07) இறைநேசர்களை மக்கள் தீர்மானிக்க முடியுமா?

நூல்கள்: இணை கற்பித்தல் ஓர் விளக்கம்

மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நபிமார்களாலும் அறியமுடியாது என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தோம். யூசுப் (அலை) அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் இதற்கு ஆதாரமாகக் கூறலாம்.

யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, “யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்” என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் தந்தை யஃகூப் நபியவர்களுக்கு தெரியவில்லை.

பெற்ற பிள்ளைகளே தங்களுடைய மனதில் கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள் என்ற விஷயத்தை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது. இதன் முழு விபரத்தை திருக்குர்ஆனின் 12வது அத்தியாயமான சூரா யூசுப் என்ற அத்தியாயத்தில் காணலாம்.

ஆக, யாருடைய வெளித்தோற்றத்தை வைத்தும் நாம் அவரை நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்துச் சொல்ல இயலாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு, அவ்லியாக்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது, அவர்கள் இறைநேசர்கள் தான் என்று சொல்லக் கூடியவர்கள் ஒரே ஒரு ஹதீஸை மட்டும் அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ் பல வித்தியாசமான வார்த்தைகளால் பல நூல்களில் வந்திருக்கிறது.

ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். உமர் (ரலி) “எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்” எனக் கூறினார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 1367)

இந்த ஹதீஸை வைத்துப் பார்த்தால் நமக்கு என்ன விளங்குகிறது? நாம் எல்லாரும் சேர்ந்து ஒருவரைஅவ்லியா என்றால் அவர் அவ்லியாதான். சாகுல் ஹமீது அவ்லியா என்றும், அஜ்மீர் அவ்லியா என்றும் எத்தனையோ பேர் சொல்கிறார்கள். இப்படி ஏராளமான மக்கள் ஒருவரைப் பற்றி நற்சான்றிதழ் சொன்னார்களேயானால் அந்த மாதிரி அவர் அல்லாஹ்விடத்தில் இருப்பார் என்ற வாதத்தை வைக்கின்றனர்.

இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்துப் பார்க்கும் போது அவர்கள் சொல்கின்ற கருத்து சரி தான். அதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இதுவரைக்கும் நாம் எடுத்து வைத்த ஹதீஸ்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? இதுவரை நாம் எடுத்து வைத்த அத்தனை ஆதாரங்களுமே யாரையும் நாம் இறைநேசர் என்றோ, அவ்லியா என்றோ, மகான் என்றோ கூறமுடியாது. ஸஹாபாக்கள் மட்டுமல்லாமல் இறைத்தூதர்களால் கூட ஒருவரை இறைநேசர் என்று கூறமுடியாது என்பது தான் இதுவரை கண்ட ஆதாரங்களிலிருந்து விளங்கும் உண்மை. அவ்வாறு இருக்கும் போது இந்த ஒரு ஹதீஸை மட்டும் ஏற்றுக் கொண்டு, தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு மற்ற எல்லா ஹதீஸ்களையும் மறுப்பது சரியான வாதமல்ல.

நாம் நமது நடைமுறை வாழ்க்கையில் கூட இதைக் காணலாம். நம் கண்ணுக்கு முன்னால் அயோக்கியன், கெட்டவன் என்று தெரிந்த ஒருவனை எல்லாரும் சேர்ந்து கொண்டு நல்லவன் என்று சொல்கிறார்கள். அவனை நல்லவன் என்று பாராட்டுகிறார்கள். நமக்கு நல்லவன் என்று தெரிந்தவனை அயோக்கியன் என்று சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எத்தனையோ பேர் இறந்து போனதற்காக வேண்டி, இலட்சோப இலட்ச மக்கள் அவர்களுடைய அடக்கத்தலத்திற்குச் சென்று அவரை போற்றிப் புகழ்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் தலைவரோ அல்லது அரசியல் தலைவரோ இறந்து விட்டால் எவ்வளவோ பேர் அதில் கலந்து கொள்கிறார்கள். அவருடைய ஜனாஸாவில் சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர் ஆன்மீக ரீதியாகவோ, மார்க்க ரீதியாகவோ எதையும் செய்திருக்கமாட்டார். அவர் ஒரு முஸ்லீம் லீக் தலைவராக இருந்து அவர் இறந்து விட்டால் அவருடைய அடக்கத்தலத்திற்கு சென்று அவர் அப்படி, இப்படி என்று நாம் புகழ்வதின் மூலமாக அவர் சொர்க்கவாசியாக ஆகிவிடுவாரா?

மேற்கண்ட ஹதீஸைப் பார்க்கும் போது அவர் சொர்க்கவாசியாக ஆகிவிடுவார் என்பது போன்று நமக்குத் தோன்றும். ஆனால் இதற்கு முன்னால் நாம் பார்த்த அனைத்து ஹதீஸ்களிலும் அவ்வாறு சொல்லக்கூடாது என்றும் வருகிறது. ஆனால் இந்த ஹதீஸில், உள்ளத்தில் உள்ளதை அறியமுடியும் என்று வருகின்றதே? என்ற குழப்பம் நம்முடைய மனதில் எழலாம்.

