08) பேராசை

நூல்கள்: இஸ்லாம் கூறும் பொருளியல்

முதியவர்களும் செல்வத்தை விரும்புவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 6420, 6421)

பேராசை ஏன்றால் என்ன?

நம்மீது உள்ள அனைத்துக் கடமைகளையும் பின் தள்ளிவிட்டு, செல்வம் ஒன்று மட்டும் தான் நோக்கம் என்று சென்றால் அது தான் போராசை.

எதிர் காலத்தைக் கவனிக்காமல், இறைவனை வணங்காமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பிறர் நலம் நாடாமல், ஏழைக்கு தர்மம் செய்யாமல் கடமைகளை விட்டு விட்டு செல்வத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் அப்போது தான் போராசை கொள்கிறோம்

சுலைமான் நபிக்கு அதிகமாக அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். ஆனால் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் அவர் விலகவில்லை.

பணத்தை அதிகமாக வைத்துக் கொள்ளலாம். இஸ்லாம் எதைச் சொல்கிறதோ அதைச் செய்யாமல் செல்வத்தைத் தேடக் கூடாது.

பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல், குழந்தையை நமது பார்வையில் வளர்க்காமல் வெளிநாட்டுக்குச் செல்வது கூடப் பேராசை தான்.

பொருளாதாரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தேடலாம். ஆனால் வணக்கத்தை விட, மனைவியை விட, குழந்தையை விட மேலானது என்று நினைக்கக் கூடாது.

உள்ளத்தைப் பக்குவப்படுத்துதல்

மனிதனின் உள்ளம் எப்படிப்பட்டது என்றால் எந்த பொருளாகயிருந்தாலும் இது என்னுடையது, இது என்னுடையது என்று சொல்கிறான். ஆனால் உலகத்தில் பல இடங்களில் அவனுக்குச் சொத்து இருக்கும். அதனை அவன் பயன்படுத்தியிருக்க மாட்டான். இந்தச் சொத்தை வாங்குவதற்கு இரவும் பகலும் கஷ்டப்பட்டிருப்பான். இவன் இரவு பகலும் கஷ்டப்பட்டிருந்தாலும் இந்தச் செல்வம் இவனுக்குச் சொந்தம் கிடையாது. இவன் எதனை பயன்படுத்தினானோ அந்த பொருள்தான் இவனுக்கு சொந்ததம். மற்றவை கிடையாது.

ஒரு மனிதனிடத்தில் கோடிக்கணக்கில் பணமும் பெரிய வீடும் காரும் இருக்கிறது என்றால் இவை அனைத்தும் இவனுக்கு உரியதா? என்று பார்த்தால் கிடையாது. இவன் எதை உண்டானோ, இன்னும் எதை உடுத்தினானோ, இன்னும் எதை தர்மம் செய்தானோ அவை தான் ஒரு மனிதனின் செல்வம். வேறு எதுவும் இவனுக்கு சொந்தம் கிடையாது.

நபி (ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது” என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்த போது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி)

(முஸ்லிம்: 5665)

இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம்.

பேராசைக்கு ஒரு கடிவாளம்

சம்பாதிப்பதன் காரணத்தினால் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பார்ப்பதில்லை. கண், தலை, கை இப்படி அனைத்து உறுப்புகளையும் நாமே வீணாக்கிக்கொள்கிறோம். ஆனால் அனைத்து உள்ளமும் இந்த உலக ஆசையை விரும்பக் கூடியது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த உலகத்தில் வாழ்வதற்காக வேண்டி இன்னும் செல்வம் வேண்டும்; இன்னும் செல்வம் வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். இந்த உலகம் அழியக் கூடியது என்றும், நிலையான உலகம் கிடையாது என்றும் நாம் எண்ணினால் அனைவரும் போராசையிலிருந்து விலகியிருப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையி-ருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 6439, 6436)

செல்வத்தில் மறைமுக அருள் (பரக்கத்)

பொருளாதாரத்தில் பேராசை கொள்ளக் கூடாது. உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை நாம் அறிந்து வருகின்றோம். என்றாலும் பணம் பற்றாக் குறையாக இருக்கிறதே நாங்கள் எப்படிப் பேராசைப்படாமல் இருக்க முடியும் என்று கேட்கின்றனர்.

உதாரணத்திற்கு 100 ரூபாய் இருக்க வேண்டிய இடத்தில் 50 ரூபாய் இருந்தால் அது பற்றாக்குறை தானே என்று கேட்கிறார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்த வரை இது ஒரு காஃபிருக்கு வேண்டுமானால் கடினமாகயிருக்கும். ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை இது எளிதானது தான்.

ஏனென்றால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நம்பியிருந்தால் அவனுக்கு அல்லாஹ் பரக்கத்தைத் தருகிறான். அறியாப்புறத்திலிருந்து அருளைத் தருகிறான். பரக்கத் என்றால் மறைமுகமான அருள்.

அதற்கு உதாரணம் 200 கிராம் அரிசியில் ஒருவர் உண்பார். ஆனால் அதே 200 கிராம் அரிசியில் இருவர் உண்பார்களானால் அதில் பரக்கத்திருக்கிறது.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவனால் இரு குழந்தைகளைக் கூடப் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஒருவன் 2000 ரூபாய் தான் சம்பாதிக்கிறான். அதிலேயே அவன் ஐந்து குழந்தைகளைப் படிக்க வைத்து, ஏனைய அவனது தேவைகளையும் அதிலேயே அவன் பூர்த்தி செய்வான் என்றால் இதில் தான் பரக்கத் உள்ளது.

