08) பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன்

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

கடவுளுக்கு இணை, துணை இல்லை, அவரை பெற்றவர் இல்லை, அவர் மூலம் பிறந்தவர் என்று எவரும் இல்லை.

இதுவெல்லாம் மனிதனின் எதிர்கொள்ளும் பலவீனங்கள்.

மனிதன் தாய் தந்தை சார்ந்து வாழ்கிறான். அது அவனுடைய பலவீனம்.

வாழ்க்கை துணைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் அவனுக்கு மனைவி தேவை, அது அவனுடைய பலவீனம். முதுமையான காலத்தில் அவனுக்கு உறுதுணையாய் நிற்க சந்ததிகள் தேவை. இது அவனுடைய பலவீனம்.

மனிதனுக்கு பசியெடுக்கும், உடல் களைப்பு ஏற்படும், நோய் வாய்ப்படுவான், முதுமையடைவான், மறதி ஏற்படும், தூக்கம் வரும், கவலை கொள்வான், அச்சம் கொள்வான், தோல்விகளை எதிர்கொள்வான், மரணத்தை சந்திப்பான்.

இவையாவுமே மனிதனின் பலவீனங்கள்.

மனிதன், தன்னுடைய அறிவின் எல்லைக்குட்பட்டு மட்டுமே இறைவனைக் குறித்து சிந்திக்கும் நிலையில் இருப்பதால், அவன் கடவுளாக எவரை நம்பியிருக்கிறானோ அவருக்கும் இதே போன்ற பலவீனங்களை பொருத்திப் பார்த்து திருப்திப் பட்டுக் கொள்வதை பார்க்கிறோம்.

இதனுடைய வெளிப்பாடாக தான், இது கடவுளுடைய தந்தை, இது கடவுளின் மகன், இது கடவுள் தூங்கும் நேரம்,கடவுளின் உணவு இது, கடவுள் பயணம் மேற்கொள்ளும் வாகனம் இது..

என பலவீனமான புரிதல்களை கடவுளின் பெயரால் மனிதன் கொண்டிருப்பதற்கான அடிப்படை காரணம், கடவுளை, மனித கற்பனைகளையெல்லாம் கடந்த நிலையில் ஏற்றுக் கொள்ள மனிதன் தவறி விடுவதால் தான்.

ஆனால், இஸ்லாம் கடவுளின் இலக்கணத்தைப் பற்றி பேசுகின்ற போதெல்லாம் கடவுள் என்பவர் மனிதனின் கற்பனைக்குள் எட்டுகின்ற எத்தகைய பலவீனங்களுக்கும் ஆட்படாதவராக, அனைத்தை விட்டும் தூயவராக இருக்கிறார் என்பதை அழுத்தமாக தெரிவிக்கின்றது.

இறைவனுக்குத் தூக்கம் இல்லை

அல்லாஹ், அவனைத் தவிர எந்தக் கடவுளுமில்லை. அவன் என்றென்றும் உயிரோடு இருப்பவன்; எப்போதும் நிலைத்திருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, பெருந் தூக்கமோ ஏற்படாது. வானங்களில் இருப்பவையும் பூமியில் இருப்பவையும் அவனுக்கே உரியவை. அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்பவர் யார்? அவன், அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னுள்ளவற்றையும் அறிகிறான். அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து, அவன் நாடியதைத் தவிர எந்த ஒன்றையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. அவனது (குர்ஸ் எனும்) இருக்கையானது வானங்கள், பூமியைவிட விசாலமானது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் அல்ல. அவன் உயர்ந்தவன்; மகத்தானவன்.

(அல்குர்ஆன்: 2:255)

இறைவனுக்கு மரணமில்லை

அல்லாஹ்! அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. (அவன்) எப்போதும் உயிருடன் இருப்பவன்; நிலைத்திருப்பவன்.

(அல்குர்ஆன்: 3:2)

நிரந்தரமாக உயிருடனிருப்பவனுக்கு முன்னால் முகங்கள் பணிந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் இழப்புக்குள்ளாகி விட்டான்.

