08) ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி

நூல்கள்: மனித குலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்

ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி!

மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்து சேவையாற்றுதற்கான களம் தான் அரசியல் களம். ஆனால் தற்போது, குறுகிய கால முதலீட்டில் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி, பரம ஏழையாக இருந்தவன் கூட அரசியலில் குதித்து ஒரு சில ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதியாக்கும்
வியாபாரக்களமாக இன்றைய அரசியல் மாறிவிட்டது.

நாளொன்றுக்கு மூன்று வேளை பசியாற வழியின்றி டீ விற்றவன் இன்று பல நூறு கோடிகளுக்கு
அதிபதியாகிறான். மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கிடந்தவன் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கோட் சூட் அணிகிறான். பலதரப்பட்ட உணவுகள், பல்வேறு நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா என மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாக இன்றைய அரசியல்வாதிகள் மிதந்து வருவதைக் காண்கிறோம்.
இந்நிலையை, பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் பட்டிதொட்டிகளில் இருக்கும் வார்டு உறுப்பினர்கள் வரைக்கும் காண முடிகிறது.

ஆனால் நபி (ஸல்) அவர்களோ இவர்களுக்கு நேர்மாற்றம். நபிகளாரும் சில ஆண்டுகள் மக்களுக்கு ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். ஆனால் தற்காலத்து அரசியல்வாதிகளைப் போல்

வகைவகையாக உண்ணவில்லை!

ஆடம்பர உடைகளை உடுத்தவில்லை!

பல வகையான பொருட்களைப் பயன்படுத்தவில்லை!

பஞ்சு மெத்தைகளில் உறங்கவில்லை!

செல்வத்தைத் தன் பெயரிலோ பினாமிகளின்

பெயரிலோ குவிக்கவில்லை!

மாளிகைகள் பல கட்டவில்லை!

தமது வாரிசுகளை, தமது சொத்துக்கோ பதவிக்கோ வாரிசாக்கவில்லை!

அதற்கான வரலாற்று வரிகள் இதோ!

ஜனாதிபதி வீட்டில் அடுப்பெரியவில்லை

“எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். “என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழஎதை உண்பீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) “பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்” என விடையளித்தார்.
அறிவிப்பவர்: உர்வா
நூல்: (புகாரி: 2567, 6459)

வயிரார உணடதில்லை
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை நபியவர்களின் குடும்பத்தினர் மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: (புகாரி: 5374)

ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து
நாட்களுக்குப் பிறகு (நபியவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபி (ஸல்) அவர்கள்
சாப்பிடுவார்கள் என்று நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். “இதற்கு என்ன அவசியம்
நேர்ந்தது?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு, “குழம்புடன் கூடிய ரொட்டியை நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே” என
விளக்கமளித்தார்.
நூல்: (புகாரி: 5423)

பொறித்த இறைச்சியைக் கண்ணிலும் கண்டதில்லை

நபி (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி ‘சாப்பிடுங்கள்’ என்று அனஸ் (ரலி) கூறி விட்டு, “நபி (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டை அவர்கள் தமது கண்களால் பார்த்ததில்லை” எனக் கூறினார்.
அறிவிப்பவர்: கதாதா
நூல்: (புகாரி: 5385, 5421, 6457)

வகைவகையான உடைகளை அணியவில்லை

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய
இரண்டையும் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி இவ்விரு ஆடைகளை
அணிந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று குறிப்பிட்டார்.
நூல்: (புகாரி: 3108, 5818)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து “இதை உங்களுக்கு
அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்” என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.
நூல்: (புகாரி: 1277, 2093, 5810)

ஆடம்பர வாழ்வில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்த வில்லை. அலங்காரப் பொருட்களையும் வாங்கிக் குவிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி
விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.
நூல்: (புகாரி: 5386, 5415)

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல்: (புகாரி: 6456)

பஞ்சு மெத்தைகளில் உறங்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்’’ எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது” எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்கள்: (திர்மிதீ: 2299) (இப்னு மாஜா: 4099) (அஹ்மத்: 3525, 399)

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய்
முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.

பகலில் பாய்! இரவில் கதவு!
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக்

கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல்: (புகாரி: 730, 5862)

நபி (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில்
பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே
வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு
இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக்
கண்டதும் நான் அழுதேன். ஏன் அழுகிறீர் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின்
தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?” என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?” எனக் கேட்டார்கள். இதை உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.
நூல்: (புகாரி: 4913)

இருள் நிறைந்த ஜனாதிபயின் இல்லம்

நபி (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துகளை அங்கேயே விட்டு விட்டு, எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால்
இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும்
இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.
நூல்: (புகாரி: 3906)

நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்.அவ்வாறு தொழும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் தமது நெற்றியை நிலத்தில் வைப்பதற்குக் கூட எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் நபி (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள்
ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது என நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.
நூல்: (புகாரி: 382, 513, 1209)

நபி (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபி (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்.
நூல்: (புகாரி: 729)

நபி (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.
செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபி (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள். நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம். ஆனாலும் கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விடக் கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அரசியல் தலைமையைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன.