07) தற்கொலை செய்யக் கூடாது
நோயின் கடுமை அதிகமானாலும் தற்கொலை முடிவுக்கு எப்போதும் வரக்கூடாது. நிரந்தர நரகத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது.
ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்” என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் இறக்கவில்லை” என்று சொன்னார்கள். பிறகு அம்மனிதர், (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று தெரிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்” என்றார். “நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் ஆம் என்றார். “அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: (அபூதாவூத்: 3185)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்ட ஒருவரைப் பற்றி “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார்.
அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்கார வைத்து விட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து “அவர் நரகவாசி’ என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார்” என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் “அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம்” என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்துன சந்தேகப்படும் அளவுக்குப் போய்விட்டார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கி விட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார் (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்)” என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பிலாலே! எழுந்து சென்று “இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான்’ என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 6606)