06) 6 வது வசனம்

மற்றவை: (Changed from Books to Bayans) கஹ்ஃப் அத்தியாயம்-விளக்கம்
கவலையினால் தன்னையே மாய்த்தல்

இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். (வசனம் 6)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைக் கேட்டு அதைப் பலரும் நிராகரிக்கலானார்கள். இந்த நிராகரிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. மிகப் பெரிய அளவில் கவலைப் பட்டு தம்மையே அழித்துக் கொள்வார்களோ என்று கருதும் அளவுக்குக் கவலைப்பட்டார்கள். இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
இப்படியெல்லாம் கவலைப் படக் கூடாது என்று இங்கே கூறுகிறானா?. மனித குலத்தின் மீது நபிகள் நாயகத்துக்கு இருந்த அக்கறையைச் சுட்டிக் காட்டி பாராட்டுகிறானா?
இவ்வசனத்தின் வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரண்டு விதமாகவும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது.
குடும்பத்திற்காக ஓடாய்த் தேய்கிறாயே என்று ஒருவரிடம் நாம் கூறும் போது இப்படியெல்லாம் தேய வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது குடும்பத்தின் மீது தான் இவனுக்கு எவ்வளவு அக்கறை என்பதை மறைமாகப் பாராட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அது போன்ற நிலையில் தான் இவ்வாசக அமைப்பும் உள்ளது.
எனவே இவ்வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றாலும் வேறு இடங்களில் இது பற்றி ஏதும் கூறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் தான் இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியும். அவ்வாறு ஆய்வு செய்யும் போது இது குறித்து தெளிவான கருத்தைக் கூறுகின்ற வசனத்தைக் காணமுடிகின்றது.
நேர்வழீ காட்டும் அதிகாரம் இறைவனுக்கே
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழி கேட்டில் விட்டுவிடுகிறான். நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான். எனவே உம்முடைய உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு கவலைப்பட வேண்டாம். நிச்சயமாக அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன்:)
அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது என்று 35 : 8 வசனத்தில் தெளிவாகக் கூறுவதால் கஹ்பு அத்தியாயத்தின் மேற்கண்ட வசனத்தையும் இந்தக் கருத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சமுதாயம் குறித்து கவலைப்படுவது வரவேற்கத்தக்கப் பண்பாடு தானே என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தப் பண்பாடு இருப்பதால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை தானே சேரும். இதை ஏன் இறைவன் கடிந்து கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.
மக்களுக்காகக் கவலைப்படுவது மனிதனின் உயர்ந்த பண்பு தான். இறைவன் ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
இக்கேள்விக்கான விடை இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் நாம் எடுத்துக் காட்டிய 35 : 8 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் நேர்வழி பெறுவதும் பெறாமல் போவதும் இறைவனின் அதிகாரத்தின் பாற்பட்டதாகும். எவரையும் நேர்வழியில் சேர்க்கும் அதிகாரம் எந்த மனிதருக்கும் கிடையாது. சிலர் நேர்வழி பெற மறுக்கிறார்கள் என்பதற்காக கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும். இறைவனின் முடிவைக் குறை கூறுவதாக அமையும். அல்லாஹ்வுடைய முடிவில் அதிருப்தி கொள்வதாகவும் இது அமைந்து விடும். இந்தக் காரணத்துக்காகத் தான் இப்படி கவலைப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறு நாம் சுயகற்பனையை கூறவில்லை. 35 : 8 வசனத்தில் இந்தக் கருத்து அடங்கியுள்ளதைப் பார்க்கலாம். “அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான், நாடியவர்களை வழி கேட்டில் விட்டு விடுகிறான்” எனக் கூறிவிட்டுத் தான் “கவலைப்பட்டு உம்மையே மாய்த்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறுகிறான்.
உமக்குச் சம்பந்தமில்லாத ஒன்றுக்காக நீர் ஏன் வீணாகக் கவலைப்பட்டு அழிய வேண்டும் என்ற தோரணையில் தான் இந்த அறிவுரை கூறப்படுகிறது.

