07) இறைத்தூதரை இறைவன் கைவிடமாட்டான்
முற்பகல் மீது சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.
ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை’ என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை’ எனும் (அல்குர்ஆன்: 93:1-3) ➚ வசனங்களை அருளினான்.
நூல்: (புகாரி: 4950)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினார்.) அப்போது அபூபக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) ‘கஅகாஉ இப்னு மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!’ என்று (யோசனை) கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), ‘உங்களுக்கு எதிராகப் பேசுவது என்னுடைய நோக்கமன்று’ என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன.
இது தொடர்பாகவே ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’ எனும் (அல்குர்ஆன்: 49:1) ➚வது) இறைவசனம் முழுவதும் இறங்கிற்று.
நூல்: (புகாரி: 4847)
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாயுஉ குலத்தவரான அக்ரஃ இப்னு ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ இப்னு மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.
அப்போது அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) அவர்களிடம், ‘எனக்க மாறு செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்’ என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘தங்களுக்கு மாறு செய்வது என் விருப்பமன்று’ என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!’ எனும் (அல்குர்ஆன்: 49:2) ➚ வசனத்தை அல்லாஹ் அருளினான்.
நூல்: (புகாரி: 4845)
நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்னார்’ என்று கூறினார்கள். அப்போதுதான் ‘நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும்’ எனும் இந்த (5:101) இறைவசனம் அருளப்பட்டது.
நூல்: (புகாரி: 4621)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் ‘என் ஒட்டகம் எங்கே?’ என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த (5:101) வசனத்தை அருளினான்.
நூல்: (புகாரி: 4622)
கேள்வியும் பதிலும்
(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ என்று கூறுவீராக!
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரிச்சந்தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரிச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) ‘இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்’ என்றார். மற்றவர், ‘உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது?’ என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் ‘நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக்கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)’ என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து) ‘அவரிடம் கேளுங்கள்’ என்றனர்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹைப்) பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என அறிந்துகொண்டேன். எனவே, நான் என்னுடைய இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ எனும் (அல்குர்ஆன்: 17:85) ➚ இறைவசனத்தைக் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 4721)