09) நபியின் மனைவியருக்கான ஹிஜாப் சட்டம்

நூல்கள்: நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:53)

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை “ஹிஜாப்” (திரையிட்டு இருக்கும்படி) கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!’’ என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் “ஹிஜாப்” தொடர்பான வசனத்தை அருளினான்.

நூல்: (புகாரி: 4790, 4483)

(நபியவர்கள் ஸைனப் அவர்களை மணமுடித்த போது அளித்த விருந்திற்குப் பின் எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு) மக்களில் ஒரு குழுவினர் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுத் தம்முடைய மற்றத் துணைவியரிடம் சென்று சலாம் (முகமன்) சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பிவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்துவிட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்து வந்து அனைவரும் வெளியேறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்துகொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்துகொண்டிருந்தேன். சிறிது நேரம்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53) வசனம் அருளப்பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். “நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும்’’ என்பதே அந்த வனமாகும்.
“இந்த வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்தும், நபி (ஸல்) அவர்களின் துணைவியர் “ஹிஜாப்” (திரை) இட்டு மறைக்கப்பட்டது தொடர்பாகவும் மக்களிலேயே நன்கறிந்தவன் நானே ஆவேன்’’ என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 2803)

மனைவியருடன் கருத்து வேறுபாடு

உங்களை அவர் விவாகரத்துச் செய்துவிட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான நம்பிக்கை கொண்ட, கட்டுப்பட்டு நடக்கிற, திருந்திக் கொள்கிற, வணக்கம் புரிகிற, நோன்பு நோற்கிற விதவைகளையும், கன்னியரையும் மனைவியராக அவரது இறைவன் மாற்றித்தரக் கூடும்.

(அல்குர்ஆன்: 66:5)

உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு “ஸாஉ” அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

என் கண்கள் கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனிஅறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (திருப்தி தான்)” என்றேன்.
அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் தங்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்’’ என்று சொன்னேன்.

நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் – நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன் – நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. அப்போது “உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்’’ (66:5) என்ற விருப்ப உரிமை அளிக்கும் இந்த வசனமும், “அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்” (அல்குர்ஆன்: 66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன.

நூல்: (முஸ்லிம்: 2947)

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, ‘நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாகவிலக்குச் செய்தால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்’ என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: (புகாரி: 4916)