07) ஒழுக்க வாழ்வும் உயர்ந்த கூலியும்

நூல்கள்: இஸ்லாம் கூறும் குடும்பவியல்

குடும்ப அமைப்பைச் சிதைக்கக் கூடிய ஒழுக்கக் கேடுகளிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும் என்பதன் ஒரு பகுதியைப் பார்த்தோம்.

கணவன், மனைவி என்ற உறவின் மூலமே தவிர ஒரு ஆணோ, பெண்ணோ தன் உடல் சுகத்தை அனுபவிக்கவே கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இப்படி யாரெல்லாம் குடும்பத்திற்கு விசுவாசமாக, ஒழுக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்துகளைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நபியவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்கள். மூன்று நபர்கள் பிரயாணம் செய்வது பற்றிய செய்தியாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்த போது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் (ஒதுங்குவதற்காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையி-ருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் அப்போது தமக்குள், “நாம் (மற்றவர்களின் திருப்திக்காக இன்றி) அல்லாஹ்வுக்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இதனை அகற்றிவிடக்கூடும்” என்று பேசிக் கொண்டனர்.

எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து, என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முத-ல் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்தி-ருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முத-ல் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பசியால்) கதறிக் கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உனது திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக் கொள்வோம்.

அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக் கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.

இரண்டாமவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்து விட்டாள். நான் முயற்சி செய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்த போது அவள் “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய உரிமை(யான திருமணம்) இன்றித் திறக்காதே” என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!

அவ்வாறே (அல்லாஹ்) அவர்களுக்கு சற்றே நகர்த்திக் கொடுத்தான்.

மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! நான் ஒரு “ஃபரக்‘ அளவு நெல்லைக் கூ-யாக நிர்ணயித்து கூ-யாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தமது வேலை முடிந்தவுடன், “என்னுடைய உரிமையை(கூ-யை)க் கொடு” என்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரது உரிமையை (கூலியை) அவர் முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக் கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட்(டுச் சென்று விட்)டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)-ருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடு” என்று கூறினார்.

அதற்கு நான், “அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)” என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், “அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!” என்று சொன்னார். நான், “உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்” என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார். (இறைவா!) நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!

அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி),

(புகாரி: 2215, 2272, 2233, 3465)

இந்தச் சம்பவத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இறைவனுக்குப் பயந்து செய்யப்பட்டவையாக உள்ளன. அல்லாஹ்வுக்குப் பயந்து தீய செயல்களிலிருந்து நாம் விலகினால், மறுமையிலும், இம்மையிலும் நன்மை தான். அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும் என்பது மறுமையில் கிடைக்கும் நன்மையாகும். இந்த உலகத்திலும் நமது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

நமக்கு இவ்வுலகில் எவ்வளவோ நெருக்கடிகள் இருக்கின்றன. சிலருக்கு அது பொருளாதாரத் தேவையாக இருக்கலாம். சிலருக்கு அது வாரிசு தேவையாக இருக்கலாம். பதவித் தேவையாகவோ, படிப்புத் தேவையாகவே இருக்கலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் பல தேவைகளும் நிர்ப்பந்தங்களும் நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாமும் இவற்றைப் பூர்த்தி செய்வதற்காகப் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் நமது பிரார்த்தனைகள் பூர்த்தியடைவதாக நமக்குத் தெரியவில்லை. நம் வாழ்விலும் இதுபோன்று இறைவனுக்காகவே செயல்பட்டால் நிச்சயமாக நமக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகள் பஞ்சாய் பறந்து போக வாய்ப்பு நிறையவே இருக்கின்றது.

ஒரு தடவை அல்லாஹ்வுக்காகச் செய்த காரியத்தினால் மரணம் ஏற்படுகிற அளவுக்குள்ள நெருக்கடியிலிருந்து காப்பாற்றப்படுவது மிகப் பெரிய அதிசயம் தான். இப்படியெல்லாம் நடப்பதற்குச் சாத்தியமே இல்லை என்று தான் நமது அறிவு சொல்லும். ஆனால் இறைவன் தனது அற்புதத்தைக் நடத்திக் காட்டுவான்.

