07) தாவூத் நபியின் தவறு?

நூல்கள்: இப்படியும் சில தஃப்ஸீர்கள்

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

(அல்குர்ஆன்: 35:28)

மார்க்க அறிஞர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சத்தை இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். இறையச்சம் உள்ளவர்களே உண்மையான அறிஞர்கள் என்பதைக் கூறி அறிஞர்கள் என்றாலே இறைவனின் அச்சம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று எடுத்துரைக்கின்றான்.

அவ்வாறான அறிஞர்கள் தாங்கள் ஆற்றுகின்ற மார்க்கப் பணியில் மனத் தூய்மையைக் கடைப்பிடிப்பார்கள். மக்களுக்கு மத்தியில் சத்தியத்தை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பார்கள். எப்போதும் இறை பயத்தை நினைவில் நிறுத்தி தங்களது மார்க்கப் பணியில் நேர்மையை ஒழுகுவார்கள்.

மார்க்க அறிஞருக்கு இறைவன் நிர்ணயித்த இறையச்சம் எனும் இந்தத் தகுதி தற்போதைய அறிஞர்களிடம் அரிதாகி விட்டது எனலாம்.

மார்க்கத்தின் போதனைகளை, உள்ளதை உள்ளபடி மக்களிடம் எடுத்துச் சொல்பவராக ஒரு மார்க்க அறிஞர் திகழ வேண்டும். அதுவே இறையச்சம் நிறைந்த மார்க்க அறிஞரின் இலக்கணம்.

சுன்னத் ஜமாஅத்தின் போர்வாள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக் கொள்ளும் போலிகள் நிகழ்த்தும் மார்க்க உரைகளைக் கேட்டால் அவ்வளவும் கட்டுக் கதைகள், அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள்.

குர்ஆனிலும், ஹதீஸிலும் மக்களுக்கு போதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க எதுவுமே இல்லாதது போல வாயில் வந்ததை உளறிக் கொட்டுகின்றார்கள். இறைவனின் பெயராலும், இறைத்தூதரின் பெயராலும் சர்வ சாதாரணமாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். எடுத்துக் காட்டாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

தரீக்காவைச் சார்ந்த ஒரு அறிஞர் (?) பேசும் போது, ஒரு பெயரைக் குறிப்பிட்டு விட்டு “இவர் இறைவனோடு நூறு முறைக்கும் மேலாகக் கதைத்திருக்கிறார். இறைவன் இவரோடு ஆயிரம் முறைக்கும் மேலாக பேசியிருக்கிறான். “இதற்கெல்லாம் குர்ஆனில் ஆதாரம் உண்டா?’ என்று கேட்டால் இப்போதே தரீக்காவிலிருந்து போய் விடுங்கள். ஸஸீஹுல் புகாரியை, ஏனைய ஹதீதுகளைப் பார்த்து விட்டு இவற்றில் இதற்கு ஆதாரமில்லையே என்று கேட்டால் இப்போதே தரீக்காவிலிருந்து போய் விடுங்கள். குர்ஆன், அதுவே முழுக் குர்ஆன் அல்ல. குர்ஆன், ஹதீஸ் இவைகளே முழு இஸ்லாம் அல்ல. தரீக்கா என்றால் இது தான். தரீக்கா என்றால் இது தான்” என்று உளறுகிறார். (இதற்கான வீடியோ ஆதாரம் நம்மிடம் உண்டு.)

இதைக் கேட்கும் எந்தவொரு உண்மையான முஸ்லிமுக்கும் இரத்தம் கொதிக்கவே செய்யும். ஏனெனில் அத்தனையும் அவதூறு. இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான செய்திகள்.

இது போன்று ஒவ்வொரு போலி மார்க்க அறிஞர்களும் தங்கள் இஷ்டத்திற்குத் தகுந்தாற்போல மார்க்கத்தின் பெயரால் அவதூறை அள்ளித் தெளிக்கின்றனர். மார்க்க அறிஞருக்கு இறைவன் நிர்ணயித்த இலக்கணத்தை மீறிச் செயல்படுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு உருவாவதற்கு, இந்தப் பாணியை கடைப்பிடிப்பதற்கு அடிப்படைக் காரணம் விரிவுரை நூல்கள் எனலாம். விரிவுரை நூல்களில் சில இடங்களில் சில இமாம்கள் இது போன்ற அவதூறான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். விளக்கம் என்ற பெயரில் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றார்கள். அதையே படித்துப் படித்து வளர்ந்தவர்கள் அந்தப் பாணியை தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

