07) ஜனாஸாவின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் ஒரு குறிப்பிட்ட வாழ்நாளை ஏற்படுத்தியுள்ளான். அவனது காலக்கெடு வந்து விட்டால் மனிதன் மரணத்தைத் தழுவுகின்றான். அவ்வாறு இறந்தவர்களை மார்க்க அடிப்படையில் எவ்வாறு நல்லடக்கம் செய்வது என்பது உள்ளிட்ட சட்டங்களை இஸ்லாம் தெளிவுபடுத்தியிருக்கின்றது. ஆனால் ஜனாஸாக்கள் தொடர்பாக மார்க்கத்தில் இல்லாத பல பித்அத்தான நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும், பிற மதக்கலச்சாரங்களையும் இஸ்லாமியர்களில் சிலர் கடைபிடித்து வருகின்றனர்.
:
»இறந்தவரைக் குளிப்பாட்டும் போது நெற்றியில் சந்தனம் அல்லது நறுமண பொருட்களால் எழுதுதல்.
»இறந்தவர் உடலைத் தூக்கிச் செல்லும் போது கலிமா ஷஹாதத் எனக்கூறுதல் » கப்ருக்கு அருகே நின்று தல்கீன் கூறுதல்
» கப்ருகளைக் கட்டுதல், பூசுதல்.
» கப்ருக்கு மேல் சந்தனம் பூசுதல்,
» கப்ருக்கு அருகில் ஊதுபத்தி கொழுத்தி வைத்தல் » கப்ரின் மேல் பூமாலைகளை போடுதல் »இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் ஓதுதல்.
»இறந்தவருக்காக குர்ஆன் ஓதி ஹதியா செய்தல்.
»இறந்தவருக்காக மூன்றாம் பாத்திஹா, ஏழாம் பாத்திஹா, வருட பாத்திஹா ஓதுதல்.
»ஜனாஸாவைத் தூக்கும் போது கூட்டு துஆ ஓதுதல் ஜனாஸா விஷயத்தில் இவை போன்ற பல பித்அத்தான செயல்களை மக்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இவற்றை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : (புகாரி: 2697)
“விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : (புகாரி: 2697)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : (நஸாயி: 1560)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையாக(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டம் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி) நூல்: (அஹ்மத்: 16519)
நபி (ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் மக்கள் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுக்கப்படும் என்று எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.
தவறான புரிதலின் அடிப்படையிலும் இவ்வாறு செய்வதற்கு அதிக நன்மை கிடைக்கும் என்று எண்ணியும் தான் ஜனாஸாக்கள் தொடர்பான பித்அத்தான காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர். இது தவறாகும். எனவே நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த முறையில் ஜனாஸாக்கள் விஷயத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டும் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.