ஆனால் இந்த ஐயத்தை போக்கும் விதமாக நாம் இன்னும் வேறு ஹதீஸ்களை ஆராய்ந்து, சிந்தித்துப் பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும். இந்த இரண்டு செய்திகளை மட்டும் வைத்துப் பார்க்காமல் இது சம்பந்தமாக வேறு என்னென்ன செய்திகள் வருகின்றதோ அத்தனை ஹதீஸ்களையும் ஆராய்ந்து பார்த்தோமென்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை எதற்குச் சொன்னார்கள்? அது நபிகளாருடைய காலத்துடன் முடிந்து விட்டதா? அல்லது இன்றைக்கும் அது இருக்கிறதா? என்ற விவரங்கள் நமக்குத் தெளிவாகி விடுகின்றது. அது என்ன செய்தியென்றால், நாம் மேற்கூறிய ஜனாஸா சம்பந்தப்பட்ட செய்தி தான்.

ஒரு செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்களில் ஒருவர் ஒரு செய்தியை மட்டும் கூடுதலாக அறிவிப்பார். இன்னொருவர் குறைவாக அறிவிப்பார். ஆனால் நடந்த விஷயம் நிறைய இருக்கும். 10 விஷயம் நடந்திருக்கின்றது என்றால் ஒருவர் அதில் ஏழு விஷயங்களை மட்டும் அறிவிப்பார். இன்னொருவர் ஐந்தைச் சொல்லி ஐந்தை விட்டுவிடுவார். வேறொருவர் ஒன்பது செய்திகளைச் சொல்லி ஒன்றை மட்டும் விட்டுவிடுவார். இன்னொருவர் அந்தப் பத்து செய்திகளையும் முழுவதுமாகச் சொல்லி விடுவார்.

இதை நாம் நம்முடைய வாழ்க்கையில் கூடக் காணலாம். நாம் ஒரு மணி நேர சொற்பொழிவைக் கேட்கிறோம். நம்மில் சிலர் அந்த ஒரு மணி நேர பயானை அப்படியே கேட்டபடி சொல்லக் கூடியவர்கள் இருப்பார்கள். அதில் பாதியை விட்டுவிட்டு பாதியைச் சொல்லக் கூடியவர்களும் இருப்பார்கள். அல்லது நமக்கு அந்தச் சொற்பொழிவில் எது பிடித்தமானதாக இருக்கிறதோ அதை மட்டும் சொல்வோம். இப்படி நாமே நமக்குள் பலவிதமான கருத்தில் இருக்கிறோம்.

இதைப் போன்று தான் ஸஹாபாக்களில் சிலர் கூடுதலாகவும், வேறு சிலர் குறைவாகவும் அறிவிப்பார்கள். நாம் இப்போது மேற்கண்ட ஜனாஸா குறித்த செய்திக்கு வருவோம். மற்றொரு அறிவிப்பில் கூடுதலான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதை அந்த அறிவிப்பாளர் விட்டுவிட்டார். அது என்ன வாசகம் என்றால், முதலில் ஒரு ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியாகி விட்டது என்று சொல்கிறார்கள். பிறகு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியாகி விட்டது என்று சொல்கிறார்கள். இத்துடன் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் முடித்து விடுகிறார். ஆனால் இன்னொரு அறிவிப்பாளர், இதற்குப் பின்னால் ஒரு செய்தியைக் கூடுதலாகக் கூறுகிறார்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், “இது யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள்.

பிறகு மற்றொரு ஜனாஸா கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்குமார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்” என்று கூறினார்கள்.

நூல்: ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533

இது ஆதாரப்பூர்வமான, அறிவிப்பாளர்களில் எந்தக் குறையும் இல்லாத செய்தியாகும்.

இப்போது நாம் ஒருவரை நல்லவர், அவ்லியா என்று சொல்கிறோம். அவரை நாமாக அவ்லியா என்று சொன்னோமா அல்லது மலக்குமார்கள் சொல்லி அவ்லியா என்று சொன்னோமா? என்றால் நமக்கு இது தெரியாது. ஆனால் நபியவர்களுக்கு மட்டும் எவ்வாறு தெரிந்தது என்றால் அல்லாஹ் அதை அறிவித்துக் கொடுப்பான்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது? இந்தச் சம்பவம் நபியவர்களுடைய காலத்திலேயே முற்றுப் பெற்றுவிட்டது. இந்தக் காலத்திற்கு இது பொருந்தாது. நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரேனும் ஒருவரை நல்லவர் என்று பாராட்டிச் சொன்னால் அல்லாஹ் மலக்குமார்களை அனுப்பி பாராட்டிச் சொன்னானா? அல்லது இவர்களாகத் தங்களது குருட்டு பக்தியின் காரணமாகப் பாராட்டிச் சொல்கிறார்களா? என்பதை நபியவர்கள், மலக்குமார்களை பார்க்கக் கூடியவர்களாக இருந்ததால் கண்டுபிடித்து விடுவார்கள்.

