08) மனிதன் சுமந்த அமானிதம்?

நூல்கள்: இப்படியும் சில தஃப்ஸீர்கள்

வானம், பூமி, மலை ஆகியவற்றுக்கு ஓர் அமானிதத்தைச் சுமக்குமாறு இறைவன் முன் வைத்திருக்கின்றான். ஆனால் அவைகள், இறைவன் முன்வைத்த அந்த அமானிதத்தைச் சுமக்க மறுத்து விட்டன. பிறகு மனிதன் அதைச் சுமந்து கொண்டான் என்று இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:72)

இறைவன் வானம், பூமி, மலைகளிடம் முன்வைத்த அந்த அமானத் (அமானிதம்) என்ன? என்பதை குறிப்பிட்டு குர்ஆனின் பிற வசனங்களிலோ, நபிமொழிகளிலோ விளக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வசனத்தைச் சற்று சிந்தித்து பார்த்தால் அந்த அமானிதம் எது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

மனிதனுக்கும், மனிதன் அல்லாத வானம், பூமி, மலைகள் போன்றவற்றுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் பகுத்தறிவு தான். பகுத்தறிவு விஷயத்தில் தான் மனிதன் இவற்றிலிருந்து வேறுபடுகின்றான். மனிதன் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுத்து தனக்கு விருப்பமானவற்றைச் செய்யவும், தனக்கு விருப்பமில்லாதவற்றைச் செய்யாமலிருக்கவும் ஆக சுயமாகச் செயல்படும் ஆற்றலை இந்தப் பகுத்தறிவு மூலம் பெற்றிருக்கின்றான்.

ஆனால் மற்றவைகள் அவ்வாறல்ல. மனிதன் அல்லாத மற்றவைகளுக்கு சுயமாகச் செயல்படும் ஆற்றலில்லை. எனவே தான் எந்த மலையும் தமக்கு விருப்பமான இடத்தை நோக்கி நகர்ந்து செல்வதையும், சூரியன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் உதிக்கும் காட்சியையும் காண முடிவதில்லை. மனித சமுதாயம் ஒன்றே சுயமாகச் சிந்தித்து செயல்படும் பகுத்தறிவைப் பெற்றிருக்கின்றது.

எனவே மனிதன் சுமந்து கொண்ட அமானிதம் பகுத்தறிவு தான் என்ற முடிவுக்கு வரலாம். இதனடிப்படையில் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமானத் என்ற பதத்துக்கு பகுத்தறிவு என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாக அமைகின்றது. இதுவல்லாத வேறு பொருள் கொள்வதாக இருந்தால் அது பொருத்தமானதாகவும். இஸ்லாத்தில் உள்ள வேறு எந்த விஷயத்தினுடனும் மோதாததாகவும் அமைய வேண்டும்.

இவ்வசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற அமானிதத்திற்கு இமாம்கள் வழக்கம் போல் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்கள். எனினும் பின்வரும் விளக்கத்தை மிஞ்சும் வகையில் யாரும் விளக்கமளிக்கவில்லை என்பதைப் படிக்கும் போதே புரிந்து கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் கூறுகிறார்: மனிதனிடம் இறைவன் படைத்த முதலாவது ( உறுப்பு ) அவனது மறை உறுப்பாகும். அதன் பின் இறைவன், “இது உன்னிடம் உள்ள என்னுடைய அமானிதம். அதற்குரிய உரிமையிலே அதை பயன்படுத்து. வீணாக்கி விடாதே” என்று கூறினான்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 12, பக்கம் 161

எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பற்றி இங்கே கூறப்படுகின்றது என்பதைப் பொருட்படுத்தாமல் அந்த அமானிதம் மறை உறுப்பு என்கிறார். இதற்கு ஒரு சம்பவம் வேறு. இறைவன் மனிதனுக்கு முதலில் மறை உறுப்பைப் படைத்து விட்டு, இதுவே நான் தந்த அமானத் என்றானாம். இதை இவர்கள் எங்கே படித்தார்கள்? யாரிடமிருந்து கற்றார்கள்? இந்த விளக்கம் கொஞ்சமும் பொருத்தமற்றது, கேலிக்கூத்தானது என்பதைச் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்

அந்த அமானிதம் மார்க்கம் என்பதாகும் என லிஹ்ஹாக் என்பார் கூறுகிறார்.

கடமைகள் என்று ஸயீத் பின் ஜுபைர் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 12, பக்கம் 161

இவ்விரு இமாம்களும் இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அமானிதம் மார்க்கம், கடமைகள் என்கின்றனர். இதுவும் பொருத்தமற்ற பொருளே. ஏனெனில் இந்தப் பொருளின் படி வானம், பூமி, மலைகளுக்கு இறைவன் தன்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தான் விதித்த கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என முன்வைக்கின்றான், இதனை ஏற்க அவை மறுக்கின்றன என்று பொருளாகும்.

