07) பலவீனமான செய்திகள்
மண்ணறை வேதனை தொடர்பாக பலவீனமான செய்திகள் சிலவையும் இருக்கின்றன. மக்களை அச்சுறுத்தும் வகையில் அந்த செய்திகள் இருப்பதால் பலரும் அதை அறிவுரையாக எடுத்துக் கூறுகின்றனர்.
ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து மக்களுக்கு அறிவுரை சொன்னாலே போதுமானது. பலவீனமான செய்திகளை கொண்டு மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே கப்ர் வேதனை தொடர்பாக வந்துள்ள சில பலவீனமான செய்திகளை அறிந்து கொள்வோம்.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறை மறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவனுக்கெதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்தப் பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அவை தொண்ணூற்று ஒன்பது பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை) அவை ஊதிக்கொண்டும் அவனை தீண்டிக்கொண்டும் உராய்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்னது அபீ யஃலா (6504) இந்த செய்தி (திர்மிதீ: 2384), (அஹ்மத்: 10906) போன்ற ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இது பலமான செய்தி அல்ல. இதன் அனைத்து அறிவிப்புகளில் அப்துல்லாஹ் பின் ஸம்ஹ் எனும் தர்ராஜ் என்பவர் இடம் பெறுகிறார். இவரை பற்றி கலவையான விமர்சனங்கள் அறிஞர்களிடம் உண்டு.
இமாம் உகைலீ அவர்கள் தமது பலவீனமானவர்கள் மற்றும் புறக்கணிப்படவேண்டியவர் வேண்டியவர்கள் எனும் நூலில் இவரை இடம் பெறச்செய்துள்ளார். இவரது செய்தியில் பலவீனம் உள்ளதாக அபூஹாதம் அவர்களும், இவரது செய்திகள் மறுக்கப்பட வேண்டியவை என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்களும், புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும் விமர்சித்துள்ளார்கள். (தஹ்தீபுல் கமால்)
ஒரு சில அறிஞர்கள் இவரை ஓரளவு நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும், மேற்குறிப்பிடப்பட்ட அறிஞர்களின் பொத்தாம் பொதுவான கடும் விமர்சனங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை குறிப்பாக இமாம் இப்னு அதீ அவர்கள் அபுல் ஹைஸம், இப்னு ஹூஜைரா ஆகியோர் வழியாக இவர் அறிவிக்கும் அறிவிப்புகளில் பிரச்சனை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (தஹ்தீபுல் கமால் 8 477)
இந்த செய்தி சில அறிவிப்புகளில் அபுல் ஹைஸம் வழியாகவும்,சில அறிவிப்புகள் இப்னு ஹூஜைரா வழியாகவுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திர்மிதியின் அறிவிப்பில் உபைதுல்லாஹ் பின் வலீத் எனும் பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.
இதனடிப்படையில் இந்த செய்தி பலவீனமாகிறது.
ஒரு மனிதர் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த வயதில், எந்த இடத்தில் மரணிக்கிறார் என்பதற்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
ஆனால் வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்றும் அவ்வாறு மரணித்தவருக்கு மண்ணறை வேதனை இல்லை என்றும் நம்புகின்றனர்.
இவ்வாறு நபிகள் நாயகம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் எனும் நபித்தோழர் அறிவிக்கும் செய்தி (திர்மிதீ: 994), (அஹ்மத்: 6294, 6359, 6753), முஸ்னது அபீயஃலா 4053. முஷ்கிலுல் ஆஸார் 277 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்புகள் அனைத்தும் பலவீனமானதாகும்.
திர்மிதி, அஹ்மத், மற்றும் முஷ்கிலும் ஆஸார் ஆகிய நூல்களின் அறிவிப்பில் ஹிஷாம் பின் ஸயீத். ரபீஆ பின் ஸைஃப் எனும் பலவீனமான இரு அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் முஆவியா பின் ஸயீத் என்பார் அறிவிக்கிறார். இவர் யாரென்று அறியப்படாதவர்.
முஸ்னது அபீயஃலாவின் அறிவிப்பில் வாகித் பின் ஸலாமா மற்றும் யஸீத் ரகாஷி ஆகிய இரு அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவ்விருவரையும் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சனம் செய்துள்ளனர்.
எனவே இந்த கருத்தில் எந்த பலமான செய்தியும் இல்லாததால் வெள்ளிக்கிழமை மரணிப்பவருக்கு மண்ணறை வேதனை கிடையாது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.
நபித்தோழர்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது, அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்தார். அப்போது கப்ரில் ஒரு மனிதர், ‘தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்’ (என துவங்கும் 67வது அத்தியாயத்தை முழுமையாக ஓதி முடித்தார். இதைக் கண்ட அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கப்ரு என்று அறியாமல் என் கூடாரத்தை அங்கு அமைத்து விட்டேன். அப்போது கப்ரில் இருந்த ஒரு மனிதர் ‘தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்’ என்ற அத்தியாயத்தை முழுமையாக ஓதி முடித்தார்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்த அத்தியாயம் தடுக்கக் கூடியது, கப்ருடைய வேதனையை நீக்கக்கூடியது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (திர்மிதீ: 2815)
இந்த செய்தி (தப்ரானீ: 12630), பைஹகீ அவர்களின் தலாயிலுன் நபுவ்வா பா 7 பக் 41 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அறிவிப்புகளிலும் யஹ்யா பின் அம்ர் பின் மாலிக் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அபூதாவூத், நஸாயீ, இப்னு மயீன் உள்ளிட்ட பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். ஹம்மாத் இவரை பொய்யர் என்று விமர்சித்துள்ளார். (தஹ்தீபுல் கமால்) இமாம் தஹபீ அவர்கள் இவரிடம் பல மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளதாகவும் இது மறுக்கப்பட வேண்டிய செய்திகளில் ஒன்று
எனவும் குறிப்பிட்டுள்ளார். (மீஸானுல் இஃதிதால் 7 208)
எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல.
கப்ர் என்பது (நல்லோர்களுக்கு) சொர்க்க தோட்டங்களில் ஒன்றாக (தீயோர்களுக்கு) நரக நெருப்பின் கிடங்காக இருக்கும் என்று நபிகள் நாயகம் கூறியதாக திர்மிதி 2384 ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு முழுக்க பலவீனம் ஆகும்.
இதில் அதிய்யா அல்கூவ்ஃபி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை நஸாயீ, அபூஸூர்ஆ ஆகியோர் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
மேலும் உபைதுல்லா பின் வலீத் என்பாரும் இடம் பெற்றுள்ளார். இவரையும் அபூஸூர்ஆ. இப்னு மயீன், அபூஹாதம் உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளதுடன் உகைலீ அவர்கள் இவரது ஹதீஸ்களில் மறுக்கப்பட வேண்டியது என்றும் விமர்சித்துள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப் பா 7 பக் 50)
இதன் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானதாக உள்ளதால் பல அறிஞர்களும் இச்செய்தியை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.