06) பிறர்நலம் நாடுவோரும், கெடுப்போரும்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

சமுதாயத்தில் பிறர் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் மனமுவந்து உழைக்கிறார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களை, இழப்புகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள். பொதுப் பணிகளில் தூய சிந்தனையோடு தியாக உணர்வோடு அயராது ஈடுபடும் இத்தகைய மக்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரிவான்; அளவற்ற நன்மைகளை அள்ளி வழங்குவான். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி),” (உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யும்படி பிறரிடம்) பரிந்துரை(யாவது) செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்” என்று கூறுவார்கள். பிறகு ‘அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான்” என்பார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி), நூல்: (புகாரி: 1432)

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 1442)

சமூகத்தில் தாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும்; அடுத்தவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று சுய நலத்தோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் உலக ஆதாயங்களுக்காக அடுத்தவர்களுக்கு அநீதி இழைத்து, அத்துமீறி உரிமைகளை, உடமைகளைப் பறித்துக் கொள்கிறார்கள். இவர்களை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது.

யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவரை (அவரது நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப் படுத்துவான். யார் (மக்களைச்) சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : (புகாரி: 7152)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை ) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல் : (புகாரி: 1433)

எந்தவொரு உறுத்தலும் இன்றி பிறரிடம் வரம்புமீறும் நபர்கள் இறைவனின் அன்பையும் கருணையும் இழந்தவர்கள். அவனது எச்சரிக்கைக்கும் தண்டனைக்கும் உரித்தானவர்கள். இதை மனதில் கொண்டு எப்போதும் பிறர்நலம் நாடுவேராக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் நாம் பிறர்நலம் கெடுப்போராக இருந்துவிடக் கூடாது. இல்லையெனில் நாம் செய்கிற நன்மைகளையும் கூட இழக்கும் நிலை மறுமையில் ஏற்பட்டு விடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது நேரத்தன்று சொல்லியிருப்பார். ஒருவரத்த பொருளை (முறை கேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளில் குந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்: இன்னும் சில அவருக்குக் தோடுக்கப்படும். அவருடைய நன்மைகளிருந்து எடுத்துக் கொடுப் பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப் பட்ட மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)” என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5037)

பிறருக்கு நலம் தரும் காரியங்களை செய்யுங்கள்; நலத்தை கெடுக்கும் காரியங்களை செய்யாதீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது. இது தொடர்பாக இஸ்லாம் பூசி முழுகுவது போன்று மேலோட்டமாக பெயரளவிற்கு பேசவில்லை. தமது கொள்கை யின் அடிப்படையாக, அடிநாதமாக வைத்து உரக்கச் சொல்கிறது.

நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும்

தன்னளவில் நல்ல காரியங்களை செய்து கொண்டு ஒதுங்கிக் கொள்ளாமல் அதை அடுத்த மக்களுக்குச் எடுத்துச் சொல்ல வேண்டும் அதுபோல தீமையான காரியங்களை விட்டும் தாம் விலகி இருப்பதோடு மக்களுக்கு அது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும். இந்த அழைப்புப் பணியின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றி குர்ஆனிலும் நபிமொழியிலும் அதிகம் கூறப்பட்டுள்ளது.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவு கிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன்: 3:110)

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 3:104)

சமூகத்தில் நன்மை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியை முஸ்லிம்கள் செய்ய வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. இத்தகைய இனிய மார்க்கமான இஸ்லாம், பொதுமக்களை அழித்தொழிக்கின்ற தீவிரவாதத்தை கடுகளவும் ஆதரிக்குமா? என்று நீங்களே யோசித்து பாருங்கள்.

இறைத்தூதர்கள் செய்த பணி

ஏக இறைவனாகிய அல்லாஹ் மனித சமூகத்தை வழிநடத்த ஆதம் நபி முதல் முஹம்மது நபி வரை ஏராளமான நபிமார்களை அனுப்பி இருக்கிறான். அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற இஸ்லாமிய மார்க்கத்தையே அவர்கள் மக்களுக்கு போதித்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி எல்லா விசயத்திலும் மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த அந்த நபிமார்கள். அன்றைய காலத்தில் இருந்த சமூகப் பிரச்சனைகளை, தீமைகளைத் துடைத்தெறியவும் களம் இறங்கினார்கள்.

(மூஸா மற்றும் ஹாரூன் ஆகிய நீங்கள்) இருவரும் அவனிடம் (ஃபிர்அவ்னிடம்) சென்று “நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறுங்கள்!

(அல்குர்ஆன்: 20:48)

மூஸா நபி மற்றும் ஹாரூன் நபி ஆகிய இரு நபிமார்களின் பணியை இந்த வசனம் பேசுகிறது. அவர்களின் காலத்தில் ஃபிர் அவ்ன் எனும் கொடிய மன்னன் பனீ இஸ்ராயீல் மக்களை அடக்குமுறை செய்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை எதிர்த்து நின்று. அந்த மக்களை அடிமைத் தளையிலிருந்து இருவரும் மீட்டெடுத்தார்கள்.

இப்படி, அளவு நிறுவையில் செய்யப்படும் மோசடிக்கு எதிராக ஷுஐப் நபி, ஓரினச் சேர்க்கைக்கு எதிராக லூத் நபி. மூடநம்பிக்கைக்கு எதிராக இப்ராஹீம் நபி. அராஜக ஆட்சிக்கு எதிராக தாவூத் நபி என்று நபிமார்கள் மார்க்கப் பணியில் மட்டுமல்ல பொதுப்பணியிலும் பங்கெடுத்தார்கள். இவற்றைச் சொல்வதற்கு காரணம், அவர்களைப் போன்று நாமும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.