09) ஒட்டும் இல்லை உறவும் இல்லை

நூல்கள்: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

ஹாஜரா (அலை) அவர்கள் வந்தவுடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாக ஆனது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் அழைப்பு பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

மெல்ல மெல்ல ஒவ்வொருவராக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர்.

இஸ்லாம் என்பது, தன்னைப் படைத்த இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டுச் சரணடைதல் ஆகும். இறைவனல்லாத மற்ற பொருட்களை விட்டும் முற்றிலும் விலகி விடுதலும் ஆகும் . இறைவனின் நீதியான சட்டதிட்டங்களுக்கு மனிதகுலம் கீழ்படியும் போது சுரண்டல்களில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் மக்கள் விடுதலை அடைகிறார்கள்.

இறை நம்பிக்கைகள் தான் மனித சமூகத்தை ஆள்கின்றன.

அது எத்தகைய நம்பிக்கையாகவும் இருக்கலாம். தம் தலைவர்கள் தமக்கு நன்மை தான் செய்வார்கள் என்று மக்கள் நம்பும் விதமாக ஒரு நம்பிக்கை அல்லது ஒரு சித்தாந்தம் அந்த சூழலில் கட்டமைக்கப் பட்டிருக்கும்.

எந்த ஒரு சமூகத்திலும் அதிகார வர்க்கம் என்று ஒரு குழு இருக்கும். அந்த சமூகத்தை சார்ந்த மற்ற மனிதர்கள் அவர்களுக்குக் கீழே அடிமைப்பட்டு இருப்பார்கள். சாமானிய மக்கள் சுரண்டப்பட்டு அதிகார வர்க்கம் கொழுக்கும்.

அந்த நம்பிக்கை அறுந்து விழும் போது, அதிகார மட்டம் தம் தலைமையை இழப்பார்கள்.

சிலை வழிபாடும் அத்தகைய ஒரு தலைமையை கட்டமைக்கும் நம்பிக்கை தான். கடவுளின் பெயரால் மக்கள் கீழ்ப்படிவார்கள். ஏவல்கள் சடங்குகளாக்கப்படும்; விலக்கல்கள் தெய்வ குத்தங்களாக பார்க்கப் படும்.

தலைவர்களது சுயநலனுக்கு தகுந்தவாறு, அல்லது மேல்வர்க்க மக்களுக்கு தகுந்தவாறு சட்டங்கள் இயற்றி அதற்கு கடவுள் பெயர் வைக்கப்படும். மக்கள் பயந்து கொண்டு இவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள் . மக்கள் எந்த வகையிலும் விழிப்புணர்வு பெற்று விடாமல் இருக்கும் அளவிற்கு மூட நம்பிக்கைகள் உருவாக்கி வைத்திருப்பார்கள்.

கடவுள் இல்லை என்ற நாத்திக கொள்கையும் அத்தகைய மூடநம்பிக்கைகளில் ஒன்று தானே தவிர அதில் உண்மை ஒன்றும் இல்லை. அதிகாரம் பெறுவதற்காகவே பொய்நம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன.

உண்மை இறைவனையும் , அவனது வல்லமைகளையும் மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார் இப்ராஹீம் (அலை). மக்கள் அனைவரும் சுயாமரியாதை உடையவர்களாகவும், பகுத்தறிவு உடையவர்களாகவும் மாற வேண்டும் என்பதே அவரது இலட்சியம்.

ஆனால் ,பெரும்பாலான மக்களுக்குத் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பது உரைப்பதே இல்லை . சுயநலமான எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதில் அவ்வளவு தீவிரம்!

அடிமைத் தனத்தில் மிக மோசமானது சிந்தனை அடிமைப்பட்டு இருப்பதாகும் . மூடத்தனங்களில் மூழ்கி சிந்தனை செயலற்று இருப்பதைக் கூட அவர்கள் அறிய முடியாமல் அவர்களது சிந்தனைகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்திருந்தன.

ஆடுகள் , தம்மைக் காக்க இருக்கும் காவலனை விரட்டிவிட்டு ஓநாயின் மடியில் தஞ்சம் அடைவது எத்தகைய மடமையோ , அந்த மக்களும் அவ்வாறே நடந்து கொண்டனர் .

