07) முன் வைத்த காலை பின் வைக்காதவர்
அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றி, இரக்க குணம் கொண்டவர், இறுக்க குணம் கொண்டவரல்லர்! இளகிய மனம் படைத்தவர், இரும்பு மனம் படைத்தவர் அல்லர் என்ற பாத்திரத் தோற்றம் மாத்திரமே வரலாற்று ஊடகங்கள் மூலமாக நம்முடைய உள்ளங்களில் பதியம் செய்யப்பட்டுள்ளன.
அபூபக்ர் (ரலி) அவர்கள் இரக்க குணம் கொண்டவர் தாம்! இளகிய மனம் படைத்தவர் தாம்! அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இது அபூபக்ர் (ரலி) என்ற பாத்திரத்தின் ஒரு பக்கத்தைப் பார்க்கும் போது தான்! அவர்களது மறுபக்கம் ஒன்று உள்ளது. ஆம்! அது இறுகிய குணம், இரும்பு மனம் கொண்ட பாத்திரமாகும். அது எப்போது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையில் ஒரு படி இறங்கினால் என்ன?கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் என்ன? என்று வருகின்ற போது, அங்கு தான் அபூபக்ர் (ரலி) அவர்களது மனம் இறுக்கமடைகின்றது. நெருப்பாகத் தகிக்க ஆரம்பிக்கின்றார்கள். உஸாமா (ரலி) தலைமையில் படை அனுப்பும் பிரச்சனையை அப்படித் தான் எதிர் கொள்கின்றார்கள்.
மாநபி மரணமும் மதமாற்றமும்
உஸாமாவின் படை அனுப்புதலை ஓய்ப்பதற்கு இரண்டு வகையான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன!
அதில் ஒன்று மதமாற்றம்!
இஸ்லாம் என்னும் சிவப்பு சூரியன் அரபியப் பாலைவனப் பரப்புக்களை தன் செங்கதிர் வெளிச்ச அலைகளில் குளிக்க வைத்துக் கொண்டிருந்த அவ்வேளையில் முதன் முதலில் ஜும்ஆ தொழுகையை நிலை நாட்டி, முடி சூட்டிய கிராமம் பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா என்ற கிராமம் தான். இந்தச் செய்தி புகாரியில் இடம் பெறுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின்போ மக்கா, மதீனாவைத் தவிர மற்ற கிராமங்களில் ஜும்ஆ நடைபெறவில்லை. அப்படி ஒரு மத மாற்றம்!
ஏன் இந்த மத மாற்றம்? அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கொண்டு வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவியவுடன் தூய இஸ்லாமும் மரணத்தைத் தழுவி விட்டது என்ற விஷ சிந்தனையால் வந்த வினை தான் இந்த மத மாற்றம்! நயவஞ்சகத் தனத்தின் நரித்தன ஆட்டம்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் இப்படியெல்லாம் நிகழுமா? என்ற சந்தேகம் வரலாம். இதை நிவர்த்தி செய்வதற்கு, இந்த மத மாற்றம் நிகழ்ந்ததற்கான காரணத்தை அறிவதற்கு சற்று பின்னோக்கிப் பார்த்தாக வேண்டும்.
உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி பரவி விடுகின்றது. எதிரிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். முஸ்லிம்களோ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். இறைத்தூதரே இறந்த பிறகு இனி என்ன வேண்டிக் கிடக்கின்றது என்று நிலை குலைகின்றனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ் தனது திருமறையின் 3:144வசனத்தை இறக்கி, அல்லாஹ்வின் தூதர் இறந்து விடலாம், ஆனால் அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் இறந்து விடாது என்று உத்தரவாதம் கொடுக்கின்றான்.
இதை இங்கு குறிப்பிடக் காரணம், வந்தது வதந்தி தான் என்று அல்லாஹ் கண்டு கொள்ளாமல் அதை விட்டு விடவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி நபித்தோழர்களை உறுதிப்படுத்துகின்றான். நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் மரணமடைவார்கள்! அப்போது அரைகுறை முஸ்லிம்கள் மதம் மாறுவார்கள்! அந்த சமயம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நபித்தோழர்களுக்கு உஹத் போர்க்களத்தை ஓர் ஒத்திகைத் தளமாக்கி, மத மாற்ற நிகழ்வை முன்னறிவிப்புச் செய்கின்றான்.
முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்ட அந்தத் தருணம் நபித்தோழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது போது, அபூபக்ர் (ரலி) சமயோசிதமாக மேற்கண்ட குர்ஆன் வசனத்தை எடுத்துச் சொன்னதும் நபித்தோழர்கள் சுதாரித்துக் கொண்டார்கள் என்ற விபரத்தை முன்னர் கண்டோம்.
இப்போது நபி (ஸல்) அவர்கள் உண்மையில் மரணித்து விட்டார்கள்! மத மாற்றமும் நிகழ்கின்றது. இது ஒரு புறம்! இன்னொரு புறத்தில் யமனில் ஒரு நபி, யமாமாவில் இன்னொரு நபி என போலி நபிகள் பொய் முகம் காட்டி நிற்கின்றனர்! இப்படிப் பல்வேறு பிரச்சனைகளில், பன்முனைத் தாக்குதல்களில் அபூபக்ர் (ரலி) மாட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். மலைத்தார்களா என்றால் இல்லை! மலையென நின்றார்கள். இதை ஆயிஷா (ரலி) பின்வருமாறு கூறுகின்றார்கள்:
“…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிர் கைப்பற்றப் பட்டவுடன் அரபியர் மதம் மாறினர். நயவஞ்சகர்கள் தங்களது வேலைகளைக் காட்டத் துவங்கினர். அல்லாஹ்வின் மீதாணையாக! என் தந்தைக்கு அப்போது அடுக்கடுக்காக வந்திறங்கிய சோதனைகள் நன்கு உறுதியான ஒரு மலையின் மீது இறங்கியிருந்தால் அது தவிடு பொடியாகி இருக்கும். வனாந்திரத்தில் நடுங்க வைக்கும் குளிரில் தடுமாறி நிற்கும் ஆட்டு மந்தையைப் போல் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்கள் தவித்து நின்றனர். அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டாலும் உடனுக்குடன் அதற்கான தீர்வை எனது தந்தை கண்டார்கள்” என்று ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள்.
(நூல் : தாரீஹ் தப்ரீ)
இந்தச் சூழலில் தான் நபித்தோழர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை எடுத்துக் காட்டி மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போர் மேகங்கள் சூழ்ந்து நிற்கும் போது,உஸாமாவின் படை உள்ளூரில் மிக மிக அவசியம் என்று என்று தங்கள் கருத்துக்களை அபூபக்ர் (ரலி) யிடம் எடுத்து வைக்கின்றனர். இது தான் உஸாமாவின் படை அனுப்புதலைத் தடுப்பதற்கான முதல் காரணத்தில் முக்கிய கூறுகளாகும். இந்தக் கண்ணோட்டத்தை அபூபக்ர் (ரலி) யிடம் நபித்தோழர்கள் பின்வருமாறு எடுத்து வைக்கின்றனர்:
இந்த (உஸாமாவின்) படையினர் முஸ்லிம்களின் முக்கியப் படையினர்! அரபியர்கள் உங்களுடைய கட்டுப்பாட்டை விட்டும் அறுந்து போய் நொறுங்கிக் கொண்டிருக்கின்றனர்! இது தங்களுக்கும் தெரிந்த விஷயம் தான். எனவே வெளி விவகாரத்திற்காக படையை அனுப்புவதன் மூலம் முஸ்லிம்களின் ஜமாஅத்தைப் பிரித்து விடாதீர்கள்!
இது நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) யிடம் வைத்த சற்று கடுமையான, காட்டமான வேண்டுகோள்! இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி), “என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! வன விலங்குகள் என்னைக் கவ்விச் சென்று விடும் என்று கருதும் ஒரு நிலை வந்தால் கூட நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்ட படி உஸாமாவின் படையை அனுப்பியே தீருவேன். இந்த நகரங்களில் நான் மட்டும் தனித்திருந்தாலும் சரி! அந்தப் படையை அனுப்பியே தீருவேன். பறவைகள் நம்மைக் கொத்திச் சென்றாலும், மதீனாவைச் சுற்றி வனவிலங்குகள் நின்றாலும், முஃமின்களின் அன்னையர்களை நாய்கள் கடித்துக் குதறினாலும் சரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றிய போர்க்கொடியை கீழே இறக்க மாட்டேன்” என்று கர்ஜித்து மதீனாவின் எல்லைப் புறங்களைக் காப்பதற்காக படை வீரர்களை நியமித்தார்கள்.
(நூல்கள் : பிதாயா வந்நிஹாயா, தப்ரீ)
இனி உஸாமா படையைத் தடுத்ததற்கான இரண்டாவது காரணத்திற்கு வருவோம்.
