07) மனித பலவீனங்கள் எதுவும் கடவுளுக்கு இருக்காது

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

உமது இறைவன் தேவைகளற்றவன்; அருளுடையவன். மற்றொரு சமுதாயத்தின் தலைமுறையிலிருந்து உங்களை உருவாக்கியது போன்றே, அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு, உங்களுக்குப் பின்னர் தான் நாடியோரை உங்களுக்கு மாற்றாக்கி விடுவான்.

(அல்குர்ஆன்: 6:133)

கடவுளுக்கு உருவம் கற்பிப்பது கூட, கடவுளின் தன்மையை சிறுமைப்படுத்துவதாக ஆகி விடும் என்கிற அளவிற்கு, கடவுள் கோட்பாட்டினை மகத்துவப்படுத்தும் மார்க்கமாக இஸ்லாமிய மார்க்கம் இருக்கிறது.

கடவுளை எவரும் கண்டதில்லை. உலகம் அழிகிற வரை எவராலும் கடவுளை காணவும் முடியாது என்பது இஸ்லாமிய கோட்பாடு.

பார்வைகள் அவனை அடையாது. அவனே பார்வைகளை அடைகிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 6:103)

அனைவரை விடவும், அனைத்தை விடவும் சர்வ வல்லமை படைத்த கடவுளை எவருமே கண்டதில்லை எனும் போது, அந்த கடவுளுக்கு உருவம் ஒன்றை கற்பிப்பதில் எந்த நியாயமும் இல்லை.

ஒரு மனிதனை, சற்று விகாரமாக நாம் காட்சிப்படுத்தி விட்டால் அவருக்கு கடும் கோபம் ஏற்படுவதை நிதர்சனத்தில் நாம் காண்கிறோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை வடிகிறோம் என்கிற பெயரில் அவருடைய முகசாயலிலிருந்து சற்று மாறுபட்டதான ஒரு சிலையினை அவருடைய கட்சியினர் வடித்தனர்.

ஜெயலலிதா போல இது இல்லை என ஊரங்கும் கேலி பேசப்பட்டு, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி அந்த சிலை அதன் பிறகு அப்புறப்படுத்தும் நிலை வரை சென்றதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம்..

நம் கண் முன் வாழ்ந்த ஒரு மனிதரை உருவகப்படுத்தும் போது, சிறு மாற்றம் ஏற்பட்டாலே அதை நம் மனது ஏற்காது எனும் போது, எந்த கண்ணும் கண்டிராத, எந்த காதும் கேட்டிராத எந்த மனித சிந்தனையும் சிந்தித்திராத கடவுளை நாமே நம் கற்பனைக்கு தகுந்தவாறு உருவகப்படுத்தினால், கடவுளின் நிஜமான உருவத்தை விட அது பல ஆயிரம் மடங்கு பாரதூரமான மாறுதல்களோடு இருக்காதா?

முன்னரே குறிப்பட்டது போல், மனிதன் தன்னுடைய அறிவுக்கு எட்டுகின்ற அந்த குறுகிய வட்டத்தினுள் நின்று கொண்டு மட்டும் கடவுளை ஆய்வு செய்ய எத்தனிப்பதால் தான் இந்த அளவிற்கு பலவீனமான நிலையை அடைகிறான். ” நமக்கு கைகள் இப்படி இருக்கிறது.. அதற்காக கடவுளுக்கும் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? மனிதனுக்கு இருப்பதை போல கடவுளுக்கும் கைகளை உருவகப்படுத்துகிறோம்.

ஒரு மாறுதலுக்கு அதிகப்படியாக இரண்டு மூன்று கைகளை கொடுத்து விட்டால், மனிதனை விட கடவுளை சற்று மேன்மைப்படுத்தி விட்டோம் என மனிதன் நினைக்கிறான்.