எனவே அல்லாஹ்வுக்காக ஒழுக்கமாக வாழ்ந்தால், நமது ஒழுக்க வாழ்க்கையைச் சொல்லியே நமது தேவைகளைப் பூர்த்தியாக்குமாறு அல்லாஹ்விடம் கேட்கலாம். “யா அல்லாஹ்! நான் இன்னாருக்குத் தர்மம் செய்தேன். இன்னாருக்குப் பொருள் உதவி செய்தேன். அதனால் எனக்கு இதைத் தா!’ என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

அதுபோன்றே, “யா அல்லாஹ்! உனது அச்சத்தின் காரணமாக நான் திருமணத்தின் மூலமாகவே தவிர எந்த வகையிலும் தவறான பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை. எனவே அதன் காரணத்தினால் எனது இந்தத் தேவையை நிறைவேற்று’ என்று அல்லாஹ்விடம் கேட்பவர்களாக மாற வேண்டும். அதுபோன்ற தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டால் இவ்வுலகில் நமக்கும் இறைவனின் அருள் அறியாப் புறத்திலிருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தச் செய்தியில் மூன்று நபர்களின் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதில் இருவரின் பொதுவான பண்புகளில் எந்தக் குறையையும் காண முடியவில்லை. அவ்விருவரும் நல்லவர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

ஆனால் பெண்ணுடன் தவறாக நடக்க வேண்டும் என்று செயல்பட்டவரின் நிலையைப் பார்த்தால், தவறான முறையில் பாலியல் சுகத்தை அனுபவிப்பதற்காக நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு காசு பணத்தைச் சேர்த்து வைத்து, அதே கெட்ட மனநிலையில் வாழ்ந்தவராகத் தான் பார்க்கிறோம். அப்படியிருந்தும் அவரிடத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள் என்று சொன்னதும் தவறு செய்யாமல் தன்னைத் தடுத்துக் கொண்டதால் அல்லாஹ் கொடுத்த அருள் தான், மரணத்திலிருந்து இவர்கள் பாதுகாக்கப்பட்ட செய்தியாகும்.

எனவே கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டு, இனி வரும் காலங்களிலாவது இல்லற சுகத்தை அனுபவிக்கும் விஷயத்தில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கணவன் மனைவி என்ற அடிப்படையில் மட்டும்தான் சுகம் அனுபவிக்க வேண்டும் என்ற தெளிவுடையவர்களாகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும் வாழ வேண்டும். அப்படி வாழக் கற்றுக் கொண்டால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிடைக்கும்.

நபியவர்கள் ஒழுக்கமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்கின்ற ஆண்களிடமும் பெண்களிடமும் உறுதிமொழிகளை வாங்குவார்கள். அதில் இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளையும் சொல்ல மாட்டார்கள். ஒரே நேரத்தில் அனைத்தையும் சொல்லவும் முடியாது. எனவே ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக் கொடுப்பதுடன் சில முக்கியக் கடமைகளைச் செய்வதற்கும் சில முக்கிய தீமைகளைச் செய்யாமல் இருப்பதற்கும் உறுதி மொழி வாங்குவார்கள்.

பத்ருப் போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டுவரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறுசெய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),  (புகாரி: 18)

இதில் சொல்லப்பட்ட உறுதி மொழியில் விபச்சாரம் செய்யக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள். தொழுகை, நோன்பு, ஸகாத் போன்று இன்னும் எத்தனையோ பல சிறந்த வணக்க வழிபாடுகள் பற்றி உறுதி மொழியில் கேட்காமல் மிகவும் முக்கியமானதை மாத்திரம் இஸ்லாத்திற்கு வருபவர்களிடம் உறுதிமொழியாக வாங்கிக் கொள்வார்கள் நபியவர்கள். எனவே இவ்வுலகில் ஒழுக்கமாக நடப்பது அல்லாஹ்விடத்தில் உறுதிமொழி எடுக்கின்ற அளவுக்கு முக்கியமானதாகும்.

(குறிப்பு: இந்தச் செய்தியை வைத்து நாமும் நமது இயக்கத் தலைவர்கள் அல்லது ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் பைஅத் (வாக்குறுதி பிரமாணம்) செய்யலாம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் பைஅத் சம்பந்தமாக வருகிற வசனங்களில் நபியவர்களிடத்தில் செய்கிற உறுதிமொழி அல்லாஹ்விடம் செய்கிற பைஅத் என்றுள்ளது. எனவே இது நபிக்கு மட்டும் பிரத்தியேகமானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.)

ஒழுக்கக்கேடான செயல்கள், விபச்சாரம், ஆபாசங்கள், அருவருக்கத்தக்க செயல்களைப் பற்றி திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டித்துக் கூறுகிறான்.

வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!   (அல்குர்ஆன்: 6:151)

இஸ்லாத்தைப் பொறுத்த வரை, அசிங்கமான காரியத்தைச் செய்யாதே என்று மட்டும் சொல்லவில்லை. அதன் பக்கம் கூட நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். விபச்சாரம் செய்வது என்பது வெளிப்படையாக உள்ளது. அதற்குத் தகுந்தவாறு பேச்சுக்களைப் பேசுவது, கணவன் மனைவியல்லாத அந்நிய ஆண், பெண்கள் உடலுறவு பற்றிய செய்திகளைப் பரிமாறுவது போன்றவை அந்தரங்கமானது. இதுபோன்ற காரியங்களிலும் நெருங்கக் கூடாது என்று தான் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.