07) ஆதம் நபி வரலாறு

நூல்கள்: நபிமார்கள் வரலாறு

இந்த உலகைப் படைத்து பாதுகாத்து ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஏக இறைவன் அல்லாஹ் உலகில் வாழ்வதற்குறிய சிறப்பான படைப்பாக மனிதனை ஏற்படுத்தினான்.

ஆனால் மனிதனோ தான் நினைத்தவாறு வாழ்ந்து உலக வாழ்வுக்குப் பிறகுள்ள நிறந்தரமான மறுமை வாழ்வில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக மனிதனை சீர் திருத்தம் செய்வதற்கு காலத்திற்குக் காலம் நபிமார்களை தூதர்களை அனுப்பி மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை கற்றுத் தந்தான்.

மனிதப் படைப்பை இறைவன் ஏற்படுத்தியதில் முதல் படைப்பாக ஆதாம் என்ற ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாள் என்ற ஹவ்வா அவர்களையும் ஏற்படுத்தினான்.

இந்த ஆதம் (அலை)அவர்களைப் பற்றி வரலாறு என்ற பெயரில் பலர் பல புனைக் கதைகளையும் தங்கள் சுய எண்ணங்களையும் எழுத்தாக்கியுள்ளனர்.

குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபிமார்களின் வரலாற்றை தொகுக்கும் இந்த முயற்சியில் ஆதம்(அலை)அவர்களின் வரலாற்றை முதலாவதாகப் பார்ப்போம்.

இந்தத் தொடரில்…..

முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா?

ஆதம் எங்கு இறக்கப்பட்டார்?

ஆதம் இலங்கையில் இறக்கப்பட்டாரா?

இலங்கை முஸ்லீம்களின் பூர்விகம் என்ற புத்தகத்திற்கு பதில்.

ஆதம் நபியின் மொழி தமிழா?

இலங்கையையும் இந்தியாவையும் பிரிப்பது ஆதாம் பாலமா?

ஆதம் அவர்கள் நபிதானா?

உலகின் முதல் மனிதர் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகிற்கு அனுப்பப் பட்ட முதல் நபி என்றும் நம்பப் படுகிறார்கள்.

உலகின் முதல் மனிதர் ஆதம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை சிலர் மறுக்கிறார்கள்.

இதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவு படுத்தவில்லை. ஆனால் உலகின் முதல் மனிதர்தான் முதல் நபி என்பதற்கு திருமறைக் குர்ஆனில் தெளிவான ஆதாரம் இருக்கிறது.

பொதுவாக நபிமார்களை இறைவன் குறிப்பிடும் போது நபி என்ற வாசகத்தை குறிப்பிட்டு சொல்வதைப் போல் அல்லாமல் ஆதம் நபியவர்களை நபிமார்களுக்கு பயன்படுத்தும் ஒரு வார்த்தையைக் கொண்டு இறைவன் பயண்படுத்துவதின் மூலம் அவர் நபிதான் என்பதை நமக்குத் தெளிவு படுத்துகிறான்.

ஆதம்,நூஹ்,இப்ராஹீமின் குடும்பத்தார் மற்றும் இம்ரானின் குடும்பத்தினரை அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.(அல்குர்ஆன்: 3:33)

மேற்கண்ட வசனத்தில் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான் என்று குறிப்பிடப் படுகிறது.இதில் அரபி வாசனத்தில் இஸ்தபா என்ற வாசகத்தை இறைவன் பயன்படுத்தியுள்ளான் இஸ்தபா என்பது திருமறைக் குர்ஆனில் இறை தூதர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப் படும் வார்த்தையாகும்.

அந்த வார்தையை குறிப்பிட்டு இறைவன் ஆதம்(அலை)அவர்களையும் குறிப்பிடுவதில் இருந்து ஆதம் அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி காட்டினான்.    (அல்குர்ஆன்: 20:121-122)

மேற்கண்ட திருமறை வசனத்திலும் இறைவன் ஆதம் நபியவர்கள் செய்த தவரை மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடுகிறான்.இந்த வசனத்திலிருந்தும் ஆதம் அவர்கள் ஒரு நபியாகத்தான் இருந்தார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

நபிமார்கள் யாருக்கு அனுப்பப் படுவார்கள்?

ஆதம்(அலை)அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட செய்தியை இறைவன் குறிப்பிடும் போது பயண் படுத்தும் வார்த்தையும் ஆதம் அவர்கள் நபியாகத் தான் இந்த உலகில் இருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். ‘இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன” என்றும் நாம் கூறினோம். (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான் அவன் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 2:36-37)

ஆதம் நபியவர்கள் தவறு செய்ததை குறிப்பிடும் இறைவன் தனது தவறிலிருந்து ஆதம் அவர்கள் மன்னிப்பை வேண்டுவதற்காக அவருக்கு சில வார்தைகளை கற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறான்.

இறைவனிடம் இருந்து ஒருவருக்கு வஹி வருமாக இருந்தால் அவர் நபியாக இருந்தால் மாத்திரம் தான் அது சாத்தியமாகும்.ஆதம் அவர்கள் நபியாக இல்லாமல் இருந்திருந்தால் தன்னிடம் இருந்து சில வார்த்தைகளை ஆதம் பெற்றுக் கொண்டார் என்று இறைவன் கூற வேண்டிய அவசியம் இல்லை.

அதே போல் அதற்கு அடுத்த வசனத்தில் இறைவன் குறிப்பிடும் போது இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்” என்று கூறினோம்.   (அல்குர்ஆன்: 2:38)

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.      (அல்குர்ஆன்: 20:123)

தவறு செய்த ஆதம் அவர்கள் பூமிக்கு அனுப்பப் படும் நேரத்தில் என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை.என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

ஆதம் நபியவர்கள் பூமிக்கு அனுப்பப் படும் போதே அவர்களுக்கு நேர்வழியை இறைவன் அழிப்பதாக வாக்குறுதி தருகிறான்.

ஆதம் நபியவர்களுடைய சமுதாயத்தினருக்கு நேர் வழி காட்ட ஒரு தூதராக அவரையே இறைவன் தூதுத்துவத்தை கொடுத்து அனுப்பியுள்ளான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நேர் வழி உங்களுக்கு வரும் என்று இறைவன் கூறினாலே வந்திருக்கிறது என்றுதான் நாம் புரிய வேண்டும்.ஏனெனில் இறைவன் தனது வாக்குக்கு மாறு செய்யமாட்டான்.

மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது கண்டிப்பாக ஆதம்(அலை)அவர்கள் ஒரு நபியாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை தௌவாக நமக்கு அறிவித்துத் தருகிறது.