06) மண்ணறை வாழ்க்கை வளமாக …
எந்தெந்த காரணங்களால் மண்ணறையில் வேதனை கிடைக்கின்றது என்பதை ஹதீஸ்களின் துணையுடன் கண்டோம். அவற்றை விட்டும் முற்றாக விலகி இருப்பதுடன் நம் மண்ணறை வாழ்க்கையை வளமாக்க வேண்டிய முயற்சிகளை அறிந்து, அதில் ஈடுபட வேண்டும்.
மண்ணறை வேதனையிலிருந்து தப்பித்து இன்பமான வாழ்வை மண்ணறையில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ்வின் தூதர் கற்றுந்தந்துள்ளார்கள். அவற்றை இனி காண்போம்.
மண்ணறை வேதனைக்கு புறம் பேசுதல், திருடுதல் போன்ற பாவங்கள் காரணமாக இருப்பதை போன்று மண்ணறையில் இன்பம் பெறுவதற்கு நல்லறங்கள் காரணமாக அமைந்து விடுகின்றது.
இறப்புக்கு பிறகு மனைவி, மக்கள், சொந்தபந்தங்கள் என அனைவரும் நமக்காக கவலை கொண்டாலும் கண்ணீர் வடித்தாலும் அவையெல்லாம் மண்ணறையில் எந்த நன்மையையும் தராது. சொந்தம் பந்தம் எல்லாம் இவ்வுலகத்துடன் முடிந்து விடக்கூடியதாகும். நாம் செய்த நல்லறங்கள் மட்டுமே நம் மரணத்திற்கு பிறகும் நமக்கு பயனளிப்பவையாகும்.
இதை நபி ஸல் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 6514)
எனவே நல்லறங்களே நம் மரணத்திற்கு பிறகு மண்ணறையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிப்பவையாகும் என்பதை உணர்ந்து அதிகமான நல்லறங்களில் ஈடுபட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கற்றுத்தந்தவைகளும். அனுமதித்தவைகளும் மட்டுமே நல்லறங்களாகும். அவைகள் மட்டுமே நமக்கு மண்ணறையில் பயனும் அளிக்கும். மாற்றாக நன்மை என்ற பெயரில் மவ்லித் மீலாது, தஸ்பீ?ஹ் தொழுகை, போன்ற நபிகள் நாயகம் அங்கீகரிக்காததை செய்தால் அவை ஒருபோதும் நமக்கு பயன்தராது.
‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால்’ அது நிராகரிக்கப்படும்’ என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி. நூல் (முஸ்லிம்: 3243)
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்’ எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 2697), (முஸ்லிம்: 32)
நாம் செய்யும் நல்லறங்கள் மண்ணறையில் இன்பத்தை தருவதற்கு பதிலாக துன்பத்தை தரும்படி அமைந்து விடக்கூடாது. நபிவழி அனுமதிக்காததை நன்மையாக கருதி செய்வோம் எனில் அது கண்டிப்பாக துன்பத்தை வரவழைக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக எல்லா நல்லறங்களும் மண்ணறை வாழ்வை வளமாக்கும் என்றாலும் குறிப்பிட்ட மூன்று நல்லறங்களை நபிகள் நாயகம் அவர்கள் விசேஷமாக கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன;
1. நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 3084)
மரம் நடுதல், கிணறு வெட்டுதல், கல்வி நிறுவனம் அமைத்தல் போன்ற மரணத்திற்கு பிறகும் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது நல்லறத்தை செய்தால் அது நம் மண்ணறை வாழ்விலும் பயனளிப்பவையாக அமையும் என்று இந்நபிமொழி தெரிவிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஸ்லிமான மனிதர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு வன விலங்கோ அல்லது ஒரு பறவையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்டால், அதனால் அவருக்கு ஒரு (தர்மம் செய்ததற்கான) நன்மை கிடைக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: (முஸ்லிம்: 3161)
பள்ளிவாசல்கள் கட்டுவது. அனாதைகளை பராமரிப்பது அல்லது அனாதை இல்லங்களுக்கு உதவி செய்வது. முதியோர், ஆதரவற்றவர் களுக்கு உதவிகள் செய்தல் ஆதரித்தல் போன்ற செயல்கள் அனைத்தும் நிலையான நல்லறங்களே.
இதன் பலன்கள் நாம் இறந்த பின்னும் நமக்கு வந்துக் கொண்டே இருக்கும். பண்டைய காலங்களில் நம் சமுதாய முன்னோர்கள் சத்திரங்கள் கட்டுதல், கிணறுகள் வெட்டி விடுதல் போன்ற நன்மையான செயல்களை செய்தனர். இன்றும் முஸ்லிம்கள் மக்களுக்காக கட்டிக்கொடுத்த சத்திரங்கள் பல ஊர்களில் பயன்தரும் வகையில் இருக்கின்றன. ஆனால் இன்றைய காலத்தில் அப்படியெல்லாம் யாரும் செய்வதில்லை இருப்பினும் நாம் அதில் அக்கறை கொள்ள வேண்டும்.
நமக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தைகளை விட்டு நாம் மரணித்தால் அவர்கள் மூலம் மண்ணறையில் நாம் நன்மைகள் அடையாலாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர் : அபஹூரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 3084)
படைத்த இறைவன் மனிதர்களுக்கு வழங்கும் செல்வங்களில் பிள்ளைச்செல்வமும் அழகான ஒன்றாகும். தன் பேர்சொல்ல ஓர் பிள்ளை வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள், மார்க்கம் கூறும் நற்பண்புகள் நிறைந்த பிள்ளையாக வளர்ப்பார்களேயானால் அவ்வாரிசு அவர்களின் மரணத்திற்கு பின்னும் அவர்களுக்கு நன்மைகளைப் பெற்று தருபவர்களாக இருப்பார்கள்.
