09) ஒவ்வொரு மாதமும் லைலத்துல் கத்ர்?
லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவைப் பற்றி இஸ்லாமியர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. அனைத்து முஸ்லிம்களும் இதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
வருடந்தோறும் ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் களை கட்டுவதும், ஜும்ஆ தொழுகைக்கு வராதவர்கள் கூட ரமலான் மாதத்தில் அதிலும் குறிப்பிட்ட நாட்களில் பள்ளிவாசலில் வந்து நிரம்புவதும் இதை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் சான்றுகளாகும்.
ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவின் பாக்கியத்தைப் பெறுவதற்காகவே முஸ்லிம்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.
ரமலான் மாதத்தில் தான் புனித மிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது என்பதை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்தக் கருத்தை பல ஹதீஸ்களில் பிரதிபலித்துள்ளார்கள்.
இதைத் தாண்டி எந்த முஸ்லிமும் ரமலான் அல்லாத மாதங்களில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது என்று கூற முன்வர மாட்டான். ஷஃபான் மாதத்தில், ரபீஉல் அவ்வல் மாத்தில் லைலத்துல் கத்ர் உள்ளது என்று ஒருவன் கூறினால் அவனை முட்டாள் என்றே அனைவரும் கூறுவோம்.
ஆனால் இத்தகைய முட்டாள்தனமான கருத்தை ஒரு அறிஞர் (?) கூறுகிறார் என்றால் அவரை, அவருடைய கருத்தை என்னவென்பது? இது தொடர்பான விவரம் பின்வருமாறு:
நான் கூறுகிறேன் (நூலாசிரியர்): முஹ்யித்தீன் இப்னுல் அரபி தனது ஃபுதூஹாதுல் மக்கிய்யா என்ற நூலில் கூறிய கருத்து இக்கருத்தை வலுப்படுத்துகிறது. அவர் கூறியதாவது:
மக்கள் லைலத்துல் கத்ர் இரவு தொடர்பாக அதனுடைய காலத்தில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். சிலர் வருடம் முழுவதிலும் அது சுற்றிவருகிறது என்று கூறுகின்றனர். இவ்வாறே நானும் கூறுகிறேன். நான் அதை ஷஃபான் மாதத்தில் பார்த்தேன். ரபீஉ மாதத்தில், மேலும் ரமலான் மாதத்திலும் பார்த்தேன். மிக அதிகமாக ரமலானில் அதன் இறுதி பத்தில் பார்த்தேன். மேலும் ஒரு முறை ரமலானின் நடுப்பத்தில் ஒற்றைப்படை இரவல்லாத நாளில் பார்த்தேன். அதில் ஒற்றைப்படையிலும் பார்த்தேன். நான் உறுதியாக கூறுகிறேன்: அது (லைலத்துல் கத்ர்) வருடம் முழுவதிலும் மாதத்தின் ஒற்றைப்படை, ஒற்றைப்படையல்லாத நாளிலும் சுற்றிவருகிறது.
நூல்: ரத்துல் முக்தார்
பாகம் 8 பக்கம் 98
ரத்துல் முக்தார் என்ற நூலின் ஆசிரியர் லைலத்துல் கத்ர் இரவு எப்போது என்பது தொடர்பாக இப்னுல் அரபி என்பவரின் கருத்தைத் தனது நூலில் பதிவு செய்திருக்கின்றார். அதன் மொழியாக்கத்தை மேலே தந்துள்ளோம்.
லைலத்துல் கத்ர் இரவு தொடர்பாக இப்னுல் அரபி கூறியது பல கோணங்களில் அலசப்படவேண்டிய கருத்தாகும்.
லைலத்துல் கத்ர் இரவில் தான் திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது என்றும், அது ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்பதையும் இறைவனும் இறைத்தூதரும் நன்கு விளக்கி விட்டார்கள். இதற்குப் பிறகு ஏனைய மாதத்தில் இருப்பதாக ஒரு முஸ்லிம் நம்புவது மிகப் பெரிய பாவம், அறியாமையாகும். ஆனால் இப்னுல் அரபி, வருடத்தின் அனைத்து மாதத்திலும் லைலத்துல் கத்ர் வருகிறது என்கிறார். எல்லா மாதத்திலும் லைலத்துல் கத்ர் உள்ளது எனில் ரமலான் மாதத்தில் புனித மிக்க இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று இறைவன் கூறியதற்கு என்ன பொருள்?