இதுவெல்லாம் கடவுளை மேன்மைபடுத்தாது, மாறாக அவருடைய சர்வ வல்லமையை இழிவு செய்வதாக தான் கடவுள் எடுத்துக் கொள்வார் என்பதை சற்று விரிந்த எண்ணத்துடன் சிந்தித்தால் விளங்கும்.

இறைவனுக்கு உருவமே இல்லை என்பது இஸ்லாமிய கோட்பாடு இல்லை.

“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவன்; உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவன்..” என்பதாக நாகூர் ஹனீஃபாவின் பிரசித்தி பெற்ற பாடல் வரிகள், இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக்கே மாற்றமான ஒன்றாகும்.

என்ன உருவம் என்பது தெரியாது என்கிற கருத்துருவாக்கம் தான் மருவி மருவி இறுதியில் உருவமே இல்லை என்கிற தவறான கருத்தின் பக்கம் மக்களை கொண்டு சென்றிருக்கிறது.

இறைவனை இவ்வுலகில் எவராலும் காண முடியாது என்றாலும், உலக அழிவிற்கு பிறகு இறைவன் மீண்டும் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டுகிற அந்த நாளில் நாம் இறைவனை காண்போம். மறுமையில் மக்களை விசாரிக்க வானவர்கள் புடைசூழ இறைவன் வருவான் என்றும்,  மறுமையில் இறைவனின் காலில் முஸ்லிம்கள் விழுந்து பணிவார்கள் என்றும் திருக்குர் ஆன் கூறுகிறது.

உமது வரும்போது, இறைவனும், அணியணியாக வானவர்களும்

(அல்குர்ஆன்: 89:22)

கெண்டைக் காலிலிருந்து திரை அகற்றப்பட்டு, அவர்கள் ஸஜ்தா செய்வதற்கு அழைக்கப்படும் நாளில் (அதற்கு) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 68:42)

இறைவனை நாளை பார்க்க முடியும் என்கிற கருத்தே, அவனுக்கே உரிய ஒரு உருவத்தில் அவன் வீற்றிருக்கிறான் என்பதை பறைசாற்றுகிறது.

இறைவனுக்கு தேவைகள் இல்லை

இறைவனை குறித்த நம்பிக்கையில் மிக முக்கிய கோட்பாடாக இஸ்லாம் முன்வைப்பது அவன் தேவைகளற்றவன் என்பதாகும்.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ், தேவைகள் அற்றவன். அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக எவருமே இல்லை.

(அல்குர்ஆன்: 112: 1-4) 

இன்று மனிதன் கற்பனை செய்திருக்கக் கூடிய கடவுள்கள் தேவைகளுடையவர்களாக கற்பனை செய்யப்பட்டிருக்கின்றனர்.

மனிதர்கள் தேவையுடையவர்கள். அதனால் தான் நாம் பலவீனமாக இருக்கிறோம். அதனால் தான் தோல்வியும் கவலையும் நமக்கு ஏற்படுகிறது.

அதிலிருந்து விடுதலை பெறவே நாம் இறைவனை நாடி செல்கிறோம். நாம் நாடி செல்கிற இறைவனும் நம்மை போல தேவைகளுடையவனாக இருந்தால் அவன் எப்படி நமது தேவைகளை நிறைவு செய்வான்? அல்லது அந்த இறைவனின் தேவைகளை நிறைவு செய்வதற்கு இறைவன் வேறு எந்த இறைவனை நாடி செல்வார்? என்கிற கண்ணோட்டத்தில் நமது பகுத்தறிவை செலுத்தினாலே இதிலுள்ள அபத்தங்களை விளங்கிக் கொள்ள முடியும். இறை தத்துவம் குறித்து திருக்குர்ஆன் முன்வைக்கின்ற அடிப்படை போதனைகளை கவனித்தால், இறைவனின் இலக்கணங்களாக மனிதர்கள் வகுத்து வைத்திருப்பவை அனைத்துமே மூட நம்பிக்கைகளாகவும், அறிவுக்கு பொருத்தமற்றவைகளாகவும் இருப்பதை காணலாம்.

