08) மரணத்தைப் பிராத்திக்கக் கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (;மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்)” என்று கூறினார்கள்.
மக்கள், “தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்) என்னையும்
தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, “எனவே, நீங்கள் நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 5673)
நாங்கள் கப்பாப் பின் அரத் (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தமது வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: முன்சென்று விட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாத நிலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்.)
நூல் : (புகாரி: 5672)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்றிருந்தால், “இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), (புகாரி: 5671)