மேலும் இக்கருத்தை அவர் கூறிய விதம் படிப்போருக்கு திமிர்த்தனம் என்றே எண்ணத் தோன்றும். எல்லா மாதத்திலும் லைலத்துல் கத்ர் இருக்கிறது என்று சொல்வதோடு நின்றுவிடாமல் எல்லா மாதத்திலும் தான் அதைப் பார்த்ததாகக் கூறுகிறார்.
மேலும் லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றப்படை இரவில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: “ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
மேலும் பல செய்திகளில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்னுல் அரபி ஷஃபான் மாதம், ரபீஉல் அவ்வல் மாதம், ஒற்றைப்படை, இரட்டைப்படை என எல்லா இரவிலும் லைலத்துல் கத்ர் இரவை கண்ணால் பார்த்ததாகக் கூறுகிறார்.
இறைவன் ஏற்படுத்திய ஒன்று அவன் நிர்ணயித்த நாளுக்கு மாற்றமாக ஒரு போதும் நிகழாது என்பதில் உண்மையான முஸ்லிமிற்கு ஊசி முனையளவும் சந்தேகமிருக்காது. லைலத்துல் கத்ரை ரமலான் மாதத்தின் இறுதிப் பத்தில் ஒற்றைப் படை நாள்களில் தான் இறைவன் நிர்ணயித்துள்ளான். இறைவன் நிர்ணயித்த இந்த நாளுக்கு மாற்றமாக லைலத்துல் கத்ரை யாரும் காண முடியாது. மீறி ஒருவர் தான் பார்த்ததாகக் கூறுவாரெனில் அது வடிகட்டிய பொய் என்பது உறுதி.
இந்த இப்னுல் அரபி, இறைவன் நிர்ணயித்ததற்கு மாற்றமாக, தான் பார்த்ததாகக் கூறுகிறார் என்றால், அதிலும் எல்லா மாதத்திலும், எல்லா நாட்களிலும் லைலத்துல் கத்ரை நான் பார்த்தேன் என்று கூறுகிறார் எனில் இது சந்தேகமற திமிர்த்தனமே தான்.
இறுதியில் அவர் கூறிய வார்த்தையை வாசகர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றோம்.
நான் உறுதியாகக் கூறுகிறேன் அது (லைலத்துல் கத்ர்) வருடம் முழுவதிலும் மாதத்தின் ஒற்றைப்படை, ஒற்றைப்படையல்லாத நாளிலும் சுற்றிவருகிறது.
இக்கருத்தை ஒன்றுக்குப் பலமுறை வாசித்துப் பாருங்கள். இதை திமிர்த்தனம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல? இது போன்ற திமிர்த்தனமான விளக்கம் (?) மார்க்கத்தை நன்கு விளங்க உதவுமா? என்பதற்கு இதை ஆதரிப்போர் பதில் சொல்லட்டும்.
படைத்த இறைவனையே ஓவர் டேக் செய்யும் விதமான கருத்துக்களைக் கூறுவது “இமாம்கள்’ என்பதால் இந்த ஆலிம்கள் அதைக் கண்டு கொள்ளாமல் வாய்மூடி மௌனிகளாக இருப்பார்களா? மௌனமாக இருப்பது ஒரு ரகம் என்றாலும் சிலர் இக்கருத்தைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து, ஆஹா ஓஹோ என்று புகழ்பாடுவதைக் கிஞ்சிற்றும் சகிக்க முடியவில்லை. இவர்கள் யாவரும் இறைவனை, இறைத் தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் மாபாதகச் செயலில் ஈடுபடுகிறவர்கள். இதனால் இறைவனுக்கு எவ்வித இழிவும் இல்லை. எனினும் இறைவனை, இறைத் தூதரை அவமதிப்போரின் கதி அதோ கதி தான்.