வானம், பூமி, மலைகள் தான் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனவே! இறைவன் அவற்றுக்கு என்ன மார்க்கத்தை, வழியைச் சொல்லியிருக்கிறானோ அதனடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே!

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன. (அல்குர்ஆன்: 13:15)

இவ்வாறிருக்கும் போது இறைவன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை முன்வைக்கும் போது இதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. தாம் ஏற்கனவே புரிந்து கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவையுமில்லை. இவ்வசனத்தின் மூலம் மேற்கண்ட இமாம்கள் அளித்த விளக்கங்கள் தவறு என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் அந்த அமானிதமா?

இன்னும் சிலர் இறைவன் எடுத்துக் காட்டி, மனிதன் சுமந்து கொண்ட அமானிதம் திருக்குர்ஆன் தான் என்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வதற்குப் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். (அல்குர்ஆன்: 59:21)

இந்த வசனத்தில் இறைவன் குர்ஆனை மலையின் மீது இறக்கியிருந்தால் அது நொறுங்கியிருக்கும் என்பதாகத் தெரிவிக்கின்றான். எனவே இறைவன் மலைக்கு வழங்காமல் மனிதனுக்கு வழங்கியது இந்தக் குர்ஆனைத் தான் என்பது இவர்களின் விளக்கம். இதுவும் தவறான விளக்கமே. இந்த வசனத்தை நன்கு கவனித்தால் புரிய வரும்.

மலையின் மீது குர்ஆனை இறங்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடும் என்றால், குர்ஆனை அந்த மலை ஏற்றுக் கொண்டது என்று பொருள். குர்ஆன் தான் அமானிதம் என்றால் 33:72 ஏற்க மறுத்ததாகக் கூறுவதற்கு இது முரணாகி விடும்.

மேலும் 59:21 வசனத்தில் இறைவன் நடக்காத விஷயத்தைச் சொல்லி அது நடந்தால் எவ்வாறிருக்கும் என்பதையே கூறுகின்றான். மலையின் மீது குர்ஆனை நாம் இறக்கவில்லை. அப்படி இறக்கியிருந்தால் எப்படியிருக்கும் என்பதை விளக்குகின்றான்.

ஆனால் 33:72 வசனத்தில் நடந்த சம்பவத்தை இறைவன் தெரிவிக்கின்றான். அதாவது வானம், பூமி, மலை ஆகியவற்றுக்கு அமானிதத்தைச் சுமந்து கொள்ளுமாறு இறைவன் முன் வைத்ததையும், அதை அவைகள் ஏற்க மறுத்தன என்று நடந்த சம்பவத்தைத் தெரிவிக்கின்றான். எனவே அந்த அமானிதம் குர்ஆன் என்று விளக்கமளிப்பது சரியல்ல என்பதை அறியலாம்.

பாக்கியாதுஸ் ஸாலிஹாத்

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன்: 18:46)

உலகில் உள்ள மக்கள் யாவரும் இரண்டு செல்வத்தைப் பெரிதும் விரும்புவார்கள். ஒன்று பொருளாதாரம் எனும் செல்வம். மற்றொன்று மக்கள் செல்வம். இதில் பொருளாதாரம் எனும் செல்வத்தை அதிகளவில் திரட்ட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அதை அடைவதையே முழு நேரப் பணியாகப் பலரும் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வுலகில் நாம் திரட்டுகின்ற இந்தப் பொருளாதாரமும், நாம் பெற்றிருக்கும் மக்கள் செல்வமும் நிலையானதல்ல. இவ்விரண்டும் இவ்வுலகத்துடன் முடிந்து விடக்கூடியது, இவற்றின் மூலம் மறுமையில் எதையும் நாம் சாதிக்க முடியாது என்பதை இறைவன் இவ்வசனத்தின் வாயிலாக மனிதர்களுக்கு உணர்த்துகின்றான்.

மேலும் இவ்வுலகில் நாம் புரியக்கூடிய நல்லறங்களே நிலையான செல்வங்கள், இதன் மூலமே மறுமையில் இறைவனிடம் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடியும் என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றான்.

நிலையான நல்லறங்கள் என்பதை அரபியில் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் என்று குறிப்பிடப்படும். அதாவது இவ்வுலகில் உள்ள செல்வங்கள் யாவும் இவ்வுலகிலேயே அழிந்து போகக்கூடியது. நல்லறங்கள் மாத்திரமே மறுமை வரையிலும் பின்தொடர்ந்து நிலைத்து நிற்கக்கூடியது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது.

இறைவன் கூறிய அந்த பாக்கியாதுஸ் ஸாலிஹாத் எது என்பதில் இமாம்கள் அளித்துள்ள விளக்கத்தை இப்போது காண்போம்.

