06) 1- கதீஜா (ரலி) அவர்கள்
இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும்.
நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது.
பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் – அவர்கள் மட்டுமே – இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.
அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.
எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.
தாம் இறைத் தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.
இதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.
அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா? என்று (முஹம்மதே!) கூறுவீராக!
தம்மை இறைத்தூதர் என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமவெறி காரணமாகப் பல திருமணங்களைச் செய்தார்கள் எனக் கூறுவது அடிப்படை அற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பிற்காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்திட வேண்டும் என்கிற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் அவர்களை வெறுத்தது. பல்வேறு இழிந்த பட்டங்களைச் சூட்டி அவர்களை இழிவுபடுத்த முனைந்தது அந்தக் கூட்டம். இவ்வளவு வெறுப்புக்குரியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆகிவிட்ட பின்னரும் நபியவர்களின் கடந்த கால ஒழுக்க வாழ்வு பற்றி அவர்கள் விமர்சித்ததில்லை.
கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையது.
தாய், தந்தையின்றி வளரும் குழந்தைகள் தறுதலைகளாகத் திகழ்வது தான் இயல்பபு. தாய், தந்தையின்றி வளர்ந்த நபியவர்களுக்கு கெட்டுப் போவதற்கான எல்லா வசதியும் இருந்தது. அன்றைய சூழ்நிலை கெட்டுப் போவதற்கான எல்லா வாசல்களையும் திறந்து விட்டு வாய்ப்புக்களைத் தாராளமாக வழங்கியிருந்தது. இந்த நிலையிலும் அவர்கள் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவராக இருந்தார்கள் என்ற விமர்சனத்தை இது பொய்யாக்கி விடுகின்றது.
தமது இருபத்தைந்தாம் வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட முதல் திருமணம் அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இருபத்தைந்து வயதில் ஆணழகராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பருவத்தில் எவரும் ஆசைப் படக்கூடிய கட்டழகுக் கன்னியை மணக்கவில்லை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமாகிப் போன நாற்பது வயது கதீஜா (ரலி) அவர்களையே மணம் செய்தார்கள்.
தவறான வழியில் சென்று விடாமல் இருக்க ஒரு மனைவி தேவை என்ற சாதாரண நோக்கம் தான் அவர்களுக்கு இருந்ததே அன்றி இளமை, அழகு, கன்னித் தன்மை எல்லாம் நிறைந்திருக்கக் கூடிய அதிகத் தகுதியுள்ள மனைவி வேண்டும் என்ற அளவுக்கு அவர்களின் நோக்கம் விரிந்திருக்கவில்லை. இந்தப் பருவத்தில் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விடவும் குறைந்த அளவையே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் முதல் திருமணமே சான்றாக உள்ளது.
இல்லற வாழ்வுக்குக் கன்னியரை விட விதவைகள் தான் அதிகம் பொருத்தமானவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணி இருக்கலாமோ என்றால் அதுவும் இல்லை.
ஏனெனில் ஒரு இளைஞன் கன்னியரை மணப்பதே சிறந்தது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) என்ற இளைஞனிடம் நீ திருமணம் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அவர் ஆம்! என்றார். கன்னியா? விதவையா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர் விதவை தான் என்று பதிலளிக்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ ஒரு கன்னியை மணந்திருக்கக் கூடாதா? அவளுடன் நீ விளையாடவும் உன்னுடன் அவள் விளையாடவும்,அவளுடன் நீ மகிழ்ச்சியாக இருக்கவும், உண்ணுடன் அவள் மகிழ்ச்சியாக இருக்கவும் கன்னிப் பெண்ணே ஏற்றவள் என்று கூறினார்கள்.
ஆதாரம் :(புகாரி: 2097, 2309, 5247)
ஒரு இளைஞன் தன் காம உணர்வைத் தணித்துக் கொள்ள அவனுக்கு ஈடு கொடுத்து முழு அளவில் திருப்திப்படுத்த கன்னிப் பெண்ணே தகுதியானவள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும் இந்த அதிகபட்சத் தகுதியைப் பிறருக்கு சிபாரிசு செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காக அதை விரும்பவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய இருபத்தைந்தாவது வயது முதல் ஐம்பதாவது வயது வரை கதீஜா (40 வயது முதல் 65 வயது வரை) எனும் விதவையுடன் மாத்திரமே வாழ்ந்தார்கள். வேறு எவரையும் மணக்கவில்லை. இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள கால கட்டம் தான் ஆண்களின் காம உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். அதன் பின் படிப்படியாக அந்த உணர்வு குறையத் தொடங்கி விடும்.