மேலும் ரத்துல் முக்தாரின் நூலாசிரியர் இது தொடர்பாகக் குறிப்பிடும் போது,
இதில் அறிஞர்களுக்குப் பல கருத்துக்கள் உள்ளன. அவை சுமார் நாற்பத்தாறு கருத்துக்களாகும். (என்று கூறுகிறார்.)
லைலத்துல் கத்ர் தொடர்பாக இமாம்களுக்குப் பல கருத்துக்கள் உள்ளனவாம். அவை மொத்தம் 46 கருத்துக்களாம்? இப்னுல் அரபியின் கருத்தை மட்டுமே நாம் விமர்சித்து எழுதியுள்ளோம். மற்ற இமாம்களுடைய அந்த 46 கருத்துக்களை நாம் குறிப்பிடவில்லை. அவற்றைக் குறிப்பிட்டால் நம்மில் பலர் கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டி வரும் என்பதைக் கவனத்தில் கொண்டு அதைத் தவிர்த்திருக்கிறோம்.
இறைவனும், இறைத்தூதரும் தெளிவாகக் கூறிவிட்ட பிறகு அதில் இரண்டாவது கருத்திற்கே இடமில்லை எனும் போது 46 கருத்துக்கள் எவ்வாறு தோன்றியது.? இறைவனுடைய வார்ததையை விளக்க இறைவன் நியமிக்கும் இறைத்தூதரைத் தவிர வேறு எந்த இமாம்களும் தேவையில்லை. இதை மீறி இமாம்களின் விளக்கங்களை நாடினால் குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
இஸ்ரவேல் சமுதாயத்தை அடிமைகளைப் போன்று அடக்கி ஆட்சி செய்து, தன்னைத் தானே கடவுள் என்றும் பிதற்றிக் கொண்டிருந்த கொடுங்கோல் மன்னன் ஃபிர்அவ்ன்.
ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து காக்கவும், ஃபிர்அவ்ன் என்பவன் கடவுள் கிடையாது; அவனையும் அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனே கடவுள் என்ற ஏகத்துவக் கொள்கையை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் இச்சமுதாயத்திற்கு இறைத்தூதராக மூஸா (அலை) அவர்களை இறைவன் அனுப்பினான்.
சிலர் மூஸா போதித்த கொள்கையை ஏற்றார்கள். ஃபிர்அவ்னின் தரப்பிலிருந்து பல இன்னல்கள் மின்னல்களாக மூஸா மற்றும் அவரை நம்பிக்கை கொண்டோரையும் தாக்கிய வண்ணம் இருந்தன. மூஸா (அலை) பல்வேறு சோதனைக்கிடையில் தமது தூதுப்பணியைத் தொய்வின்றி தொடர்ந்தார்கள்.
முடிவில் மூஸா மற்றும் அவரை நம்பிக்கை கொண்டோரைக் கொல்வதற்காக அணி திரண்டு ஃபிர்அவ்ன் வந்தான். அவர்களை விரட்டினான். அவர்களிடமிருந்து தப்பிக்க மூஸா (அலை) அணியினர் ஓடினர். வழியில் கடல் இடைமறிக்கும் போது இறைவன் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு ஏதுவாக கடலில் பாதைகளை ஏற்படுத்தினான். அதே கடல் பாதையில் ஃபிர்அவ்ன் தனது அணியினருடன் செல்ல முனைகையில் இறைவன் கடல் நீரில் மூழ்கச் செய்து அவர்களை அழித்தான். இது மூஸா (அலை), ஃபிர்அவ்ன் ஆகிய இருவரைப் பற்றிய திருக்குர்ஆன் கூறும் உண்மை வரலாறு.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்” என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.
மனிதர்களின் வரம்பு மீறிய குற்றத்துக்காக இறைவனின் வேதனை சம்பவிக்கும் நேரத்தில் யார் நம்பிக்கை கொண்டாலும் அவரது நம்பிக்கை இறைவனால் ஏற்கப்படாது. இத்தகைய நேரத்தில் ஃபிர்அவ்ன் நம்பிக்கை கொண்டதால் அவனுடைய நம்பிக்கை பலனளிக்காமல் போனது, மேலும் இறைவனின் தண்டனைக்குரியவனாய் ஆனான். அந்நேரத்தில் தன்னை முஸ்லிம் என்று அவன் சொல்லிக் கொண்டாலும் இறைவன் அவ்வாறில்லை என்று மறுக்கின்றான். திருக்குர்ஆன் கூறும் இவ்வரலாற்றின் மூலம் ஃபிர்அவ்ன் எத்தகையவன் என்பதை அறியலாம்.
