09) கேள்வி – பதில்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பிரார்த்தனை

திருக்குர்ஆனையை ஓதி முடித்தால் அதற்காக குடும்பத்தி னருடன் சேர்ந்து துஆ செய்ய வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழுக் குர்ஆனும் நம்மிடம் இருப்பதுபோல் புத்தகமாக ஒன்றிணைக்கப்படவில்லை. பலரின் உள்ளங்க ளில்தான் அவை பாதுகாக்கப்பட்டிருந்தது. சிலர் அதை எழுதி வைத்திருந் தனர். ஆனால் ஒரே நபரிடம் அனைத்து அத்தியாயங்களும் எழுதப்பட்டி ருக்கவில்லை. அதிகபட்சமாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம்தான் எழுபது அத்தியாயங்கள் இருந்தன.

எங்களிடையே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உரை யாற்றினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல் லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை நன்கறிந்தவன் நானே என்பதை நபித் தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்” என்று குறிப்பிட்டார்கள்.

நூல் : (புகாரி: 5000)

எனவே நபிகளார் காலத்தில் முழு குர்ஆனையும் ஓதி முடிக்கமள வுக்கு வசதிகள் இருந்ததில்லை. மேலும் நபிகளாரின் கடைசி காலம் வரை திருக்குர்ஆன் இறங்கியுள்ளது. அவர்கள் இறப்பதற்கு ஏழு இரவுகளுக்கு முன்வரை திருக்குர்ஆன் வசனம் இறங்கியுள்ளதாக நபித்தோழர்கள் அறி வித்துள்ளதாக இப்னு ஜுரைஜ் குறிப்பிட்டுள்ளார். (தப்ஸீர் தப்ரீ, பாகம்: 6, பக்கம்: 41)

எனவே திருக்குர் ஆன் நூல்வடிவில் ஒன்றிணைக்கப்படவில்லை. ஆகவே நபிகளார் காலத்தில் யாரும் திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடித்துவிட்டு அதற்காக துஆ ஓதும் நிலை ஏற்பட வாய்ப்பில்லை.

திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களை ஓதி முடித்தால் அதற்காக துஆ ஓதவேண்டுமென்றும் நபிகளார் எங்கும் கூறவில்லை. எனவே திருக்குர்ஆனை ஓதி முடிக்கும்போது குடும்பத்துடன் துஆ ஓத வேண்டும் என்பது நபிவழி அல்ல என்பதை விளங்கலாம்.

ஆனால் சிலர் பின்வரும் செய்தியை அடிப்படையாக வைத்து குடும் பத்தோடு இருந்து துஆச் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

அனஸ் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனை முடித்தால் தன் குழந்தை களையும் குடும்பத்தினரையும் ஒன்றிணைத்து அவர்களுக்காக பிரார்த் தனை செய்வார்கள்.

நூல் : (தாரிமி: 3339)

நமக்கு முன்மாதிரியாக எடுத்து செயல்பட அல்லாஹ்வும் அவன் தூதரும் கட்டளையிட்டது நபிகளாரின் வழிமுறையைத்தான். நபித்தோழர் களின் வழிமுறையை அல்ல! எனவே நபித்தோழர்களின் வழிமுறை சுன்னதாக ஆகாது.

திருக்குர்ஆன் ஓதி முடிக்கும்போது கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது உண்மையா?

யார் கடமையான தொழுகையை தொழுவாரோ அவருக்கு ஒரு ஏற்றுக் கொள்ளபடும் பிரார்த்தனை உண்டு. யார் திருக்குர்ஆனை ஓதி முடிப் பாரோ அவருக்கும் ஒரு ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : தப்ரானீ கபீர், பாகம் : 18, பக்கம் : 259

இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல் ஹுமைத் பின் சுலைமான் என்பவர் பலவீனமானவராவார். எனவே இந்த செய்தி அடிப்ப டையாக கொண்டு செயல்பட முடியாது.

இதைப்போன்று பின்வரும் செய்தியையும் ஆதாரமாக காட்டுகின் றனர்.

திருக்குர்ஆனை முடிக்கும்போது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட துஆ இருக்கிறது. மேலும் சொர்க்கத்தில் ஒரு மரம் அவருக்கு உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல்: ஷுஅபுல ஈமான் பைஹகீ, பாகம் : 2,பக்கம் :374)

இச்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது அறிவிப்பாளர் யஸீத் பின் அபான் அரகாஷீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை தாரகுத்னீ, தஹ்பி, இப்னு ஹஜர் ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். எனவே இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ரமலானில் திருக்குர் ஆனை முழுவதுமாக ஓதி முடிக்கும் போது குனூத்தில் நீண்ட துஆவை ஓதுகிறார்களே இதற்கு ஆதாரம் உண்டா?

நபி (ஸல்) அவர்கள், “குனூத்தில் அல்லஹும்மஹ்தினீ ஃபீ மன் ஹதைத்த* என்ற துஆவைத்தான் கற்றுத் தந்துள்ளார்கள். திருக்குர்ஆனை ஓதி முடித்தவுடன் குனூத்தில் குறிப்பிட்ட எந்த துஆவையும் அவர்கள் ஓதவில்லை. ஓதுமாறு வழிகாட்டவும் இல்லை. இது நபிவழிக்கு மாற்றமான பித்அத் (நூதன பழக்கம்) ஆகும். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டி யதாகும்.

 

துஆ கேட்கும்போது அழுதுதான் கேட்க வேண்டுமா?