அந்தச் சமூகத்தினர் தம்மை காக்க வந்த தூதர் தான் இப்ராஹீம் (அலை) என்பதைப் புறக்கணித்து , தம் சுயநலத் தலைவர்களுக்கும் , கற்சிலை தெய்வங்களுக்கும் அடிமையாய் இருப்பதைப் பேறாய் எண்ணினர்.

அவர்களது நம்பிக்கைகளுக்கு வெளியில், வேறொரு வாழ்க்கைப் பாதை இருக்கிறது; இவர்களது இருளான பாதை போலல்லாமல், அது ஒளிவீசி பிரபஞ்சமெங்கும் வியாபித்து இருக்கக் கூடிய பாதை;

அந்தப் பாதை அவர்களை கண்ணியப்படுத்தும்; வளம் சேர்க்கும்; பாதுகாப்பளிக்கும்; நீதியை நிலைநிறுத்தும்; உரிமைகளைப் பெற்றுத் தரும்; கடமைகளை பகிர்ந்தளிக்கும்; ஆதிக்கங்களிலிருந்து விடுதலையளிக்கும்; சிந்தனைகளை சீர் செய்யும்; இறைவன் அருள் பெற்றுத் தரும்;

அதை நோக்கித் தான் இப்ராஹீம் அழைத்தார். அவர்கள் புறக்கணித்தார்கள்; அவரை எள்ளி நகையாடினார்கள்; வைரத்தின் பெறுமதியைக் கோழிகள் அறிவதில்லை.

தமக்கு விடுதலை பெற்றுத் தர வந்த ஒரு மனிதரை அவமதித்து, தம் அடிமைத்தனத்தைப் பொருந்திக் கொண்டவர்களை விட நன்றி கொன்றவர்கள் யார் இருக்க முடியும்??

சத்தியம் இது தான் என்று தெரிந்தும், அதிகாரத்தின் இருப்பிடமாய் இருப்பதால் அசத்தியத்தின் பக்கம் நிற்பதை விட கோழைத்தனம் வேறு இருக்க முடியுமா??

இத்தகையவர்கள் மனிதகுலத்தின் விடுதலையை விட தமது சுயநலம் மட்டும் தான் பெரிது என்று வாழக்கூடிய ஒட்டுண்ணிகள்.

சுயநலவாதிகளும், நன்றிகெட்டவர்களும் மனித குலத்தின் துருவேறிய பாகங்கள். அவர்களால் எந்த நன்மையையும் விளையப் போவது இல்லை.

இத்தகைய மனிதர்களை முற்றிலும் புறக்கணிப்பதே உண்மைக்கு நாம் செய்யும் நன்மையாகும்.

இப்ராஹிமும் அவருடன் இருந்தவர்களும் அதைத் தான் செய்தார்கள்.

நமது உடல் பாகம் என்பதற்காக அழுகின பாகத்தையோ, புற்றுக் கட்டியையோ வெட்டி எரியாமல் இருக்க முடியாது.

இப்ராஹிமும் இறைநம்பிக்கையாளர்களும், தங்களை எதிர்த்த அடிமைச் சமூகத்தை அழைத்துச் சொன்னார்கள்,

“நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கத்தக்க இறைவனாக ,கட்டுப்படத்தக்க எஜமானனாக, எடுத்துக் கொண்டு சுயமரியாதை அடையும் வரைக்கும்,

அல்லாஹ்வை அன்றி நீங்கள் அடிமையாய் இருக்கும் ஒவ்வொன்றை விட்டும் நாங்கள் விலகி விட்டோம்;

உங்களையும் நிராகரித்து விட்டோம்;

நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்கும் வரை -உங்கள் சிந்தனை தெளியும் வரை – உங்களுக்கும் எங்களுக்கும் இடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் நீடித்து இருக்கும்;

உங்களுக்கும் எங்களுக்கும் இடையே எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை;”

விடுதலையைப் புறக்கணித்த அறிவற்ற அடிமைச் சமூகத்தை விட்டும் அனைவரும் ஒதுங்கினார்கள்.

வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள்.

தனியாக ஒரு சமூகமாக வாழத் தொடங்கினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை அடைந்த சமூகத்தின் சனத்தொகை பெருக ஆரம்பித்தது ..

அது ஒரு தனி ஊராக வளரத் தொடங்கியது..