08) கொடுங்கோல் மன்னனின் பரிசு

நூல்கள்: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

பொழுதுகள் வேகமாய்க் கழிந்தன. ஒவ்வொருவரிடமும் இறைவனையும் இறைச்சட்டங்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டும், அநியாயமான விசயங்களை எதிர்த்து பேசியும், நன்மையான விசயங்களை கற்றுத் தந்தும் அவரது நாட்கள் நகர்ந்தன .

அவருக்கு தகுந்தாற்ப் போன்றே அவரது வாழ்க்கை துணையும் அமையப் பெற்றார் . அவரது மனைவி பெயர் சாரா(அலை). அவரும் இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கைகளை முற்றாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார் .

தன் கணவருக்கு முற்றும் கட்டுப்பட்டவராக , உறுதுணையாகத் திகழ்ந்த அற்புதமான பெண்மணி.

பலகாலம் அந்த ஊரில் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லியும் யாரும் ஏற்பதாய் இல்லை. இருவரும் எகிப்து நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள். அந்த நாட்டை ஒரு கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஒரு விசித்திரமானவன். அவனிடம் அந்த ஊருக்கு வந்திருக்கும் மனிதரைப் பற்றி சொல்லப்பட்டது. அவன் இப்ராஹீம் (அலை ) அவர்களை அழைத்து வரச் சொன்னான் .

அவரும் வந்தார். உடன் வந்திருக்கும் பெண்ணைப் பற்றிக் கேட்டான். மனைவி என்று சொன்னால் ஏதேனும் செய்து விடுவானோ என்று அஞ்சி சகோதரி என்று சொல்லி விட்டார் .

இப்ராஹீம் (அலை) வலிமை வாய்ந்த வீரர் தான், எனினும் அஞ்ச வேண்டிய விசயத்திற்கு அஞ்சாமல் நடந்து கொள்வது அறிவீனமாக ஆகிவிடும். இந்த அறிவற்ற கொடுங்கோலன் முன்பு வாதிட்டுக் கொண்டிருப்பத்திக் காட்டிலும் தப்பித்து விடுவது தான் மேலானது என்பதை விவேகம் மிக்க இப்ராஹிம் (அலை ) அறிந்தே இருந்தார்கள் .

இப்ராஹிம்(அலை) சாரா அவர்களிடம் வந்தார்கள் , “பூமியில் உன்னையும் என்னையும் தவிர இறைநம்பிக்கை உடையவர் யாரும் இல்லை ; அவனோ உன்னைப் பற்றிக் கேட்க நான் சகோதரி என்று கூறி விட்டேன் ;” என்று கூறி எச்சரித்தார்.

ஆனால் அவன் ஒரு மோசமான மிருக குணமுள்ளவன் . எந்த பெண்ணாக இருந்தாலும் , பெண்களைப் பாதுகாப்பது தான் ஒரு ஆண் மகனின் உயர்ந்த குணம் என்பதெல்லாம் அவன் அறிவிற்கு ஏறவில்லை. அந்நிய பெண்ணின் மீது பார்வை கூட படாமல் இருப்பது தான் ஒழுக்கம் என்பது மதியிழந்த அவனுக்கு தெரியவில்லை .

சாரா (அலை) அவர்களை அழைத்து வரச் சொன்னான். சாரா (அலை) அவர்களும் வந்தார்கள் .

மோசமான ஒருவனிடம் சிக்கி விட்டோம் என்று எண்ணி இறைவனிடம் துஆ செய்தார் சாரா (அலை) .

அவன் அருகில் நெருங்கவே , உடனே வலிப்பு நோய் வந்து தரையில் விழுந்து விட்டான் .

“உனக்கு தீங்கு செய்ய மாட்டேன் ; எனக்காக பிரார்தனை செய் “ என்றான் .

சாரா அவர்கள் துஆ செய்தார்கள் . அவனுக்கு நோய் சரி ஆனது .

மீண்டும் அருகில் நெருங்கினான் .

வலிப்பு வந்து விழுந்து விட்டான் .

மீண்டும் பிரார்தனை செய்யச் சொன்னான் ;

சாரா அவர்கள் இரக்கப் பட்டு பிரார்த்தனை செய்தார்கள் .

அவன் எழுந்து விட்டான் .

“யார் அங்கே !!” காவலனை அழைத்தான் ..

“நீங்கள் ஒரு மனிதப் பெண்ணை கொண்டு வரவில்லை ; ஷைத்தானை கொண்டு வந்து இருக்கிறீர்கள்;”

ஏதாவது கொடுத்து அனுப்பிவிட்டு தொலைத்தால் சரி என்று மன்னன் எண்ணினான் .

ஹாஜரா என்ற பணிப்பெண்ணை சாரா அலை அவர்களுக்கு கொடுத்து அனுப்பி விட்டான் .

சாரா, இப்ராஹிம் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததை தெரிவித்தார்கள்.

ஹாஜிராவை இப்ராஹிம் அலை அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள்.

கியாமத் நாள் வரை இஸ்லாமிய சமூகத்துக்கு ஒரு பெரும் வழிபாடு கிடைக்கக் காரணமான ஒரு பெண்ணும் , இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பரம்பரைக்கே தாயாகவும் திகழவிருக்கக் கூடிய ஒரு பெண்ணுமான அந்த பாக்கியமிக்க நமது தாய் ஒரு கொடுங்கோலனின் பரிசு என்பது ஆச்சரியமான ஒன்று அல்லவா!!

எதிரியின் கூடாரங்களில் இருந்தும் , ஈமானின் ஊற்றுக்கள் பிறப்பெடுக்கின்றன..

இறைவனின் திட்டங்கள் ஆச்சரியமானவை…