09) தூதருக்குக் கட்டுப்படுதல்

நூல்கள்: அஹ்லே குர்ஆன் கூட்டத்தாரின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான். இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளிலிருந்தே நாம் நிலைநாட்டி வருகின்றோம்.

நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது.

குர்ஆனைப் பற்றிய ஆய்வும், அறிவும் இல்லாத மக்களிடம் மட்டும் தான் இத்தகையோர் பிரச்சாரம் செய்து ஏமாற்றுவார்களே தவிர நேரடியான விவாதத்துக்கு அழைத்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இவர்களில் உள்ள ஏராளமான “குரூப்’ களும் விவாதம் என்றால் ஓடி ஒளிபவர்களாகவே உள்ளனர். இதிலிருந்தே இவர்களின் உளுத்துப் போன வாதத்தை அறிந்து கொள்ள முடியும்.

திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கடமை என்பதை விளக்கும் மேலும் பல சான்றுகளைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மிக அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. மேலும் சில விஷயங்களும் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகமாக வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் “அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்” என்பதும் ஒன்றாகும்.

ஒரிரு இடங்களில் அல்ல. ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

. “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:32)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 3:132)

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன்: 4:13)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(அல்குர்ஆன்: 4:69)

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

(அல்குர்ஆன்: 4:80)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை81 என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 5:92)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

(அல்குர்ஆன்: 8:20)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 8:46)

 நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:71)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 24:52)

“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

(அல்குர்ஆன்: 24:54)

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 24:56)

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!500 தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

(அல்குர்ஆன்: 33:33)

நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 33:66)

அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

(அல்குர்ஆன்: 33:71)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

(அல்குர்ஆன்: 47:33)

(போருக்குச் செல்லாமல் இருப்பது) குருடர் மீது குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.

(அல்குர்ஆன்: 48:17)

நம்பிக்கை கொண்டோம்” என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக “கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்” என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்திட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 49:14)

உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாதபோது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 58:13)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதர் மீது கடமை.

(அல்குர்ஆன்: 64:12)

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று இத்தனை இடங்களில் அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகின்றான்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர்கள் காஃபிர்கள்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமே இறையருள் கிட்டும்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் பாழாகி விடும்.

என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் முஸ்லிமா அல்லவா என்பதை அளந்து பார்க்கக் கூடிய அளவுகோலாக இந்தக் கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.

தொழுகை நோன்பு போன்ற கட்டளைகளை மீறினால் அது பெருங்குற்றமாகக் கூறப்பட்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய குற்றமாக குர்ஆனில் கூறப்படவில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தால் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் குற்றமாகக் கூறப்படுகின்றது.

எனவே, பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாலும், மிகுந்த முக்கியத்துவத்துடன் கூறப்பட்டுள்ளதாலும் இக்கட்டளையை சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றே ஈமானைப் பாதுகாக்க முடியும்.

திருக்குர்ஆனை மட்டும் அல்லாஹ் வழங்கி வேறு எந்த வழிகாட்டுதலையும் வழங்காமல் இருந்தால் – குர்ஆனைக் கொண்டு வந்து மக்களிடம் தருவது மட்டுமே தூதரின் பணி, வேறு பணி ஏதும் அவருக்கு இல்லை என்றிருந்தால் இவ்வாறு இறைவன் நிச்சயமாகக் கூறமாட்டான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறுவது மட்டுமே இந்தக் கருத்தைத் தெளிவாகக் கூறிவிடும் போது தேவையில்லாமலும் வேறு கருத்தைக் கொடுக்கும் வகையிலும் “இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்” என்று கூறியிருக்க மாட்டான்.

இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான் என்பதைப் பல வசனங்களை ஆதாரமாகக் காட்டி இத்தொடரில் நிரூபித்துள்ளோம். இறைத்தூதரின் அந்த விளக்கங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதைத் தான் இக்கட்டளைகள் வலியுறுத்துகின்றன.

குர்ஆனில் உள்ளதை மட்டும் பின்பற்றுவது தான் ரசூலுக்குக் கட்டுப்படுவது என்று நபிவழியை மறுப்போர் கூறுவார்கள்.

அல்லாஹ் வீணான – தேவையில்லாத – குழப்பமான வார்த்தைகளைக் கூறி விட்டான் என்று அல்லாஹ்வையும் குர்ஆனையும் இழிவுபடுத்தியாவது தங்களின் மனோ இச்சையை நிலைநாட்ட எண்ணுகிறார்கள் என்பது இவர்களின் பதிலிலிருந்து தெரிகின்றது.

“இதாஅத்’ என்ற மூலச் சொல்லே மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரது கட்டளையை ஏற்று அப்படியே செயல்படுவது என்பது இதன் பொருளாகும்.

இதன் பொருளைச் சரியாக விளங்கிட (அல்குர்ஆன்: 4:59) வசனத்தை உதாரணமாகக் எடுத்துக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன்: 4:59)

* அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.

* தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

* அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.

என மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் உள்ளன. முதலிரண்டு கட்டளைகளை விட்டு விடுவோம். மூன்றாவது கட்டளைக்கு என்ன பொருள்? அதிகாரத்தில் இருப்பவர்கள் போடுகின்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒப்புக் கொள்கின்றது. அதிகாரமுடையவர்களுக்கு இவர்கள் வழங்குகின்ற மரியாதை கூட அல்லாஹ்வின் தூதருக்கு வழங்குவதில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.

அதிகாரமுடையவர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படலாம் என்று பொருள் செய்த இவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்பது எந்தப் பொருளும் அற்றது என்று வாதிடுவதை விட அறியாமை வேறு இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இவ்வசனத்தில் அதீவூ (கட்டுப்படுங்கள்) என்ற சொல் இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள் என்பது ஓர் இடம். அலலாஹ்வின் தூதருக்கும் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்பது இரண்டாவது இடம்.

அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கும் போது அதனுடன் சேர்த்து ரசூலுக்குக் கட்டுப்படுவதையும் இறைவன் கூறுகின்றான். இதிலிருந்து அதிகாரமுடையவர்கள் சுயமாகக் கூறும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது போன்று தூதரின் கட்டளைக்கும் கட்டுப்பட வேண்டும் என்பது உறுதியாகின்றது. “தூதருக்குக் கட்டுப்படுவது என்பதன் பொருள் – குர்ஆனுக்குக் கட்டுப்படுவது தான்” என்ற வாதம் இதனால் அடிபட்டுப் போகின்றது.

மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களில் (அல்குர்ஆன்: 8:20, 24:54) ஆகிய வசனங்களில் ரசூலுக்குக் கட்டுப்படுவது கூடுதலாக முன்னிறுத்தப்படுகின்றது. “அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவரைப் புறக்கணிக்காதீர்கள்’ என்று கூறப்படுகின்றது. அவ்விருவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று கூறாமல் அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று (அல்குர்ஆன்: 8:20) வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வைப் புறக்கணிக்க மாட்டார்கள். தூதரைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள் என்பதற்காகத் தேர்வு செய்து பயன்படுத்தப்பட்டது போல் இவ்வாசகம் அமைந்துள்ளது.

(அல்குர்ஆன்: 24:54) வசனத்தில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று துவங்கி விட்டு, நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமை அவருக்கு, உங்கள் மீதுள்ள கடமை உங்களுக்கு என்றும் அவரைப் பின்பற்றினால் நேர்வழி அடைவீர்கள் என்றும் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அது போலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.