(அல்குர்ஆன்: 20:111)

இறைவனுக்கு மறதி இல்லை

“(நபியே!) உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

(அல்குர்ஆன்: 19:64)

இறைவனுக்குப் பசி, தாகம் இல்லை

“வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்த அல்லாஹ்வை விடுத்து, வேறு பொறுப்பாளனை எடுத்துக் கொள்வேனா?” என்று கேட்பீராக! அவனே உணவளிக்கிறான்; அவன் உணவளிக்கப்படுவதில்லை. “கட்டுப்பட்டோரில் நான் முதன்மையானவனாக இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக! இணை வைப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 6:14)

இறைவனின் பார்க்கும் திறனுக்கோ கேட்கின்ற திறனுக்கோ எல்லையில்லை

மனிதன் பார்ப்பான். கடவுளும் பார்க்கிறார். ஆனால் மனிதப் பார்வை பலவீனங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பார்வையோ அனைத்து பலவீனங்களையும் கடந்த ஒன்று.

ஒரே நேரத்தில் அனைத்தையும் கடவுளால் கண்காணிக்க முடியும்.

ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும் பல லட்சம் மடங்கு அதிகமானது என ஏற்க முடியாதா?.

கடவுளுக்கு எந்த தேவைகளும் இல்லை என்கிற புரிதலிலேயே, அவர் அனைத்து விதமான பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்கிற கருத்து பொதிந்துள்ளது.

மனிதன் அனைத்து வகையிலும் பலவீனமான படைப்பாக படைக்கப்பட்டிருக்கிறான். அவனுடைய பார்வை பலவீனங்களையுடையது. செவிப்புலன் பலவீனமானது. அனைத்து திறன்களுமே குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள்ளோ, குறிப்பிட்ட ஆற்றலுக்குள்ளோ சுருக்கிக் கொள்ளத்தக்கவையாகவே மனிதன் திறன்கள் வழங்கப்பட்டிருக்கிறான்.

கேள்விப் புலன் இருப்பதனால் ஒரு நேரத்தில் இருவர் பேசுவதை அவனால் கேட்க இயலாது. பார்வை இருக்கிறது என்பதற்காக திரைமறைவில் இருப்பவற்றை அவனால் காண முடியாது.

அவனுக்கென வகுக்கப்பட்ட எல்லையை கடந்து அவன் பார்க்கவோ கேட்கவோ வேண்டுமெனில் அது சாத்தியமில்லை.

இன்னும் சொல்வதானால், அவனுக்கான எல்லைக்குள் இருக்கின்ற விஷயம் என்றாலும் கூட, கேட்பதற்கோ பார்ப்பதற்கோ அது ஒன்றே போதுமான நிபந்தனையாக ஆகி விடாது.

அதை பார்க்கின்ற அல்லது கேட்கின்ற சுய நினைவோடு அவன் அப்போது இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்தால் அருகில் நடக்கும் விஷயமென்றாலும் கவனத்திற்கு வராது. அது கூட அவன்

கண்ணில் ஒரு நோய் ஏற்பட்டால் பார்வை மங்கலாகி விடும்.

செவிப்புலனில் ஒரு குறைபாடு ஏற்பட்டால் அருகிலிருந்து பேசினால் கூட கேட்காமல் போய் விடும்.

இறந்து விட்டால் அனைத்துமே அடங்கி விடும்.

ஆக, மனிதனின் ஆற்றல் என்பது பலவீனங்களையும், ஏராளமான குறைபாடுகளையும் கொண்டவைகளாகும்.

நம்மை படைத்த இறைவனும் இத்தகையை பலவீனங்களை கொண்டவனாக தான் இருப்பான் என நாம் கருதுவதாக இருந்தால் அப்படியொருவர் இறைவனாக இருக்கவே தகுதியற்றவராக ஆகி விடுவார்.

மனிதன் கடவுளின் உதவியை நாடுவதன் நோக்கமே தமக்கிருக்கும் பலவீனங்களின் விளைவாய் அவன் எதிர்கொள்கிற பின்னடைவுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதால் தான் எனும் போது அதே போன்ற பலவீனங்களை கடவுளும் கொண்டிருந்தால் அத்தகைய கடவுளால் மனிதனுக்கு என்ன பயன்?

