11) பூக்களும் பூச்சிகளும்

நூல்கள்: அல்குர்ஆனும் தேனீயும்

அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள், வட்டமடித்துப் பாடி நிற்கும் தேனீக்களை, வண்டுகளை, வண்ணத்துப் பூச்சிகளை, வவ்வால்களை, விட்டில்களை வளைத்துத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வண்ணம், வண்ண, வண்ண நிறங்களைப் பெற்றிருக்கின்றன.

வருகின்ற தேனீக்கள், வண்டு மற்றும் இதர பூச்சியினங்களை மையல் கொள்ள வைக்கும் நறுமணத்தையும் பூக்கள் பெற்றிருக்கின்றன.

தங்கள் வண்ணங்களிலும், வாசனையிலும் மயங்கி வந்த அந்தப் பூச்சிகளுக்கு அந்தப் பூக்கள் மகரந்தத் தூளையும், மதுரத் தேனையும் பரிசாக வழங்குகின்றன.

மலரின் மயக்கும் பகட்டான பாகங்கள்

மலரைத் தாங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு மலர்க் காம்பு என்று பெயர். மலர்க் காம்பின் நுனிப்பகுதியில் பூத்தளம் உள்ளது. பூத்தளத்தில் மலரின் உறுப்புகள் அமைந்துள்ளன. மலரின் அடுத்தடுத்த நான்கு வட்டங்களில் மலரின் பாகங்கள் உள்ளன.

அவற்றில் வெளி அடுக்கு புல்லி வட்டம் எனப்படும். இது புல்லி இதழ்களால் ஆனது. இந்தப் புல்லி வட்டம் இலைகளைப் போன்று பசுமை நிறத்தைக் கொண்டிருக்கும். மலர் அரும்பாக இருக்கும் போது அதை மூடிக் காப்பது இதன் வேலையாகும்.

மலரின் இரண்டாம் அடுக்கு அல்லி வட்டம் எனப்படும். இது அல்லி இதழ்களால் ஆனது. இது தான் மகரந்தச் சேர்க்கைக்கு வண்டு மற்றும் பூச்சிகளை ஈர்க்கிறது. புல்லி வட்டமும், அல்லி வட்டமும் துணை வட்டங்கள் எனப்படும். இவை இனப்பெருக்கத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை.

இந்த அல்லி வட்டம் தான் பகட்டான வண்ணத்தையும், நல்ல நறுமணத்தையும் கொண்டிருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதி தான் பூச்சிகளைத் தங்கள் பக்கம் இழுத்து மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.

மூன்றாம் வட்டம் மகரந்தத் தாள் வட்டம் ஆகும். இது மலரின் ஆண் பாகம் ஆகும். ஒவ்வொரு மகரந்தத் தாளிலும் மகரந்தப் பையும், மகரந்தத் தாள் கம்பியும் உள்ளன. மகரந்தப் பையில் மகரந்தத் தூள்கள் உருவாகின்றன.

நான்காம் வட்டம் சூலக வட்டம் ஆகும். இது மலரின் பெண் பாகம் ஆகும். இதில் சூல்பை, சூல் தண்டு, சூலக முடி என மூன்று பாகங்கள் உள்ளன.

பூக்களின் இந்தச் சுற்று வட்டங்களுக்குள் இப்படி ஒரு மகரந்தத் தூளை உருவாக்கி, மதுர சுவை மிகு பானத்தைச் சுரக்க வைத்து தாவர இனத்தின் பெருக்கத்திற்காக அவற்றை ஜோடியாக ஆக்கி வைத்த இறைவன் உண்மையில் தூய்மையானவன்.

மலரில் சுரக்கும் இந்த சுவை பானம் சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலில் ஆவியாகி விடாமலும் கொட்டுகின்ற மழை நீரில் கரைந்து விடாமலும், மகரந்தச் சேர்க்கைக்குப் பயன் தராத பூச்சிக்கள் இந்தப் பானத்தைச் சூறையாடி விடாமலும் சுத்தமான பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கின்றது இயற்கை என்று அறிவியலார்கள் சொல்கின்றார்கள்.

ஆனால் அது இயற்கை அல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ் தான் என்று நாம் சொல்கின்றோம். இப்படி ஒரு படைப்பு இரகசியமா? என்று வியந்து அவன் தூய்மையானவன் என்று கூறுகின்றோம்.