09) அல்‌அகபா உடன்படிக்கை

நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவில்‌ இஸ்லாத்தை எடுத்துச்‌ சொன்ன போது அவர்களுக்கு மிகவும்‌
உதவியாக இருந்தவர்‌ அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப்‌. இவர்‌ தனது இறுதிக்‌ காலம்‌
வரை இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொள்ளவில்லை.

அபூதாலிபின்‌ மரணத்திற்கு பிறகு நபி (ஸல்‌) அவர்கள்‌ தாயிப்‌ நகரம்‌ சென்று பிரச்சாரப்‌ பணிக்கு
ஆதரவு கோரினார்கள்‌. ஆனால்‌ அங்கு ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும்‌ நபி (ஸல்‌)
அவர்கள்‌ மனம்‌ தளர்ந்து விடவில்லை. வெளியூர்களிலிருந்து மக்காவிற்கு வரும்‌ பயணக்‌
குழுக்களைச்‌ சந்தித்துப்‌ பிரச்சாரம்‌ செய்தார்கள்‌.

இந்நிலையில்‌ மதீனாவில்‌ அவ்ஸ்‌ மற்றும்‌ கஸ்ரஜ்‌ கூட்டத்தாரிடையே கடும்‌ போர்‌ மூண்டு இரு
தரப்பிலும்‌ பலத்த உயிர்ச்‌ சேதங்கள்‌ ஏற்பட்டிருந்தன. இதனால்‌ மதீனா வாசிகளின்‌ மனம்‌
அமைதிக்காக ஏங்கிக்‌ கொண்டிருந்தது.

இந்தச்‌ சூழ்நிலையில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரைச்‌
சந்தித்து சத்திய மார்க்கத்தை ஏற்குமாறு அழைக்க அவர்களும்‌ சம்மதித்து இஸ்லாத்தில்‌
இணைந்தார்கள்‌. இது மினாவிலுள்ள அல்‌அகபா என்ற இடத்தில்‌ நடைபெற்றது. அதன்‌ பிறகு அதே
அகபாவில்‌ ஓர்‌ இரவில்‌ மதீனாவைச்‌ சேர்ந்த ஒரு குழுவினர்‌, நபி (ஸல்‌) அவர்களிடம்‌ பைஅத்‌
செய்து இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொண்டார்கள்‌. இதற்கு அல்‌அகபா உடன்படிக்கை என்று பெயர்‌.
(புகாரி: 3892)

மக்காவில்‌ நபி (ஸல்‌) அவர்களும்‌ அவர்களது தோழர்களும்‌ பெரும்‌ துன்பங்களுக்கும்‌
சோதனைகளுக்கும்‌ ஆளாகிக்‌ கொண்டிருந்த அதே வேளையில்‌ மதீனாவில்‌ இஸ்லாம்‌ பரவத்‌ தொடங்கியது.