ஃபிர்அவ்ன் முஸ்லிமல்ல என்பது ஆய்வுக்குரிய விஷயமல்ல. பச்சிளங்குழந்தையும் அறிந்த விஷயம். குர்ஆன் கூறும் வரலாற்று உண்மை. இமாம்கள் என்போர் இதிலும் தங்களின் விளையாட்டை விளையாடியுள்ளனர்.
ஃபிர்அவ்னின் கண் குளிர்ச்சி, (அவன்) மூழ்கும் வேளையில் இறைவன் அவனுக்கு வழங்கிய இறை நம்பிக்கையில் உள்ளது. தூய்மையானவனாகவே அவனை இறைவன் கைப்பற்றினான். அவனிடம் எந்தத் தீமையும் இல்லை. ஏனெனில் அவன் எந்தத் தீமையையும் செய்யும் முன் நம்பிக்கை கொண்ட வேளையில் அவனைக் கைப்பற்றினான். இஸ்லாம் அதற்கு முன்பே (ஏற்றுக் கொள்வது) அவசியமாகும். மேலும் அல்லாஹ்வின் அருளில் யாரும் நிராசையாகி விடக்கூடாது என்பதற்காக தான் நாடியோருக்கு இறைவன் அவனை தன் பாதுகாப்பின் அடையாளமாக ஆக்கினான். இறைவனை நிராகரிக்கும் கூட்டத்தாரைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் அருளில் நிராசையடைய மாட்டார். ஃபிர்அவ்ன் நிராசை அடைந்தவர்களில் ஒருவனாக இருந்தால் இறைநம்பிக்கையை நோக்கி விரைந்திருக்க மாட்டான்.
நூல்: ஃபுஸுசுல் ஹுக்ம்
பக்கம் 20 21
ஃபிர்அவ்ன் இறையருளில் நிராசை அடையவில்லை; எனவே தான் இறை நம்பிக்கை கொண்டான் என்பதை இங்கு அழுத்தமாகக் கூறுகிறார் ஒரு அறிஞர். இறை நம்பிக்கையில் தான் ஃபிர்அவ்னின் கண் குளிர்ச்சி உள்ளது என்று சொல்வதன் மூலம் ஃபிர்அவ்னை முஸ்லிம் என்று கூறுகிறார்.
எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கொஞ்சமும் யூகிக்க முடியவில்லை. ஃபிர்அவ்ன், நான் முஸ்லிம் என்று கூறும்போது இறைவன் இப்போது தான் நம்பிக்கை கொள்வாயா? என்று வினா எழுப்பி இது நம்பிக்கையாகாது என்று உணர்த்துகின்றான். இந்த வசனத்தைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் வாயில் வந்ததை விளக்கம் என்ற பெயரில் (உளறி) கொட்டியுள்ளனர்.
பொதுவாக இறைவனுடைய தண்டனையைக் காணும் வேளையில் மனிதர்கள் நம்பிக்கை கொள்வது மனித இயல்பு. இதனால் ஒருவரை இவர் இறையருளில் நம்பிக்கை கொண்டவர், முஸ்லிம் என்று அங்கீகரிக்க இயலாது. இவ்வேளையில் நம்பிக்கை கொள்வதை இறைவன் ஏற்றுக் கொள்ளாததே காரணம். இறைவன் யாருடைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லையோ, யாரை முஸ்லிம் என்று அங்கீகரிக்கவில்லையோ அவரை முஸ்லிமாக ஏன் சித்தரிக்க வேண்டும்? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?