தளபதியை வழியனுப்பிய தலைவர்
அபூபக்ர் (ரலி) அவர்கள் உஸாமாவின் படையை அனுப்புவதற்கு முழு மூச்சாகக் களம் இறங்கிய தருணத்தில் அன்சாரிகளில் சிலர் உமர் (ரலி) யிடம் வந்து, “உஸாமா அல்லாத வேறு யாரையாவது படைத் தளபதியாக நியமிக்கும் படி அபூபக்ர் (ரலி) யிடம் சொல்லுங்கள்’என்று கேட்டுக் கொண்டனர்! அதன்படி உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) யிடம் கோரிக்கை வைத்த போது, “கத்தாபின் மகனே! உன்னுடைய தாய் தொலைந்து போகட்டும்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நியமித்த தளபதியை நான் மாற்றி நியமிக்க வேண்டுமா?” என்று தன் தாடியை தடவியவாறு அபூபக்ர்(ரலி) கூறிவிட்டுப் பின்னர் கிளம்பி உஸாமா படை நின்று கொண்டிருந்த ஜுர்ஃப் என்ற இடத்திற்குச் சென்று அந்தப் படையை புறப்படும் படி உத்தரவிட்டார்கள்.
பதினெட்டு வயது நிரம்பிய படைத் தளபதி உஸாமா (ரலி) வாகனத்தில் அமர்ந்த வண்ணம் வருகின்றார். ஆட்சித் தலைவர், குறைஷிக் குல கோமான் கூடவே நடந்து வருகின்றார்கள். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அருகில் அபூபக்ர் (ரலி) யின் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள்.
இதைக் கண்டு மனம் தாங்க முடியாமல் இளவல் உஸாமா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பிரதிநிதியே! பெருந்தகையே! ஒன்று நீங்கள் வாகனத்தில் வர வேண்டும். இல்லையேல் நான் இறங்கி உங்களுடன் நடந்து வர வேண்டும்” என்று கெஞ்சுகின்றார்கள். இதற்கு ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி), “நீ இறங்க வேண்டியதில்லை! நான் வாகனத்தில் ஏறவும் போவதில்லை!” என்று பதில் கூறினார்கள்.
பின்னர் உஸாமா படையில் ஒரு போர் வீரராக பதியப் பெற்றிருந்த உமர் (ரலி) அவர்களை தமக்காக விடுவிக்கும் படி தளபதி உஸாமாவிடம் தலைவர் அபூபக்ர் (ரலி) வேண்டினார்கள். அதற்கிணங்க உமர் (ரலி)யை விடுவிக்கின்றார்கள். இதன் பிறகு உஸாமாவை உமர் (ரலி) சந்திக்கும் போதெல்லாம், “தளபதியே! அஸ்ஸலாமு அலைக்கும்!’ என்று கூறலானார்கள்.
(நூல் : பிதாயா வந்நிஹாயா)
மேற்கண்ட இந்நிகழ்வில் நபி (ஸல்) அவர்கள் உஸாமா படையை அனுப்ப நினைத்த போது என்ன ஆட்சேபணை எழுந்ததோ அதே ஆட்சேபணை தான் அபூபக்ர் (ரலி) அனுப்பும் போதும் ஏற்பட்டது. ஆனால் அபூபக்ர் (ரலி) அதற்கு வகை வைக்கவில்லை. ஆட்சிப் பீடத்திலிருந்து ஆட்காட்டி விரல் அசைவிலேயே படையை அனுப்பும் அதிகாரம் பெற்ற அபூபக்ர் (ரலி),நகரத்தின் எல்லை வரை நடந்தே வந்து நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மதிப்பளிக்கும் வகையில் வழியனுப்பி வைக்கின்றார்கள்.
அபூபக்ர் (ரலி)யின் இந்த அணுகுமுறை குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதையச் செய்கின்றது. அடிமைச் சின்னத்தை – தளையை உடைத்து அறுத்தெறிகின்றது. இப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய திருமகனை வரலாற்று வழி நெடுகில் எங்கும் காண முடியாது. இவரை உருவாக்கிய பெருமையும் அருமையும் இஸ்லாத்தை மட்டுமே சாரும்! இன இழிவை நீக்க இஸ்லாம் ஒன்றே இறுதி மருந்து என்று அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்வு முறை சாட்சி கூறி நிற்கின்றது.