 

பிரார்த்தனை செய்யும்போது, பணிவும் அடக்கமும் இருக்க வேண் டும். நாம் செய்த பாவத்திற்காக அழுது துஆக் கேட்கலாம். எல்லா நேரங்க ளிலும் அழுது கேட்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். பூமியில் சீர்தி ருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அச்சத்துட னும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

(அல்குர்ஆன்: 7:55-58)

தொழுகையில், “அல்லாஹும்மஃபிர்லி வாலிதைய்ய வலி உஸ்தாதீ” (இறைவா! எனது பெற்றோரின் பாவங் களையும் என் ஆசிரியரின் பாவங்களையும் மன்னிப்பாயாக..) என்ற துஆவை தொழுகையில் ஓதலாமா?

1 “அல்லாஹும்மஃபிர்லீ வாலிதைய்ப வலி உஸ்தாதீ என்ற வாச கத்தை நபிகளார் தொழுகையில் ஓதுமாறு கட்டளையிடவில்லை. அதே நேரத்தில் தொழுகையில் இறுதியில் நாம் விரும்பும் துஆவை கேட்கலாம். அந்த அடிப்படையில் ஒருவர் தம் பெற்றோருக்காக ஆசிரியருக்காக பாவ மன்னிப்புக் கேட்கலாம். ஆனால் இதே வாசகத்தில்தான் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது.

 

நபி (ஸல்) அவர்கள் பெருட்டால் இந்த துஆவை ஏற்றுக் கொள் என்று பிரார்த்தனை செய்யலாமா?

இவ்வாறு கேட்பது கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாற கேட்கு மாறு கட்டளையிட்டதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. திருக்குர்ஆனின் போதனைகளும் நபிகளாரின் வழிகாட்டுதல்களும் இதற்கு வழிகாட்டவில்லை. நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கற்றுக் கொடுத்த எந்த பிராத்தனையிலும் என் பொருட்டால் கேட்க வேண்டும் என்று கட்ட ளையிடவில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நபித்தோழர்கள் கேட்டபோது என்பொருட்டால் அல்லது முஹம்ம தின் பெருட்டால் என்று கேட்க வழிகாட்வில்லை என்பதை பின்வரும் நபிமொழிகளில் கவனிக்க! இவ்வாறு கேட்பது நன்மையை தருமானால் நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்திருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக” என்றார்கள்.

இதைக் கூறியபோது, தமது பெரு விரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, “இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் அஷ்யம் (ரலி),

நூல் : (முஸ்லிம்: 5229)

“தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓதவேண்டிய ஒரு பிரார்த் தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது “அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன். வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த ஃபஃக்ஃபிர்லீ மஃஹ்பிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அனத்தல் ஃகஃபூருர் ரஹீம்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

(பொருள்: இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவராலும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு வாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நீ மன்னிப்பவனும் கருணை யாளனுமாவாய்.)

அறிவிப்பாளர் : அபூபக்ர் (ரலி),

நூல் : (புகாரி: 6326)

கப்ருக்கு அருகில் சென்று அங்கு கைகளை உயர்த்தி துஆச் செய்யலாமா?

கப்ரில் அடங்கி இருப்பவர்களுக்காக கைகளை உயர்த்தி பிரார்த் தனை செய்யலாம். இதற்கு நபிமொழிகளில் நேரடிச் சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் பகீவு என்றபொது மையவாடிக்குச் சென்று நீண்ட நேரம் இருந்தார்கள். அப்போது அங்கு அடங்கியிருப்பவர்களாக் காக இரு கைகளையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள்.

நூல் : (முஸ்லிம்: 1774)

தர்மமும் துஆவும் விதியை மாற்றுமா?

இவ்வுலுகில் எந்த காரியம் நடந்தாலும் அது அல்லாஹ்வின் விதி யின் அடிப்படையில்தான் நடக்கிறது என்பதற்கு ஏராளமான திருக்குர் ஆன் வசனங்களும் நபிமொழிகளிலும் உள்ளன.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில்இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

(அல்குர்ஆன்: 57:22)

(முஹம்மதே) வானத்திலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிகி றான் என்பதை நீர் அறியவில்லையா? இது பதிவேட்டில் உள்ளது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

(அல்குர்ஆன்: 22:70)

இதே கருத்தில் உள்ள நபிமொழி:

அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான் என்றநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி),

நூல் : (முஸ்லிம்: 5160)

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது எந்த செயல் நடந்தாலும் விதியின் அடிப்படையில்தான் நடக்கிறது என்பதை அறியலாம்.

என்றாலும் பிரார்த்தனை விதியை மாற்றும் என்று நபிமொழியும் இருக்கிறது. ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல.

துஆவைத் தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. வாழ்நாளை நற்செயல்களை அதிகப்படுத்தும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (திர்மிதீ: 2065)

இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபூ மவ்தூத் என்பவர் பலவீனமானவர் ஆவார்.

தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும், மேலும் கெட்ட மரணத்தைவிட்டும் தடுக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : (திர்மிதீ: 600)

இச்செய்தி இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஈஸா அல்கஸ்ஸார் என்பவர் பலவீனமானவர் ஆவார்.

என்றாலும் இதே கருத்தில் வேறுசில ஆதாரப்பூர்வமான செய்தி களும் உள்ளன.

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : (புகாரி: 2067)

உறவினருடன் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்நாள் அதிகாரிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது விதிக்கு மாற்றம் என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது.

ஒருவர் அதிக காலம் வாழ்வார் என்று விதியில் இருந்தால் அல்லாஹ் அவரை உறவினர்களுடன் சேர்ந்து வாழும் நிலையை ஏற்படுத்துவான் என்று விளங்கிக் கொண்டால் எந்த மோதலும் வராது.