நன்றாக அனுபவிக்க வேண்டிய அந்தப் பருவத்தில் ஒரேயொரு மனைவியுடன் விதவையுடன் – தம்மை விட பதினைந்து வயது மூத்த விதவையுடன் மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் செய்து கொண்ட திருமணங்களுக்கு காமஉணர்வு காரணமே இல்லை என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.
இன்னொரு கோணத்திலும் நாம் இதைச் சிந்திக்க வேண்டும். இல்லறத்தில் ஈடுபடுவதற்கு பெண்ணுக்கு முழு ஈடுபாடு இல்லாத போது ஆண் மட்டும் இல்லற உறவை விரும்பினால் அந்த உறவு முழுமையானதாக அமையாது.
கதீஜா (ரலி) அவர்கள் தமது நாற்பதாம் வயது முதல் அவர்கள் மரணமடைந்த அறுபத்தைந்தாம் வயது வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாற்பதாம் வயது முதலே உடலுறவில் உள்ள ஆர்வம் படிப்படியாகக் குறைந்து, ஐம்பது, ஐம்பத்தைந்தாம் வயதில் அதை அறவே விரும்பாத நிலையைப் பெண்கள் அடைந்து விடுவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதோ இல்லறத்தை பெரிதும் விரும்பக் கூடிய வயது. அவர்களின் மனைவியின் வயதோ அதை அவ்வளவு விரும்ப முடியாத வயது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் கதீஜா (ரலி) அவர்கள் இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் பெரும்பாலான பெண்கள் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரை இல்லற வாழ்வை விரும்ப மாட்டார்கள். கதீஜா அவர்களின் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரையிலான பத்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழுமையான இல்லறத்தில் ஈடுபட்டிருக்க முடியுமா? என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மிதமிஞ்சிய காமஉணர்வு இருந்தது உண்மையாக இருந்தால், தம் மனைவி இல்லற சுகம் தருவதற்கான தகுதியை இழந்த பின்னும் அவர்களுடன் மட்டுமே பெயரளவுக்கு எப்படி நபியவர்கள் வாழ்ந்திருக்க முடியும்? இல்லற சுகத்தை நாடக்கூடிய வயதில் அது கிடைக்காவிட்டால் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காதா? குறைந்தபட்சம் கதீஜாவுடன் வாழ்ந்த கடைசி பத்தாண்டுகளிலாவது இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதா? அப்படியெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எண்ணமே வரவில்லை. கதீஜா (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை மறுமணம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மனைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதியதில்லை. இந்த நிலையில் நபியவர்கள் மற்றொரு திருமணம் செய்திருந்தால் அவ்ர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட் எவருமே அதைக் குறை கூறி இருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கம், நேர்மை, நற்குணம், அதிசயிக்க வைக்கும் பேரழகு, இளமை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்த அன்றைய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெண் கொடுக்கவும் மறுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாய்ப்பு இருந்தும், நபியவர்கள் தமது ஐம்பதாம் வயது வரை – கதீஜா மரணிக்கும் வரை இன்னொரு திருமணமே செய்யவில்லை.
இன்னொரு கோனத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட காலத்தை விட அவ்வாறு அறிவிக்காத நாற்பது வயது வரையிலான வாழ்க்கை தான் பல திருமணங்கள் செய்வதற்கு வசதியானது.
தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளாத காலத்தில் அவர்களின் செயலை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் இறைத்தூதர் என்று தம்மைப் பிரகடனப்படுத்திய காலத்தில் அவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும்.
எனவே காம உணர்வுக்காக பல திருமணம் செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் நாற்பது வயது வரை பல மனைவியருடன் வாழ்வதை அவர்கள் தேர்வு செய்திருப்பார்கள். ஆனாலும் தமது ஐம்பது வயது வரை அறுபத்து வயதுப் பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதே அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க மறுப்பாக அமைந்துள்ளது.