எண்ணிக்கையில் வேண்டுமானால் 10000 அதிகமாக இருக்கலாம் ஆனால் பயனில் 2000 சிறந்ததாக உள்ளதே இது தான் பரக்கத். அதாவது குறைந்த பொருள்; நிறைந்த பயன். இதை ஒருவன் நம்புவானேயானால் அவன் பேராசைப்பட மாட்டான்.

இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள் இதைப் பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார்கள்.

ஒட்டகம் கட்டுமிடத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒட்டகம் கட்டுமிடத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் அது ஷைத்தான்களிலிருந்து உள்ளதாகும்” என்று கூறினார்கள். அதேபோன்று ஆட்டைக் கட்டுமிடத்தில் தொழுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அதில் தொழுது கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் தான் பரக்கத் உள்ளது” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 416)

உம்மு ஹானி (ரலி) அவர்களிடம், “நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள். அதில் தான் பரக்கத் உள்ளது” என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா: 2295)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒட்டகை வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆனால் ஆட்டில் தான் பரக்கத்” என்றார்கள்.

(இப்னுமாஜா: 2295)

இந்த ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் ஆடு தான் மிகக் குறைந்த அளவில் குட்டி போடுகிறது. செம்மறி ஆடு ஒரு தடவைக்கு ஒரு குட்டி தான் போடும். வெள்ளாடு வேண்டுமானால் இரண்டு குட்டி போடும். மனிதனைப் போல பத்து மாதம் கருவைச் சுமக்கும்.

அதே போல் அதிகம் உலகில் அழித்து உண்ணப்படும் பிராணியும் ஆடு தான். அதன் இனவிருத்தியும் அழிவையும் பார்த்தால் அந்த இனம் அழிந்து போயிருக்க வேண்டும். டைனோசரைப் போல அரிதாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆடுகள் தான் அதிகம் உள்ளதைப் பார்க்கிறோம். பன்றியெல்லாம் ஒரே பிரசவத்தில் பத்து குட்டி போடும். ஆனால் அதையெல்லாம் விட ஆடு தான் அதிகம் இருப்பதைப் பார்க்கிறோம். பண்ணையாக இருக்கும் பிராணிகளை கணக்கெடுத்தால் ஆடு தான் அதிகம் இருப்பதைப் பார்க்கிறோம். இது தான் அதிசயம், பரக்கத்.

முஸ்லிம் சமுதாயம் சமுதாயம் இந்த பரக்கத்தின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. மற்ற சமுதாயத்தில் ஒரு குடும்பத்தில் ஏழு நபரிருந்தால் ஏழு பேரும் சம்பாதிப்பார்கள். ஒரு நபர் நூறு ரூபாய் சம்பாதித்தால் ஒரு நாளைக்கு 700. மாதத்திற்க்கு 21,000 சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்கள் குடிசையில் தான் இருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர் தான் சம்பாதிப்பார். தாயையோ, மனைவியையோ, மகளையோ, தந்தையையோ பெரும்பாலும் வேலைக்கு அனுப்ப மாட்டான். ஆனாலும் 5000 ரூபாய் சம்பாத்தியத்தில் குடும்பமே இயங்குவதைப் பார்க்கிறோம்.

இது நாம் அல்லாஹ்வை அரைகுறையாக நம்பியதற்கே இந்தப் பயனை அடைகிறோம் என்றால் அல்லாஹ்வை முறையாக நம்பினால் எப்படிப்பட்ட அதிசயத்தை அல்லாஹ் நிகழ்த்துவான் என்பதை நாம் சற்றே சிந்திக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் பல சம்பவங்களை ஹதீஸ்களில் நாம் பார்க்கிறோம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு காஃபிர் வருகிறார். உணவளிக்குமாறு வேண்டினார். அதற்கு அவர்கள் ஒரு ஆட்டின் பாலைக் கறந்து தரும்படி வேண்டினார்கள். ஒரு ஆட்டுப் பால் கறந்து தரப்பட்டது. அவர் குடித்து விட்டு, இன்னும் வேண்டும் என்று கேட்டார். அவருக்கு மீண்டும் ஒரு ஆட்டின் பால் வழங்கப்பட்டு, மீண்டும் வேண்டும் என்று கூறினார். இப்படியாக அவர் ஏழு ஆட்டின் பாலை அவர் குடிக்கிறார்.

பிறகு அவர் அடுத்த நாள் இஸ்லாத்தைத் தழுவிய நிலையில் வருகிறார். அவருக்கு ஒரு ஆட்டின் பால் வழங்கப்பட்டது. அவர் அதை அருந்திவிட்டார். பின்னர் அவருக்கு மீண்டும் வழங்கப்பட்ட போது அவர், “வேண்டாம் என் வயிறு நிறைந்து விட்டது” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் ஒரு வயிற்றிற்கு உண்கிறான். ஆனால் ஒரு காஃபிர் ஏழு வயிற்றிற்கு உண்கிறான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 3843)

இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ண மாட்டார்கள். ஆகவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள் “நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் “இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்‘ எனக் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிவு

(புகாரி: 5393). 5394. 5396. 5397)

மனிதன் வாழ்வதற்குக் குறைந்த அளவு உணவு போதும். எல்லாம் மனம் தான் காரணம். இஸ்லாம் மன ரீதியான ஒரு திருப்தியைத் தருகிறது. இதனால் வயிறு நிறைந்து விடுகிறது. இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.