08) பிறர் நலன் நாடும் அறிவுரைகள்
பிறர்நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம் ; இறையச்சத்தின் வெளிப்பாடு. மேலும் ஈருலகிலும் இறைவனின் உதவியைப் பெறுவதற்குரிய மகத்தான வழிமுறை என்று இஸ்லாம் பறைச்சாட்டுகின்றது.
மற்றவர்களின் நலம் நாட வேண்டும் என்று சொல்வதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அதை எந்தளவிற்கு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்தி உள்ளது. நலம் நாடுதல் என்று பொதுவாக குறிப்பிட்டு சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது.
நலம் நாடுதல் என்று சொன்னால் நலமாக இருப்பதற்காக செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் குறிக்கும். நன்மையான காரியங்களை செய்வது, அதற்கு உதவுவது. தர்மம் செய்வது. நீதியை நிலை நாட்டுவது, பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவது. சிரமப்படுவோருக்கு உதவுவது, பசியைப் போக்குவது, ஏழைகளுக்கு உதவுவது, அநாதைகளை ஆதரிப்பது. இணக்கத்தை ஏற்படுத்துவது. நேர்மையாக நடப்பது போன்ற அனைத்து விதமான காரியங்களும் இதற்குள் வந்துவிடும்.
அதுபோன்று நலம் நாடுதல் என்பது நலத்தை கெடுக்கும் காரியங்களை செய்யாமல் இருப்பதையும் உள்ளடக்கும். தீமையை செய்யாமல் இருப்பது. அதை விட்டும் காப்பாற்றுவது, அதை தடுப்பது. அதற்கு துணை போகாமல் இருப்பது. வரம்பு மீறாமல் இருப்பது. அடுத்தவர் உரிமைகளை பறிக்காமல் இருப்பது, மோசடி செய்யாமல் இருப்பது, வட்டி வரதட்சனை போன்ற சமூக தீமைகளை விட்டும் விலகுவது என்று அனைத்து தீய காரியங்களையும் விட்டு அகன்று கொள்வதையும் குறிக்கும்.
இந்த அடிப்படையில் சமுதாயத்தின் அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் பிறர்நலம் நாடும் வகையில் நடந்து கொள்வதற்கு தோதுவாக ஏராளமான தகவல்கள் இஸ்லாத்தில் உள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் சுருக்கமாக இப்போது காண்போம்.