இறைவனுக்கு உதவியாளன் இல்லை

“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுக்கு அதிகாரத்தில் எந்தக் கூட்டாளியும் இல்லை. (உதவியாளனை ஏற்படுத்துவது) இழிவு என்பதால் அவனுக்கு எந்த உதவியாளனும் இல்லை” என்று கூறுவீராக! அவனை அதிகமதிகம் பெருமைப்படுத்துவீராக!

(அல்குர்ஆன் 17: 111)

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தேவையுடையவர்கள். அல்லாஹ்தான் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன்: 35:15)

இறைவனுக்கு மகன் இல்லை

“அல்லாஹ், (தனக்கு) மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறல்ல! அவன் தூயவன். வானங்கள் மற்றும் பூமியில் இருப்பவை அவனுக்கே உரியவை. அவனுக்கே அனைத்தும் கட்டுப்படுகின்றன.

(அல்குர்ஆன்: 2:116)

இறைவனுக்கு மனைவி இல்லை

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்துவிட்டது. அவன் மனைவி, மக்களை எடுத்துக் கொள்ளவில்லை.

(அல்குர்ஆன்: 72:3)

இறைவனுக்குப் பெற்றோர் இல்லை

அவனே ஆரம்பமானவன்; இறுதியானவன்; வெளிப்படையானவன்; மறைவானவன். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். ((அல்குர்ஆன்: 57:3)

அவனே முதலாமவன் எனும் போது அவனை படைத்தவர் அல்லது பெற்றெடுத்தவர் என அவருக்கு முன் எவரும் இல்லையென்றாகி விடுகிறது.

அவ்வாறு பெற்றெடுத்தவர் என ஒருவர் இருந்திருந்தால் அவர், இவரை விட பெரிய கடவுளாகி விடுவார்.

ஆக. இவையெல்லாம் இறைவனின் தனித்துவங்களாக திருக்குர்ஆன் நமக்கு குறிப்பிடுபவையாகும்.

இறைவன் எவ்விதத் தேவைகளுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடாகும்.

தேவைகள் இருப்பின் அவர் கடவுளாக இருப்பதற்கே தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.

இந்த அடிப்படையை சரிவர புரியாத காரணத்தால் தான் மதத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

கடவுளுக்குக் காணிக்கைகள் செலுத்துவதற்கும், கடவுளை வழிபடுவதற்குக் கட்டணம் செலுத்துவதற்கும், உணவுகளையும் இன்ன பிற பொருட்களையும் படையல் செய்வதற்கும் இதுவே காரணம்.

கடவுளுக்காக நாம் செலுத்தும் காணிக்கைகளை மனிதர்கள் தான் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொண்டே மனிதர்கள் இந்தத் தவறைச் செய்கின்றனர்.

அதே போல, லட்சங்கள் திருடி விட்ட ஒருவன், அதற்கு பரிகாரமாக உண்டியலில் கடவுளுக்கு காணிக்கையாக சில சில்லரைகளை இட்டு விட்டால் கடவுளும் மன்னித்து விடுவார் என எண்ணுகிறான்.

பணத்தின் பால் தேவையுடைய மனிதனுக்கு இதே போல் லஞ்சம் கொடுத்தால் அவன் வேண்டுமானால் அந்த காரியத்தை மன்னிக்கலாம்.

பணத்தின் பால் தேவையற்ற இறைவன் எப்படி மன்னிப்பான்? என்பதையும் சிந்திக்க தவறி விடுகின்றனர்.

ஆக, கடவுளை நம்புவது என்றால், வெறுமனே கடவுள் இருக்கிறார் என நம்புவதோடு நம்பிக்கைகளை சுருக்கிக் கொள்வதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

மாறாக, கடவுளின் பண்புகள் என்னவோ அவற்றை கடுகளவு மாற்றமுமின்றி புரிந்து நம்புவது தான் உண்மையான கடவுள் நம்பிக்கை.