பாக்கியாதுஸ் ஸாலிஹாத் என்பது கடமையான தொழுகைகளாகும் என அம்ர் பின் ஷுர்ஹபீல் கூறுகிறார்.

உஸ்மான் அவர்களிடம் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் எவை? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அவை, லாயிலாஹ இல்லல்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று பதிலளித்தார்கள்.

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லாஹு அக்பர் ஆகியவைகள் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஆகும் என முஜாஹித் கூறுகிறார்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 15, பக்கம் 274, 276, 277

பாக்கியாதுஸ் ஸாலிஹாத் எது என என்னிடம் ஸயீத் பின் முஸய்யப் கேட்டார். நான் தொழுகையும் நோன்பும் என்று கூறினேன். அதற்கு அவர் நீ சரியாகச் சொல்லவில்லை என்றார். பிறகு ஜகாத்தும் ஹஜ்ஜும் என்றேன். அதற்கும் நீ சரியாகக் கூறவில்லை என்று சொல்லி அவைகள் லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்ற ஐந்து வார்த்தைகளாகும் என்று கூறினார் என உமாரஹ் பின் ஸய்யாத் என்ற அறிஞர் கூறுகிறார்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 1, பக்கம் 279

மேற்கண்ட விளக்கங்களில் நிலையான நல்லறங்கள் என்பது சில இமாம்கள் தொழுகை என்கிறார்கள். மற்றொருவர் தொழுகை, நோன்பு ஆகியவை நிலையான நல்லறங்களில் சேராது. குறிப்பிட்ட ஐந்து வார்த்தைகள் மட்டுமே பாக்கியாதுஸ் ஸாலிஹாத் என்கிறார். தொழுகை, திக்ர், நோன்பு, இது போன்ற நாம் புரியக்கூடிய அனைத்து நன்மையான காரியங்களும் நிலையான நல்லறங்களே. இறை வார்த்தையில் சொல்வதென்றால் பாக்கியாதுஸ் ஸாலிஹாத்களே. இதைப் புரியாமல் இமாம்கள் விளக்கமளித்துள்ளனர் என்று நமக்குப் புரிகின்றது.

ஸாஹிரா என்பதின் பொருள்

சூர் ஊதப்படும் நாளில் என்ன நிகழும் என்பதை இறைவன் 79வது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகின்றான். அதைப் பற்றிக் கூறும் போது முதல் சூர் ஊதப்பட்டுவிட்டால் மக்கள் யாவரும் வெட்ட வெளியில் நிற்பார்கள் என்று இறைவன் கூறுகின்றான்.

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள். (அல்குர்ஆன்: 79:14)

வெட்ட வெளி என்பதை குறிப்பதற்கு இறைவன் ஸாஹிரா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். ஏனைய தர்ஜுமாக்களிலும் ஸாஹிரா என்பதற்கு இவ்வாறே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இமாம்கள் ஸாஹிரா என்பதற்குக் கூறும் பொருள்? வழக்கம் போல ஏறுக்குமாறாகத் தான் கூறியுள்ளனர்.

வஹ்ப் பின் முனப்பஹ் என்ற அறிஞர் ஸாஹிரா என்பது பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள மலை என்று கூறுகின்றார்.

உலகம் அழிக்கப்படும் நாளில் சூர் ஊதப்படுவதைப் பற்றி விளக்கும் போது பைத்துல் முகத்தஸைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன? இறைவன் கூறிய வசனத்தில் உலக மக்கள் யாவரும் ஸாஹிராவில் அதாவது வெட்ட வெளியில் நிற்பார்கள் என்று உள்ளது. இமாம் அளித்த இந்த விளக்கத்தின் படி பார்த்தால் உலக மக்கள் யாவரும் சூர் ஊதப்பட்ட பிறகு பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள மலையில் நிற்பார்கள் என்பது பொருளா? இவ்வாறு நபிகள் நாயகம் எங்காவது கூறியுள்ளார்களா? எவ்விதத் தொடர்பும் இன்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த விளக்கத்தைச் தூக்கிச் சாப்பிடும் அளவிற்குப் பின்வரும் விளக்கம் அமைந்துள்ளது.

அப்போது நரகில் இருப்பார்கள் என்று கதாதா கூறுகின்றார்.

சூர் தானே ஊதப்பட்டுள்ளது. அதற்குள் எப்படி அனைவரும் நரகம் செல்ல முடியும்? சூர் ஊதப்பட்ட பிறகு வெட்ட வெளியில் நிற்கும் பல நல்லவர்களும் சேர்ந்து நரகில் சென்று விடுவார்களா? என்பன போன்ற பல தவறான கருத்துக்களை உள்ளடக்கியதாக இவ்விளக்கம் அமைந்துள்ளது.