இமாம்களின் விளக்கங்களில் அவதூறான கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

காஃப், ஹா, யா, அய்ன், ஸாத்

திருமறைக் குர்ஆனில் சில அத்தியாயங்களின் ஆரம்பத்தில் தனித்தனி எழுத்துக்களாகப் பிரித்து இறைவன் பயன்படுத்துகிறான். உதாரணமாக அலிப் லாம் மீம், யா ஸீன், அலிப் லாம் மீம் ஸாத் நூன் போன்றவைகள் இவற்றில் அடங்கும். அது போன்று 19வது அத்தியாயத்தின் துவக்கத்தில் காஃப், ஹா, யா, ஐன், ஸாத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான தனித்தனி எழுத்துகளுக்கு அரபு இலக்கணப்படி எந்தப் பொருளும் இல்லை. அல்லாஹ் என்று சொன்னால் இதற்குப் பொருளுண்டு. இறைவன் என்பது இதன் பொருள். ஆனால் இதையே அலிப், லாம், லாம், ஹா என்று ஒவ்வொரு எழுத்தாகப் பிரித்துச் சொன்னால் இதற்கு எந்தப் பொருளும் இல்லை.

(அன்றைய அரபுப் பண்டிதர்களிடம் தங்களது உயர்தர இலக்கியப் படைப்பின் துவக்கத்தில் இது போன்ற தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை இருந்திருக்கின்றது. அதே வழிமுறையை இறைவனும் பயன்படுத்தி இது இறைவேதம் என அறைகூவல் விடுக்கின்றான்.)

இந்த வார்த்தைகளுக்கு நாம் ஒரு பொருளை வழங்குவதாக இருந்தால் அதை இறைவனோ, இறைத்தூதரோ நமக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும். மாறாக நமது விருப்பம் போல ஒரு பொருளைச் சொல்வோம் எனில் அது அவதூறாக, இட்டுக்கட்டப்பட்டதாகக் கருதப்படும்.

ஆனால் மேற்கண்ட வார்த்தைகளுக்குப் பல்வேறு பொருள்களைக் கூறி அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இக்ரிமா கூறுகிறார் : காஃப், ஹா, யா, ஐன், ஸாத் அதாவது நானே கபீர் (பெரியவன்), ஹாதி (நேர்வழி காட்டுபவன்), அலிய்யி (உயர்ந்தவன்), அமீன் (நம்பிக்கையாளன்), ஸாதிக் (உண்மையாளன்) ஆவேன்.

முஹம்மது பின் கஃப் கூறுகிறார் : காஃப், ஹா, யா, ஐன், ஸாத் (என்பதின் விளக்கம்) காஃப் என்றால் மாலிக் என்பதை குறிக்கும். ஹா என்பது அல்லாஹ் என்ற வார்த்தையையும். அய்ன் அஸீஸ் என்பதையும் குறிக்கும். ஸாத் என்றால் ஸமத் ஆகும்.

காஃபி (போதுமானவன்) என்ற அவனுடைய பெயரின் துவக்கமே காஃப் ஆகும். ஹா, ஹாதி (நேர்வழி காட்டுபவன்) என்ற அவனுடைய பெயரின் துவக்கமாகும். அய்ன் என்பது ஆலிம் (அறிஞன்) என்ற அவனது பெயரின் துவக்கம். ஸாதிக் (உண்மையாளன்) என்ற அவனுடைய பெயரின் துவக்கமே ஸாத் என்பதாகும் என ரபீஃ பின் அனஸ் கூறுகிறார்.

குர்ஆனின் பெயர்களில் ஒன்று. அல்லாஹ்வே நன்கறிவான் என கதாதா கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 5, பக்கம்: 478

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பெயரை விளக்கம் என்று அளிக்கின்றனர். குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள அலிப் லாம் மீம், யா ஸீன் போன்ற அனைத்து வார்த்தைகளுக்கும் அந்த வார்த்தையில் ஆரம்பிக்ககூடிய ஏதாவது ஒரு பெயரை விளக்கம் என்று கூறுகின்றார்கள்.