அபூ தாலிப் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் மரண வேளையை அடைந்த போது அவருக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுத்தார்கள். அவர் ஏற்க மறுத்து காபிராகவே மரணித்தார். இதற்காக கவலைப்பட்ட போது, “நீர் விரும்பியர்களுக்கு நேர்வழி காட்ட முடியாது. எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன்:) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இது புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஒருவர் நேர்வழி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுவதை அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு நேர்வழி காட்டுவது உமது பொறுப்பு அல்ல. எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் (அல்குர்ஆன்:) என்ற வசனமும் நீர் எவ்வளவு தான் ஆசைப் பட்டாலும் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களாக இல்லை (அல்குர்ஆன்:) என்ற வசனமும் ஏன் கவலைப்படக் கூடாது என்பதை விளக்குகின்றன.
நபிகள் நாயகத்துக்கே இந்த அதிகாரம் இல்லை என்றால் நம்மவர்களின் நிலை என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இத்தனை வருடமாக நான் சொல்லியும் கேட்க மறுக்கிறார்களே! என் தந்தையை என்னால் திருத்த முடியவில்லையே என்றெல்லாம் மாய்ந்து போகும் உரிமை நமக்கு இல்லை. எடுத்துச் சொல்லும் கடமை தவிர வேறு கடமை நமக்கில்லை என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

கவலையின் விளக்கம்

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
கவலைப்படும் படியான நிகழ்வுகள் ஏற்படும் போது நம்மையுமறியாமல் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். அது நமது அதிகாரத்தின் பாற்பட்டது அல்ல. இத்தைகைய கவலை இங்கே தடை செய்யப்படவில்லை. 35 : 8 வசனத்திலும் இந்த அத்தியாயத்திலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு உயிரையே மாய்த்துக் கொள்ளும் படியான கவலைக்குத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாசக அமைப்பிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.
உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறுவதிலிருந்தே சாதாரணமாக ஏற்படும் கவலைக்கு அனுமதி உள்ளது என்பதை விளங்கலாம்.
நாம் வேண்டிய உறவினரை இழந்து விடும் போது அழுவது அல்லாஹ்வின் தீர்ப்பை மறுப்பதாக ஆகாது. அதே நேரத்தில் காலமெல்லாம் அதையே நினைத்து பிரலாபித்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்ப்பதாக ஆகும். இது போலத் தான் இந்தக் கவலையையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகக் கவலைப்பட வேண்டாம் என்ற கருத்திலும் சில வசனங்கள் உள்ளன. அவ்வசனங்களை ஆதாரமாகக் காட்டி சிறிய அளவில் கூட இதற்காகக் கவலைப்படக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். அந்த வசனங்கள் இவைதாம்.
(இறை) மறுப்புக் கொள்கையில் அவர்கள் விரைவாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக் கவலை கொள்ளச் செய்ய வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்து விட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த பாக்கியமும் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் விரும்புகிறான். அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:)
தூதரே! உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறுகிறார்களே அவர்களிலும் யூதர்களிலும் நிராகரிப்பின் பால் விரைந்து செல்பவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். (அல்குர்ஆன்:)
எவர் நிராகரிக்கின்றாரோ அவருடைய நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். (அல்குர்ஆன்:)
இந்த வசனங்கள் யாவும் காபிர்களுக்காக அறவே கவலைப்படக் கூடாது என்று தானே கூறுகின்றன. உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறவில்லையே என்பது இவர்களின் வாதம்.
கவலைப்படுதல் என்பது இரண்டு வகைகளில் ஏற்படும்.
நரகத்தில் கிடந்து வேதனைப் படப் போகிறார்களே என்று கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காக படுகின்ற கவலை ஒரு வகை.
நமக்கெதிராகத் திரண்டு விட்டார்களே, இவர்களால் நமக்கோ நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதும் தீங்கு நேருமோ என்று தமக்காகப் படும் கவலை மற்றொரு வகை.
ஒன்று பரிதாபத்தால் ஏற்படுவது. மற்றொன்று பயத்தால் ஏற்படுவது. ஒன்று மற்றவருக்காகக் கவலைப்படுவது. மற்றொன்று தமக்காகக் கவலைப்படுவது.
இவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் யாவும் இரண்டாவது வகையான கவலையைக் குறிக்கின்றன.
அவர்கள் இறை நிராகரிப்பின் பால் விரைந்து செல்வது பற்றிக் கவலைப்படாதே எனக் கூறிவிட்டு அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது மார்க்கத்துக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களால் ஏதும் தீங்கு நேருமோ என்று பயந்து கவலைப் படாதீர் என்ற கருத்திலேயே இவ்வசனங்கள் அமைந்துள்ளன. கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காகக் கவலைப்படுவதை கூறவில்லை.
சங்பரிவாரக் கும்பலைப் பற்றி கவலைப்படாதே என்பதும், மனைவி இறந்ததற்காகக் கவலைப்படாதே என்பதும் ஒரே வகையானது அல்ல. இதைப் புரிந்து கொண்டால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக நம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது, அதே சமயம் அக்கறையின் காரணமாக சாதாரணமாகக் கவலை கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.