ஒரு குழந்தை தானாக நல்ல குழந்தையாக வளர்ந்து விடாது. பெற்றோருக்காக துஆ செய்யும் நல்ல குழந்தையாக வளர்வது அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது. நாம் தான் மார்க்க விழுமியங்களை போதித்து நல்லவர்களாக வளர்க்க வேண்டும்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண்குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 1359)
எனவே நம் பிள்ளைகளை நமக்காக துஆ செய்யும் நல்லவர்களாக
வளர்த்தால் அதன் மூலம் நம் மண்ணறை வாழ்வை அல்லாஹ் செம்மைப்படுத்துவான்.
என்னதான் நன்மைகள் செய்திருந்தாலும் சரியான இறைநம்பிக்கை இல்லையெனில் அவை அல்லாஹ்விடம் எந்த மதிப்பையும் பெற்றுத்தராது ஆகவே சரியான இறைநம்பிக்கை கொண்டவராக நாம் மரணித்தால் மட்டுமே நமது நல்லறங்கள் அல்லாஹ்விடம் பயன்தரும்.
அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத சரியான இறைநம்பிக்கை உடையவரே மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுவார் என்று நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கப்றில் ஒரு இறை நம்பிக்கையாளர் (முஃமின்) எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு வானவர்களைக்) கொண்டு வரப்பட்டு கேள்வி கேட்கப்படும்; பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறை நம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என சாட்சியம் கூறுவார். இதையே அல்லாஹ், எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்” (அல்குர்ஆன் 4:27) எனக் குறிப்பிடுகிறான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: (புகாரி: 1369)
இணைவைப்பு செய்தவராக இருப்பின் மலையளவு நன்மைகளாயினும் அது அல்லாஹ்விடம் தூசியின் மதிப்பை கூட பெறாது என்பதை மறந்து விடக்கூடாது.
அல்லாஹ்வின் பாதையில் காவல் காப்பதும், அறப்போர் புரிவதும் மண்ணறை வேதனையிலிருந்து காக்க கூடிய நற்செயயேயாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பகல் ஓர் இரவு (நாட்டின்) எல்லை யைக் காக்கும் பணியில் ஈடுபடுவதானது, ஒரு மாதம் (பகலெல்லாம்) நோன்பு நோற்று (இரவெல்லாம்) நின்று வழிபடுவதைவிடச் சிறந்ததாகும். அவ்வாறு காவல் காப்ப)வர் இறந்துவிட்டாலும் அவர் செய்துவந்த நற்செயல் (களுக்குரிய நன்மை)கள் (அவரது கணக்கில்) அவருக்குப் போய்க்கொண்டிருக்கும். (இறைவனிடம்) அவர் உணவளிக்கவும்படுகிறார். மேலும், (சவக் குழியில்) வேதனை செய்பவரிடமிருந்து பாதுகாப்பும் பெறுவார்.
அறிவிப்பவர். சல்மான் அல்ஃபாரிசீ (ரலி), நூல்: (முஸ்லிம்: 3876)
இதனடிப்படையில் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த உயிர் தியாகிகள் மண்ணறையில் இன்பமான வாழ்வை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு வேதனையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்பதை அறியலாம். இக்கருத்தை பல ஹதீஸ்களும் தெளிவுபட வலியுறுத்துகின்றது. நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் “நபிமே அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர், தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்பெறுகின்றனர்” (அல்குர்ஆன்: 3:169) ➚ எனும் இந்த இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில் ) விடப்படுவார்கள்.
அறிவிப்பவர் : மஸ்ரூக் (ரஹ்), நூல்: (முஸ்லிம்: 3834)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷஹீதிற்கு (உயிர் தியாகி) ஆறு சிறப்புகள் வழங்கப்படுகிறது. அவருடைய இரத்தத்தில் முதல் சொட்டு (பூமியில் விழும் போதே) அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் அவருக்குரிய இருப்பிடம் அவருக்குக் காட்டப்படுகிறது. ஹூருல் ஈன்களை அவருக்கு மணமுடித்து வைக்கப்படும். மாபெரும் திடுக்கத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுகிறார். மண்ணறை வேதனையிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். ஈமான் என்ற ஆடை அவருக்கு அணியப்படுகிறது.
அறிவிப்பவர் : கைஸூல் ஜூதாமி (ரலி), நூல் (அஹ்மத்: 17115)
உயிர்தியாகிகள் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்கள் எனவும், அவர்களது உயிர்கள் பச்சை நிறத்து பறவைகளின் செலுத்தப்பட்டு அதன் வடிவில் சந்தோஷமாக சுற்றித்திரிவார்கள் எனவும் இந்தபிமொழிகள் தெரிவிக்கின்றன.
வயிற்று பாதிப்பால் இறந்தவர்களும் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. எனவே நமக்கு ஏற்படும் இதர துன்பம், மற்றும் நோய்களின் போது பொறுமை காத்தால் மண்ணறையில் இறைவனின் அருளை பெற உதவியாக இருக்கலாம்.
சுலைமான் பின் சுரத் மற்றும் ஹாலித் பின் உர்ஃபுதா ஆகியோருடன் நான் அமர்ந்திருந்தேன். வயிற்று நோயால் இறந்து போன ஒருவருரை (புதைப்பதற்காக) பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவ்விருவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது வயிற்று நோயால் இறந்து விடுபவர் மண்ணறையில் வேதனை செய்யப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இல்லையா? என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். அதற்கு ஆம் என்று இன்னொருவர் பதிலளித்தார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்), நூல்: (அஹ்மத்: 17591)
எல்லாம் வல்ல இறைவன் நம்மை மண்ணறை வேதனையிலிருந்து காப்பானாக