இறைவனும், இறைத்தூதரும் கூறாத இவ்விளக்கம் ஒரு அவதூறே என்பதை நினைவில் கொள்க!

அறிவை இழக்கச் செய்யும் தூய பானம் (?)

இப்னு உலவிய்யா அத்திம்கானி கூறுகிறார் : “அவர்களது இறைவன் அவர்களுக்குத் தூய பானத்தை புகட்டுவான் என்ற இறை வசனம் தொடர்பாக அபூ யஸீத் பிஸ்தாமி வினவப்பட்டார். அதற்கு அவர், “இறைவனல்லாத மற்றவர்களை நேசிப்பதை விட்டு அந்த பானத்தின் மூலம் அவன் அவர்களை பரிசுத்தப்படுத்துவான்” என்று கூறி விட்டு “அல்லாஹ்விடத்தில் ஒரு பானம் உண்டு. தனது சிறந்த அடியார்களுக்காக அதை சேமித்துள்ளான். அவர்களுக்கு புகட்டும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டான். (அதை) அவர்கள் பருகினால் மெய்மறந்து விடுவார்கள். மெய்மறந்து விட்டால் பறக்க ஆரம்பித்து விடுவார்கள். பறந்து விட்டால் சென்று விடுவார்கள். சென்று விட்டால் (இலக்கை) அடைந்து விடுவார்கள். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்க அரசனிடம் உண்மையின் இருப்பிடத்தில் நிற்பார்கள்” என்று கூறினார்.

நூல்: அல் கஷ்பு வல் பயான்

பாகம்: 13, பக்கம்: 467

“மறுமையில் சொர்க்கவாசிகளுக்குத் தூய பானத்தை இறைவன் பருகத் தருவான்” என்ற (அல்குர்ஆன்: 76:21) வசனத்திற்கு விளக்கமாகவே மேற்கண்ட விளக்கத்தை இமாம்கள் கூறுகின்றனர்.

அதில் தூய பானத்தைப் பற்றி விளக்கமளிக்கும் போது வழக்கம் போல் தங்களது யூகங்களையும் கற்பனைகளையும் கலந்து விட்டனர். அதாவது அந்த பானத்தைப் பருகுவதினால் மெய்மறந்து விடுவார்களாம். பின் பறக்க ஆரம்பித்து செல்வார்கள், சேர்வார்கள், அடைவார்கள் என வார்த்தை விளையாட்டு வேறு விளையாடியுள்ளனர். இவர்கள் என்னவோ இந்த பானத்தைப் பருகி இத்தகைய நிலையை அடைந்தது போல கதை அளக்கின்றனர்.

மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு இறைவன் தரவிருக்கும் அந்த பானம் போதை தரக் கூடியதா? மெய் மறக்கச் செய்யும் தன்மை கொண்டதா? நிச்சயம் அவ்வாறில்லை என்று இறைவன் கூறுகின்றான்.

இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும், தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள். அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 56:17-19)

இறைவன் தரவிருக்கும் பானத்திற்கு மெய் மறக்கச் செய்யும், போதையூட்டும் தன்மை இருக்காது என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்திற்கு முரணான, அவதூறான கருத்தை விளக்கம் என்ற பெயரில் இமாம்கள் அள்ளிக் கொட்டியிருக்கின்றனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

தாவூத் நபியை தரக்குறைவாகச் சித்தரிக்கும் தஃப்ஸீர்

விரிவுரை நூல்களில் இடம் பெற்றிருக்கின்ற அவதூறான கருத்துக்கள் என்று நாம் மேலே கண்டவை ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்வதில் இமாம்கள் தங்களது கற்பனைகளைப் புகுத்தியுள்ளனர்; அர்த்தமற்ற வார்த்தை விளையாட்டு விளையாடியுள்ளனர் என்ற வகையிலேயே அமைந்திருந்தது.

அவர்களின் அவதூறான விளக்கங்கள் இந்த வகையோடு நின்றுவிடவில்லை. மாறாக, பாரதூரமான செயலைச் செய்யும் வடிவிலும் பல விளக்கங்களை இமாம்கள் அளித்துள்ளனர்.

மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் இறைத்தூதர்கள் மீதே அவதூறு கூறும் ரீதியில், அவர்களது கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பாணியில் பல்வேறு விளக்கங்களை இமாம்கள் அளித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் இமாம்களின் அவதூறான விளக்கத்தை முந்தைய தொடரில் கண்டோம்.