ஆக, இஸ்லாம் இவ்வுலகிற்கு பிரகடனப்படுத்துகின்ற கடவுட் கோட்பாட்டின் படி, இறைவன் அனைத்து வித பலவீனங்களையும் கடந்த சர்வ வல்லமை பெற்ற ஒருவர்.

அவர் ஒரு நேரத்தில் ஒட்டு மொத்த உலகையும் நிர்வகிப்பார்.

அனைத்தையும் ஒரே நேரத்தில் கூட பார்ப்பார். அனைத்தையும் ஒரு சேர கேட்க அவரால் முடியும்.

தூக்கம் என்கிற பலவீனம் அவருக்கு கிடையாது.. நினைவாற்றல் குறைபாடு என்பது அவருக்கு இல்லை, வயது முதிர்வு இல்லை, நோய்வாய்ப்படுகின்ற பலவீனம் அவருக்கு இருக்க முடியாது, நித்திய ஜீவனாக என்றென்றும் நீடிப்பாரே தவிர அவருக்கு மரணம் இல்லை.

இப்படியான புரிதலை நாம் கடவுட் கோட்பாட்டினில் செலுத்தினால் தான் கடவுளை நம்ப வேண்டிய முறைப்படி நம்பினோம் என ஆகும்.

அது தான், ஆன்மீகத்தின் பெயரால் நாம் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கும் துணை செய்யும்.

ஆக, இறைவனை சர்வ வல்லமையுடையவனாக மனிதன் நம்ப வேண்டுமெனில், அந்த நம்பிக்கை அவன் சிந்தனையில் நிலைபெறுவதற்கு தடையாய் இருப்பது, மனிதனுக்கான பலவீனங்களுடன் இறைவனை ஒப்பிடுகின்ற அந்த தன்மை இன்னமும் அவனிடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால் தான்.

அதை தக்க முறையில் அவன் களைய முற்படும் போது, இறைவனின் சர்வ வல்லமையை சரிவர புரிந்து கொள்வான்.

அதை புரிகின்ற போது மட்டுமே, ஓரிறை கொள்கை அவன் உள்ளத்தில் ஆழமாய் பதியும்.

படைத்தல் இறைவனின் ஆற்றல். அனைவருக்கும் உணவளித்தல் அவனுடைய ஆற்றல்.. அனைவரையும் காக்கின்ற ஆற்றல் அவனுக்கு மட்டுமே உரியது.. அனைவரையும் அழிக்கின்ற ஆற்றலும் உரிமையும் அவன் மட்டுமே கொண்டிருப்பது, மழையை பொழிவிப்பது அவனுடைய கைகளில் உள்ளது, நமக்கு நோய்களை தருகின்ற ஆற்றல் அவனைச் சார்ந்தது, அவற்றுக்கான நிவாரணங்களை வழங்கும் ஆற்றல் அவனிடம் மட்டுமே இருப்பவை, அறிவை, கல்வியை வழங்குகிற ஆற்றல் அவனை சார்ந்தது, செல்வத்தை வழங்கும் ஆற்றல் அவனுக்குரியது, ஏழ்மையை தந்து விடக் கூடிய ஆற்றலும் அவனை சார்ந்தது..

சுகம், துக்கம், வெற்றி, தோல்வி, செல்வம், வறுமை, நோய், ஆரோக்கியம் என இவ்வுலகம் எதிர்கொள்ள எதுவானாலும், அவை அனைத்துமே இறைவனின் தனித்துவ ஆற்றல்களால் ஏற்படுபவை. அவற்றில் எவரும் பங்கு சேர முடியாது. எவரும் அவனுக்கு உதவ முடியாது, அதற்கான எந்த தேவையும் இறைவனுக்கு இல்லை.. அவன் தனித்தவன்..!

இதுவே இஸ்லாம் இவ்வுலகிற்கு போதனை செய்கிற அடிப்படையான இறைக் கோட்பாடு..!!