ஆனால் நாம் ஒருவரை நல்லவர் என்று சொன்னால் அது நம்முடைய வார்த்தையா? மலக்குகளுடைய வார்த்தையா? என்பதைக் கண்டறிய நம்மால் முடியாது. காரணம், இறைச் செய்தி முற்றுப் பெற்றுவிட்டது.

இது நம்முடைய காலத்திற்குப் பொருந்தாது என்று விளங்கிக் கொண்டால் நம்மிடம் இது போன்ற தவறுகள் வராது. நாமும் யாரையும் நல்லவர் என்று சொல்லவும் மாட்டோம்.

அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் யாருடைய பெயரைக் குறிப்பிட்டு இவர் நல்லவர் என்று சொன்னானோ, அல்லது நபியவர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரைச் சொல்லி, அல்லது குறிப்பிட்ட பண்புகளை, தன்மைகளைச் சொல்லி இவர் நல்லவர் என்று அடையாளம் காட்டினார்களோ அவர்களை அவ்லியா, நல்லவர் என்று சொல்லலாம்.

நாம் ஒருவரை அவ்லியா என்று தீர்மானிப்பதாக இருந்தால் குர்ஆனில் அவர்கள் அவ்லியா என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது நபியவர்கள் வஹீயின் அடிப்படையில் ஒருவரை நல்லவர் என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் மட்டுமே அவர்களை அவ்லியா என்று சொல்லலாம்.

நபியவர்களுடைய காலத்திற்கு பிந்தி உள்ளவர்களை நாம் அவ்லியா என்று தீர்மானிக்கக்கூடாது. யாரெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்பதை நபியவர்கள் நமக்கு சொல்லித் தந்து விட்டார்கள். நபியவர்களுடைய காலத்திற்குப் பின்னால் ஒருவர் இறைநேசராக இருந்தாலும் அது நமக்கு தெரியாது என்பதை தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்த) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் “நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், “நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்” என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் “நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது” என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர் முகங்குப்புறவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் “நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் “நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்” என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் “நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது” என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்குப்புறவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும்.

அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், “நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் “நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை” என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் “நீ பொய் சொல்கிறாய். வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது” எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும்.

(முஸ்லிம்: 3527)

உயிர்த் தியாகம் செய்தவரை சொர்க்கவாசி என்று நாம் அனைவரும் நினைத்திருப்போம். அவரும் நாம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டிருக்கிறோம்; அல்லாஹ்விற்காகத் தான் உயிரைத் தியாகம் செய்திருக்கிறோம் என்று நினைத்திருப்பார். ஆனால் அல்லாஹ், “உன்னுடைய உள்ளம் தூய்மையாக இல்லை. நாம் கொல்லப்பட்டால் வரலாற்றில் இடம்பிடிப்போம், நமது பெயர் நிலைத்து நிற்கும், நம்மை தியாகி என்று மக்கள் பாராட்டுவார்கள் என்பதற்காகத் தான் இதை செய்தாய்’ என்று அவரை நிராகரிதத்து விடுவான்.

உயிரைத் தியாகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உலகத்தில் மனிதன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொத்து, சுகம் என்று எதையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறான். உயிரை விடுவதற்கு யாரும் அவ்வளவு எளிதாக முன்வரமாட்டார்கள்.

ஆனால் தன்னுடைய உயிரையும் தியாகம் செய்த ஒருவருடைய நிலை மறுமையில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உள்ளம் தூய்மையாக இல்லாத காரணத்தினால் இவர் அல்லாஹ்விடத்தில் இறைநேசர் என்னும் சிறப்பை அடைய முடியாதவராக ஆகிவிட்டார். நம்முடைய பார்வையில், நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்து, பதவி இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காமல் போய்விட்டது. இன்று நாம் யாரையெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்கிறோமோ அவர்கள் இந்த உயிர்த் தியாகிக்குச் சமமாவார்களா?

ஆக, உலகத்தில் நாம் நல்லவர், அறிஞர், மகான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் எண்ணம் சரியாக இருக்கிறதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. மறுமை நாளில் தாம் செய்த செயலுக்கு நற்பேறு கிடைக்குமா என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. நாம் உயிர்த் தியாகம் செய்து விட்டோம். கற்றறிந்த கல்வியின் மூலமாக மக்களை நேர்வழிப்படுத்தினோம். பிறருக்கும் கற்றுக் கொடுத்தோம். நல்லவற்றிற்காக தான, தர்மங்கள் வழங்கினோம். அதனால் நமக்கு அல்லாஹ்விடத்தில் பரிசு கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு என்ன நிலை என்பதை இந்தச் செய்தியின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.