அதே பாணியில் அவதூறு எனும் சேற்றை தாவூத் நபி (அலை) அவர்கள் மீதும் வாரி இறைத்துள்ளனர்.

தாவூத் நபியின் தவறு

தாவூத் நபியவர்கள் ஏதோ ஒரு தவறைச் செய்திருக்கிறார்கள். இறைவன் அதை அவருக்கு ஒரு சம்பவத்தின் மூலம் உணர்த்திய பிறகு தாவூத் நபி தன்னை திருத்திக் கொண்டார். இந்தத் தகவலைப் பின்வரும் வசனங்களில் இறைவன் கூறுகிறான்.

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். “பயப்படாதீர்!’ நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!” என்று அவர்கள் கூறினர். “இவர் எனது சகோதரர். இவருக்கு தொன்னூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரே ஒரு ஆடு தான் உள்ளது. அதையும் என் பொறுப்பில் விடு! என்று இவர் கூறுகிறார். வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்” என்று ஒருவர் கூறினார். “உமது ஆட்டை தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவு தான்” என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார். எனவே அதை அவருக்கு மன்னித்தோம். அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும், அழகிய தங்குமிடமும் உள்ளது.

(அல்குர்ஆன்: 38:21-25)

தாவூத் நபியவர்கள் ஏதோ ஒரு தவறைச் செய்திருக்கிறார்கள் என்பதை இறைவன் சுட்டிக் காட்டி அவரும் திருந்திக் கொண்டார் என்ற செய்தியை மட்டும் தான் இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். இதைத் தாண்டி தாவூத் நபி என்ன தவறு செய்தார்? என்பது பற்றி இறைவனோ, இறைத்தூதரோ எந்த ஒரு செய்தியையும் நமக்குத் தெரிவிக்கவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. படிப்பினை பெற இந்தத் தகவலே போதுமானது.

இறைவன் போதுமான அளவுடன் நிறுத்திய எந்த விஷயத்தையும் அத்தோடு இமாம்கள் விட்டதில்லை. தங்களது கற்பனைகளை வெளிப்படுத்த அருமையான தருணம், வாய்ப்பு கிடைத்து விட்டது என்றெண்ணி அதில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளார்கள் என்பதைப் பல்வேறு விளக்கங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

வழக்கம் போல் விரிவுரையாளர்கள் இந்த வசனத்தையொட்டி பல்வேறு கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றனர். தாவூத் நபி செய்த தவறு என்ன என்பதைப் புலனாய்வு செய்தது போல புளுகி வைத்துள்ளனர்.

தாவூது நபிக்கு ஏற்கனவே 99 மனைவிகள் இருந்ததாகவும், பின்னரும் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதாகவும் சில விரிவுரையாளர்கள் அவதூறான விளக்கத்தை அளித்துள்ளனர்.

தாவூத் நபி எதிலிருந்து பாவமன்னிப்பு தேடி திருந்திக் கொண்டார்களோ அது எந்தத் தவறு என்பதில் விரிவுரையாளர்கள் பலவிதமான கருத்துகளில் வேறுபடுகின்றார்கள். முதலாவது கருத்து அவர் ஒரு மனிதரின் மனைவியை பார்த்து, அவளை தனது மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார் என்பதாகும். ஸயீத் பின் ஜபைர் மேலும் மற்றவர்களும் இவ்வாறே கூறுகின்றனர்.

நூல்: பத்ஹுல் கதீர்

பாகம்: 4, பக்கம்: 606

ஒரு நபி இவ்வாறு செய்ய மாட்டார் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இந்தக் கதையை இமாம்கள் விளக்கம் என்ற பெயரில் பதிவு செய்துள்ளனர்.

இன்னும் இது போன்ற புளுகு மூட்டைகளை விரிவுரை என்ற பெயரில் அள்ளிக் கொட்டியிருக்கின்றனர். இவற்றிற்கு எந்தவிதச் சான்றும் இல்லை. அவர்களது பக்தர்களும் அதை அப்படியே மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்கின்றனர்.

இது நபியின் மீதே அவதூறு கூறும் மாபாதகச் செயல் என்பதை சிந்திக்கத் தவறி விட்டனர்.