இவ்வளவு வாய்ப்புக்கள் அமைந்திருந்தும் ஒரு வயோதிகப் பெண்ணுடன் மட்டுமே அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விட குறைந்த அளவு காம உணர்வுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் அளித்திருந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கிறது.
மறுமணம் செய்யாவிட்டாலும், தமக்குப் பூரண சுகம் தர முடியாமல் மனைவி அமைந்தால் குறைந்தபட்சம் அந்த மனைவியின் மேல் வெறுப்பாவது ஏற்பட்டிருக்கும். அவர்களின் தாம்பத்திய வாழ்வில் பூசலும், பிணக்குகளும் ஏற்பட்டிருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் அந்த வெறியைத் தனித்துக் கொள்ள முடியாத போது தாங்கிக் கொள்ள முடியாத ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வு நரக வாழ்வாகத் தோன்றியிருக்கும்.
ஆனால் அப்படி எதுவும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படவே இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் ஹிரா எனும் குகைக்குப் போய் பல நாட்கள் தனித்து இருப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். கரடு முரடான அந்த மலையில் ஏறி கதீஜா அவர்கள் நபிகள் நாயகத்துக்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு வருவார்கள். அவ்வாறு அந்தக் குகையில் தங்கி இருந்த போதுதான் தனது தூதராக அவர்களை இறைவன் நியமித்தான். இது இஸ்லாமிய வரலாறு.
காமஉணர்வு மேலோங்கிய ஒருவர் தனக்கென ஒரு மனைவி இருக்கும் போது பல நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகையில் போய் தனியாக தவம் இருப்பாரா? நாற்பதாம் வயதில் அவர்கள் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தது அவர்கள் காமஉணர்வில் மிஞ்சியவர்களாக இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.
உடலுறவுக்கும் அப்பாற்பட்ட உளப்பூர்வமான நெருக்கம் தான் அவர்களிடையே இருந்து வந்தது. ஹிரா மலைக் குகையில் தனித்து இருந்து சிந்தித்துக் கொண்டிருந்த காலங்களில், 55 வயதை அடைந்து விட்ட ஹதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லிலும், முள்ளிலும் கால் கடுக்க நடந்து போய்க் கொடுப்பார்கள்.
அவர்களுக்கு இருந்த வசதிக்கு தமது பணியாளர்கள் மூலமே அதைக் கொடுத்து விட்டு இருக்க முடியும். அவ்வாறு இருந்தும் தாமே எடுத்துச் சென்று நபிகள் நாயகம் அவர்களை உபசரிப்பார்கள் என்றால் அவர்களுக்கிடையே இருந்த நேசம், உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று கூற இயலுமா?
தமக்கு இறைவனிடமிருந்து இறைச் செய்தி வந்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, முஹம்மதுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அரபு உலகமே எள்ளி நகையாடியது. எனக்குப் பயமாக இருக்கிறது; என்னைப் போர்த்துங்கள் என்று நடுங்கினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் உங்களுக்கு ஒரு குறைவும் வராது. நீங்கள் அநாதைகளை ஆதரிக்கிறீர்கள், ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள். அடிமைகளை விடுதலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் நேராது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என ஆறுதல் கூறி அன்று வாழ்ந்த மக்களில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தையும் கதீஜா (ரலி) அவர்களே பெற்றார்கள்.
நபியவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால், அதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியாத கதீஜா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கவே முடியாது. உலகம் பைத்தியக்காரர் என்று பட்டம் சூட்டுவதற்கு முன் முதலில் கதீஜாவே அந்தப் பட்டத்தைச் சூட்டியிருப்பார்கள்.
காம வெறிக்கெல்லாம் அப்பாற்பட்ட நபியவர்களின் தவவாழ்வை கதீஜா அவர்கள் கண்கூடாகக் கண்டதால் தான் நபிகள் நாயகத்தை இறைத்தூதர் என்று முதலில் நம்பும் பெருமையை கதீஜா (ரலி) பெற்றார்கள்.
கதீஜா (ரலி) அவர்களுக்கும் அந்த நோக்கம் பிரதானமானதாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நபியவர்கள் தவம் செய்யச் சென்ற காலங்களில் அதைத் தடுத்திருப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்யாது அந்தத் தவவாழ்வுக்குப் பக்கபலமாகவே இருந்தார்கள்.
இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு இறைச் செய்தி வந்ததாகக் கூறிய போது, அநாதைகளுக்கு உதவுதல், ஏழைகளை அரவணைத்தல், அடிமைகளை விடுவித்தல் போன்ற அருங்குணங்களைக் கூறி ஆறுதல் படுத்துகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அமைந்திருந்த இந்த நற்குணங்களையே கதீஜா (ரலி) அவர்கள் காதலித்தார்கள். வெறும் கட்டுடலை அல்ல என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் தமக்கு உடல் சுகம் தர இயலாத கதீஜா (ரலி) அவர்கள் மரணித்ததற்காக இடிந்து போயிருக்க மாட்டார்கள். இனியாவது மகிழ்ச்சியில் திளைக்கலாமே என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் கதீஜா அவர்கள் மரணித்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எவரது இழப்புக்காகவும் கவலைப்பட்டதில்லை.
அவர்களின் கவலையை வர்ணிக்க வார்த்தை தேடிய சரித்திர ஆசிரியர்கள் கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த ஆண்டை ஆமுல் ஹுஸ்ன் – கவலை ஆண்டு – எனச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு நபியவர்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள். கதீஜா அவர்களை நினைவில் வைத்திருந்தது போல் வேறு எவரையும் அவர்கள் நினைவு கூரவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிலே கன்னியாக இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட கதீஜா (ரலி) அவர்களின் இடத்தை அடைய முடியவில்லை. நானே பொறாமைப்படும் அளவுக்கு எப்போது பார்த்தாலும் கதீஜா அவர்களை நபியவர்கள் நிணைவு கூர்வார்கள், புகழ்ந்துரைப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.
(புகாரி: 3816, 3817, 3818, 5229, 6004)
அவர்கள் காமஉணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்றால் கதீஜாவை விட நபியவர்கள் ஆயிஷாவை அதிகம் நேசித்திருக்க வேண்டும். ஆனால் ஆயிஷாவால் கூட அந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
தமது இல்லத்தில் ஆடு அறுக்கப்படுமானால் கதீஜாவின் தோழியருக்குக் கொடுத்தனுப்புங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று நான் கேட்ட போது கதீஜாவின் தோழியர்களை நானும் விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(புகாரி: 3816, 3817, 3818, 5229, 6004)
இந்த உலகத்தில் உள்ள பெண்களிலேயே மிகவும் சிறந்தவர்கள் இம்ரானுடைய மகள் மர்யமும், குவைலித் என்பவரின் மகள் கதீஜாவும் ஆவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அலி (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க ஆயிஷாவின் இல்லத்திற்கு வந்த போது அவர்களுக்கு மரியாதை செய்து தமது மேலாடையை விரித்து, அதில் அந்த மூதாட்டியை அமரச் செய்தார்கள். அந்த மூதாட்டி திரும்பிச் சென்ற பின் இதன் காரணத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்ட போது, கதீஜாவை அடிக்கடி இந்தப் பெண் சந்திக்க வருவார். அதுவே காரணம் என்றார்கள்.
நபியவர்கள், கதீஜாவைப் புகழ்ந்துரைத்த நபிமொழிகளை யெல்லாம் எழுதினால் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால் சுருக்கமாகத் தந்திருக்கிறோம்.
தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பது வயது வரை நாற்பது முதல் அறுபத்தி ஐந்து வயது கொண்ட கதீஜாவுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கத்தை உலகுக்குத் தெளிவாக அறிவிக்கின்றது.
ஐம்பது வயது வரை ஒருவருக்குக் காமவெறி இல்லாமல் அதற்கான அறிகுறி கூட இல்லாமல் இருந்து ஐம்பது வயதைக் கடந்த பின் காமவெறி திடீரென்று ஏற்பட்டு விட்டது என்று கூறினால் அறிவுடைய யாரும் அதை ஏற்பார்களா?