08) நபி (ஸல்) விளக்கம் அவசியமே
முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமின்றி குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதும்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையற்றது என்று கூறுவதும்,
குர்ஆனைத் தவிர வேறு எந்த வஹீயும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை என்று கருதுவதும் திருக்குர்ஆனுக்கே எதிரானதாகும். அவ்வாறு கருதுவோரும், வாதிடுவோரும் உண்மையில் குர்ஆனையே மறுக்கின்றனர் என்பதற்கு இத்தொடரில் ஏராளமான குர்ஆன் வசனங்களைச் சான்றாக வைத்து விளக்கியுள்ளோம்.
அத்தகைய வசனங்களில் மேற்கண்ட வசனமும் ஒன்றாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை அல்லாஹ் அருளினான். இக்குர்ஆனைக் கொண்டு மக்களிடம் தீர்ப்பு வழங்குமாறு சில இடங்களில் கூறிய இறைவன் இந்த வசனத்தில் குர்ஆனைக் கொண்டு எவ்வாறு தீர்ப்பு வழங்குவது என்பதைத் தெளிவுபடுத்துகின்றான்.
விளக்கம் தேவைப்படும் ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கம் இது தான் என்று அல்லாஹ் நபிகள் நாயகத்துக்குக் காட்டுவான். எதை அல்லாஹ் காட்டுகின்றானோ அதன்படி அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.
குர்ஆனை எவ்வாறு விளங்கிட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவே அவர்களைத் தேர்வு செய்து இவ்வேதத்தை அவர்களிடம் வழங்கினான்.
நபிகள் நாயகத்தின் விளக்கம் ஏதும் அவசியம் இல்லை என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எதைக் காட்டினானோ அது எது? மக்களிடையே தமக்கு இறைவன் காட்டித் தந்ததை அடிப்படையாக வைத்து வழங்கிய தீர்ப்புக்கள் யாவை?
அவர்களுக்குக் காட்டித் தந்ததைக் கொண்டு தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற இந்த வசனத்தின் அறிவுரையை மறுப்பவர்கள் தான் ஹதீஸ்களை – நபிகள் நாயகத்தின் விளக்கங்களை மறுக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புத்தகத்தைப் பெற்று மக்களிடம் கொடுப்பதற்கு மட்டும் அனுப்பப்படவில்லை. செயல்முறை விளக்கம் அளிப்பதற்காகவும் சேர்த்தே அனுப்பப்பட்டார்கள் என்பதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
உஸ்வத் – முன்மாதிரி என்றால் ஒருவரது செயலை நடவடிக்கைகளைப் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பதாகும். ஒருவர் கொண்டு வந்து தந்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கும் அப்புத்தகத்தில் உள்ளபடி நடப்பதற்கும் உஸ்வத் – முன்மாதிரி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை.
“ஒரு தபால்காரர் நம்மிடம் ஒரு தபாலைக் கொண்டு வந்து தருகின்றார். அதை நாம் வாங்கிக் கொள்கின்றோம். பின்னர் அதை வாசிக்கிறோம். அதன் பின்னர் அதில் கூறப்பட்டவாறு செயல்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். “இவர் தபால்காரரை முன் மாதிரியாக ஆக்கிக் கொண்டார்” என்று யாரும் கூறுவதுண்டா? அப்படி யாரேனும் கூறினால் அவரது அறிவை நாம் சந்தேகப்பட மாட்டோமா?
இவ்வாறு கூறும் மூடர்களுக்கும், ஹதீஸ்கள் வேண்டாம் என்று கூறுவோருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
ஏனெனில் புத்தகத்தைக் கொண்டு வந்து நம்மிடம் தருவது மட்டுமே நபிகள் நாயகத்தின் பணி, அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இப்போது இவர்கள் எதை மறுக்கிறார்கள்?
குர்ஆனையே மறுக்கிறார்கள். மேற்கண்ட வசனத்தையே மறுக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான முன் மாதிரியாக அனுப்பப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். குர்ஆனில் கூறப்பட்டபடி வாழ்ந்தார்கள் என்பது அதன் கருத்து என்று இவர்கள் சமாளிப்பார்கள். அவர்கள் குர்ஆனில் கூறப்பட்டபடி வாழ்ந்தார்கள் என்று அறிவிப்பது தான் இவ்வசனத்தின் நோக்கமா? அவரை அப்படியே பார்த்து முழுமையாகப் பின்பற்றுங்கள் என்பது இவ்வசனத்தின் நோக்கமா?
அவர் குர்ஆன் கூறுகிறபடி நடந்தார் என்று கூறப்பட்டால் அவ்வாறு விளங்கலாம். அவர் குர்ஆன் கூறுகிறபடி நடந்தார் என்று கூறாமல் அவரைப் பார்த்து நீங்கள் நடக்க வேண்டும் என்றல்லவா கூறப்பட்டுள்ளது. இதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? முன்மாதிரி என்றாலே செயல்முறை விளக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரி – வாழ்ந்து காட்டிய முறை தேவையில்லை என்போர் அல்லாஹ்வையே மறுப்போர். இறுதி நாளையும் மறுப்போர். அல்லாஹ்வின் நினைவும் அற்றவர்கள் என்ற கடுமையான எச்சரிக்கையும் இவ்வசனத்தில் உள்ளது.
இம்மூன்று நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்வார்கள் என்று இவ்வசனம் தெளிவாகவே கூறுகின்றது.
குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றாக உள்ளன.