ஃபிர்அவ்ன் நம்பிக்கை கொண்டான் எனினும் இது இறைவனிடத்தில் பலனிக்காத நம்பிக்கை என்று இந்த இமாம்கள் விளக்கியிருக்கலாம் அல்லவா? அதை விடுத்துவிட்டு ஃபிர்அவ்ன் மாதிரி முஸ்லிம் இல்லை. மற்ற முஸ்லிம்களுக்கு ஃபிர்அவ்ன் ஒரு மிகச் சிறந்த முன்மாதிரி என்ற ரேஞ்சுக்கு விளக்கமளித்துள்ளனர்.
எந்த அடிப்படையில் ஃபிர்அவ்னை முஸ்லிமாக வர்ணித்தனர் என்பது இமாம்களுக்கே வெளிச்சம், ஃபிர்அவ்னை முஸ்லிமாக வர்ணிக்கும் இமாமின் இவ்வாக்கியங்கள் குர்ஆனுடன் போரிடும் வார்த்தைகளாகும் என்பதைப் பதிவு செய்கிறோம்.
அல்கலம் என்ற அத்தியாயத்தின் (68) துவக்கத்தில் நூன் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. தனி எழுத்துக்களுக்கு எந்தப் பொருளும் இல்லை. அவை ஒரு வாக்கியமாக வரும் போது தான் அதற்கென்று பொருள் கிடைக்கும். எனினும் இவ்வாறு தனித்தனி எழுத்துக்களைக் குறிப்பிடுவது அரபுகளின் வழக்கமாகும். அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம் பெறும் இது போன்ற எழுத்துக்களுக்குரிய விளக்கத்தை முந்தைய தொடரில் விரிவாக குறிப்பிட்டுள்ளோம். (இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அதைப் பார்வையிடவும்)
இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம்:
நூன் என்றால் மைக்கூடு என்பதாகும் என்று கதாதா, ஹஸன் விளக்கமளிக்கின்றனர்.
தனி எழுத்துக்களுக்கு எந்தப் பொருளும் இல்லை எனும் போது இவர்கள் மைக்கூடு என்று கூறுகிறார்கள். திடீரென்று ஏன் மைக்கூடு என்ற பொருளைக் கொடுக்கின்றார்கள் என்று யோசிக்கிறீர்களா?
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் இறைவன் சத்தியம் செய்கின்றான். ஆக எழுதுகோல், எழுதப்படும் பொருள் இரண்டைப் பற்றி கூறப்படுவதால் மீதம் இருப்பது மை ஒன்று தான். எனவே தான் “நூன்’ என்பதற்கு மைக்கூடு என்று பொருள் செய்கின்றனர்.
இங்கே நாம் கேட்பது நூன் என்பற்கு அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ இப்பொருளை எங்கேயாவது கூறியிருக்கின்றார்களா? அவரவர் இறைவனுடைய வார்த்தைக்கு ஏதேனும் பொருளை யூகம் செய்து கூறுவது குர்ஆனை அவமதிப்பதாகாதா?
ஒருவர் மைக்கூடு என்று யூகம் செய்தால் மற்றொருவர் எழுதுவதற்கு மனிதன் அவசியம் எனவே இறைவன் மனிதனை தான் நூன் என்று குறிப்பிடுகின்றான் என்று யூகம் செய்வார். இது இறைவனுடைய வார்த்தையில் விளையாடும் செயலாகும்.
ஏழாவது வானத்திற்குக் கீழுள்ள மீன் என்பதாக முஜாஹித் கூறுகிறார்.
அது பூமியை தாங்கும் மீன் (?) என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.
நூல்: அத்துர்ருல் மன்சூர்
பாகம் 14 பக்கம் 618
மேற்கண்ட விளக்கத்தை மிஞ்சும் வகையில் நூன் என்பதற்கு ஒருவர் மீன் என்கிறார். மற்றொருவர் பூமியை தாங்கும் மீன் என்று விளக்கம் அளிக்கின்றார். என்னே ஒரு கற்பனை..? ஆனால் இது ஹாலிவுட் சினிமா எடுப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர குர்ஆனை நன்கு விளங்க ஒரு போதும் உதவாது.
இமாம்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்களே! அவர்களிடத்திலும் தவறுகள் நிகழும் என்பதைத் தான் இது போன்ற விளக்கங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன.