்ரூர் பின் நுஃமான் அல்முன்திர்
5. ஹனீஃபா கோத்திரத்தார்! இவர்களது தலைவன் பொய் நபியான முஸைலமா பின் ஹபீப்
6. சலீம் கோத்திரத்தார்! இவர்களது தலைவன் ஃபஜ்ஆ என்ற அனஸ் பின் அப்து யாலைல்
7. பனூ தமீம் கோத்திரத்தார்! இவர்களது தலைவி ஸஜாஜ் என்ற குறிகாரி

இவர்கள் தான் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ச்சியும், புரட்சியும் செய்து கொண்டிருந்தார்கள்.

இந்தக் கட்டத்தில் தான் அஸத், கத்பான் மற்றும் தய்யி கிளையார்கள் தலீஹா பின் அல்அஸதீ தலைமையில் ஒன்று கூடி சில குழுக்களை மதீனாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்தக் குழுக்கள் மதீனாவிலுள்ள முக்கியப் பிரமுகர்களையும் புள்ளிகளையும் சந்திக்கின்றார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் மட்டும் இந்தக் குழுவினரை சந்திக்க மறுத்து விடுகின்றார்கள். இந்தப் பெரும்புள்ளிகள் வாயிலாக, தொழுகை மட்டுமே போதும்! ஜகாத் தேவையில்லை என்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்கின்றார்கள். இந்தக் கட்டத்தில் தான், ஒரு கயிறளவு ஜகாத் தர மறுத்தாலும் அந்தக் கயவர்களை எதிர்த்துப் போர் செய்யத் தயங்க மாட்டேன் என்ற துணிச்சலான வார்த்தைகள் அபூபக்ர் (ரலி) வாயிலிருந்து கூரிய வாட்களாக சீறிப் பாய்கின்றன.

கொஞ்சமும் சுருதி குறையாத உறுதியான நிலைப்பாட்டைக் கண்ட கலகக் கூட்டம் தங்கள் ஊர்களை நோக்கி ஓட்டமெடுத்தனர். அதே சமயம் (உஸாமா தலைமையில் ஒரு படை வெளியே போருக்குச் சென்றிருப்பதால்) மதீனாவில் படைபலம் குறைவாகவே இருக்கின்றது என்ற தகவலையும் கலகக்காரர்கள் தங்கள் ஊர் மக்களிடம் அறிவிக்கத் தவறவில்லை. மதீனா காலியாக உள்ளது என்று அம்மக்களிடம் தெரிவித்து, மதீனாவை நோக்கி அவர்களைப் போர் தொடுக்கும் படி தூண்டினர்.

இவர்களின் வஞ்சத் தன்மையை தெரிந்து வைத்திருந்ததால் மதீனாவில் எல்லைகளில் காவல் படையினரை அபூபக்ர் (ரலி) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்திருந்தனர். மக்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் அபூபக்ர் (ரலி) உரையாற்றினார்கள்.

“நம்மை சுற்றி உள்ள மக்கள் இறை நிராகரிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். வந்து சென்ற தூதுக்குழுவினர், உங்களிடம் படைபலம் குறைவாகவே உள்ளது; அதனால் மதீனாவைத் தாக்கலாம் என்று நினைக்கின்றனர். அவர்கள் இரவில் வருவார்களா? அல்லது பகலில் வருவார்களா? என்று சொல்வதற்கில்லை. அவர்கள் கிட்டத்தட்ட 12 மைல்கள் தொலைவில் தான் இருக்கின்றனர். நாம் அவர்களது கோரிக்கையை ஏற்று நல்ல முறையில் நல்வாழ்த்து சொல்லி அவர்களை வழியனுப்பி வைப்போம் என்று நம்பியிருந்தனர். ஆனால் நாம் அவர்களது கோரிக்கையை அடியோடு தடுத்து விட்டோம். எனவே நீங்கள் ஆயத்தமாக இருங்கள்; ஆயுதத்துடன் இருங்கள்” என்று தமது உரையில் எச்சரிக்கை செய்தார்கள்.

மூன்று நாட்கள் தான் கழித்திருக்கும். அபூபக்ர் (ரலி) எச்சரித்தது போலவே கலகக்காரர்கள் மதீனாவைத் தாக்க படையுடன் வருகின்றார்கள். தங்களுக்கு உதவியாக பாதிப் படையை “தீ ஹுசைன்’ என்ற இடத்தில் கலகக் காரர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். அவர்கள் மதீனாவைத் தாக்க வரும் தகவலை, மதீனாவின் எல்லைகளில் நின்ற காவலர்கள் உடனடியாக ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கின்றார்கள். “நீங்கள் அந்த இடத்திலேயே இருங்கள்” என்று ஆட்சித் தலைவர் பதில் செய்தி அனுப்புகின்றார்கள்.

பள்ளியில் இருந்த தோழர்களை – இராணுவ வீரர்களை ஒட்டகங்களில் ஏற்றிக் கொண்டு மதீனாவில் எல்லைக்கு விரைந்தார்கள். எதிரிகள் தோற்று, துவண்டு ஓடுகின்றார்கள். அவர்களது உதவிப் படை தயார் நிலையில் நின்ற “தீ ஹுசைன்’ பகுதி வரை அவர்களை ஓட ஓட விரட்டிச் சென்றார்கள். எதிரிகளின் உதவிப்படையினர் ஓடி வந்து அவர்களுக்கு உதவ வந்த போது, போர் தொடங்கியது.

போர் செய்யவும் தயங்க மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) முழங்கியது போல் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிச் சென்ற மக்களுக்கும் மத்தியில் போர் நடந்தது. அல்லாஹ்வின் கிருபையால் அபூபக்ர் (ரலி) அவர்களின் கொள்கை உறுதிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.