08) அன்னையார் மீது அவதூறு
அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு. இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறு’’ என்று கூறியிருக்கக் கூடாதா?
இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.
இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.இதைக் கேள்விப்பட்டபோது “இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு’’ என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும், இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா அவர்களிடம்) ‘நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு’ என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை விட (சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று). நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்’ (அல்குர்ஆன்: 12:18) ➚ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ‘அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே…’ என்று (தொடங்கும் (அல்குர்ஆன்: 24:11-20) ➚ வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.
நூல்: (புகாரி: 4690)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு’ எனும் (அல்குர்ஆன்: 24:11) ➚வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்’ என்பவனைக் குறிக்கிறது.
நூல்: (புகாரி: 4749, 4750)
“உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:
அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே.. என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 24:11-20) ➚ பத்து வசனங்களை அல்லாஹ் அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் என்பவர் (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது அல்லாஹ் இந்த (அல்குர்ஆன்: 24:22) ➚ வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் செய்யும் இந்த உதவியை ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னார்கள்.
நூல்: (புகாரி: 4750)
யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்’’ என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்டபோது (விவாகரத்துச் செய்தபோது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘(நபியே!) அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர்’ எனும் இந்த (அல்குர்ஆன்: 33:27) ➚ வசனம் (நபியவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் நபியவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப்பெற்றது.
நூல்: (புகாரி: 4787)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், “ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள். எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.
ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை (மணந்து கொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம். எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, “ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னை மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பி வைத்துள்ளார்கள்” என்றேன். அதற்கு அவர், “நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார். அப்போது (நபியவர்களுக்கு) குர்ஆன் வசனம் (அல்33:37) அருளப்பெற்றது.
நூல்: (முஸ்லிம்: 2798)
ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்தவர். அவருக்கு நபியவர்கள் தமது அத்தை மகள் ஸைனபை மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். அவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்ற சூழ்நிலையில் அவரை ஸைத் விவாகரத்துச் செய்தார். அதன் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துக் கொடுக்கிறான்.
ஒருவர் தனது மனைவியை விவாகரத்துச் செய்தால் இஸ்லாமிய சட்டப்படி அப்பெண்ணை, அந்தக் கணவனின் தந்தை மணக்க முடியாது.
அன்றைய காலத்தில் மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கும் உண்டு என்று நம்பி வந்தனர். இந்த அடிப்படையில் வளர்ப்பு மகன் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின், வளர்ப்புத் தந்தை அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என்று அரபுகள் கருதி வந்தனர்.
இந்த நம்பிக்கையை உடைத்து, வளர்ப்பு மகன் ஒருபோதும் உண்மையான மகனைப் போன்றவர் அல்ல, அவரது மனைவி வளர்ப்புத் தந்தையின் மருமகளும் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தவே இத்திருமணத்தை அல்லாஹ்வே நடத்தி வைத்தான் என்பதை மேற்கண்ட வசனமும் ஹதீஸ்களும் கூறுகின்றன.