07) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 5

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

ஒப்புக் கொள்ளப்பட்ட பிரார்த்தனை

தன்னை இந்த இக்கட்டிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் காக்க வேண்டி இறைவனிடம் ஏசு பிரார்த்தனை புரிந்ததைக் கண்டோம். அதை இங்கு மீண்டும் நினைவு கூர்வோம்.

பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

மத்தேயு 26:39

மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

மத்தேயு 26:42

அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.

லூக்கா 22:44

ஏசுவின் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரார்த்தனைக்கு என்ன பதில் கிடைக்கும்? ஏசுவின் சகோதரர்களில் ஒருவரான ஜேம்ஸ் கூறுகிறார்.

நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும் போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமை மிக்க மன்றாட்டு, பயன் விளைவிக்கும்.

யாக்கோபு 5:16

ஏசுவின் பிரார்த்தனை செவிடன் காதில் விழுந்த சங்கல்ல என்று பவுலும் உறுதி செய்கின்றார்.

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.

எபிரேயர் 5:7

கடவுள் செவிசாய்த்தார் என்றால் என்ன பொருள்? கடவுள் ஏசுவுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார் என்பது தான்.

தனது தள்ளாத வயதில் தனக்குப் பிள்ளை வேண்டும் என்று ஆபிரஹாம் பிரார்த்தனை புரிந்தார். கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்.

ஜக்கரிய்யா பிரார்த்தித்தார். கடவுள் அவருக்கு உடனே பதிலளித்து யோவானை வழங்கினார்.

அதுபோல் ஏசு பிரார்த்தனை புரிகின்றார். அவருக்கும் கடவுள் உடனே பதிலளிக்கிறார்.

அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

லூக்கா 22:43

வானவர் வந்து ஏசுவுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றார். ஆம்! ஏசு மரணித்திடாத வண்ணம் ஒரு பாதுகாப்பை வானவர் வழங்குகின்றார்.

ஏசுவைக் காப்பாற்றுவதற்குக் கடவுள் செய்த ஏற்பாடுகளை இங்கொரு பட்டியல் இடுவோம்.

  1. வானத்திலிருந்து வானவர் மூலம் ஒரு வாக்குறுதி
  2. பிலாத்து ஏசுவைக் குற்றமற்றவராகக் காணுதல்.
  3. ஏசுவுக்குக் கடுகளவும் துன்பம் தரலாகாது என்று பிலாத்தின் மனைவி செய்த வேண்டுகோள்.
  4. சிலுவையில் கால்கள் முறிக்கப்படாதது.
  5. அவசரம் அவசரமாய் ஏசுவை சிலுவையிலிருந்து கீழே இறக்குதல்

இவை அனைத்துமே ஏசு இறக்கவில்லை என்பதற்கு அடுக்கடுக்கான, அற்புதமான ஆதாரங்களாகும்.