06) நோக்கம்
ஒருவர் பல திருமணங்களை செய்துள்ளார் என்பதன் மூலம்
மட்டுமே அவரை பெண்கள் மீது ஆசை கொண்ட சித்தரிப்பது முற்றிலும் தவறாகும்.
எந்த பின்புலத்தில் எத்தகைய புறச்சூழ்நிலையில் அந்த திருமணங்களை செய்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகத் தெரிவதைக் கொண்டு தீர்ப்பளிக்க கூடாது.
காய்ச்சல் உள்ளவனின் நாவு உணவின் உண்மை சுவையறியாது. உண்ணும் உணவையெல்லாம் கசக்கும் என்றே தீர்ப்பளிப்பான்.
காமாலை என்பான். கண்ணுடையவன் காண்பதை எல்லாம் மஞ்சள் இது போல ஒருவரின் புறச்சூழ்நிலை மற்றும் நோக்கமறியாது கூறப்படும் கூற்றிலும் தீர்ப்பிலும் குறைகள் நிச்சயம் இருக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது உண்மை தான். இந்தப் பொய்யர்கள் கூறுவதை போல பெண்கள் மீதான ஆசை தான் காரணம் என்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.
அதற்கு இரண்டு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகத்தின் முதல் மனைவி கதீஜா (ரலி) ஆவார்.
நபிகள் நாயகம் தமது 25ம் வயதில் தம்மை விட 15 வயது மூத்த 40 வயது கதீஜா (ரலி) அவர்களை மணந்தார்கள்.
நபிகள் நாயகம் அவர்களுக்கு 50 வயதானபோது கதீஜா (ரலி) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 65.
தனது 50 வயது வரை கதீஜா (ரலி) அவர்களுடன் மட்டுமே இல்லற வாழ்வைக் கழித்தார்கள். கதீஜா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் வரை வேறு யாரையும் நபியவர்கள் திருமணம் செய்யவில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெண்கள் மீது ஆசை கொண்டவர் என்பது போன்று தவறாகச் சித்தரிக்க முயலும் குறைமதியாளர்கள் கண்டுணர வேண்டிய முதல் அடிப்படையான விஷயமிது!
தமது ஐம்பதாவது வயது வரை ஒரேயொரு மனைவியுடன் தான் நபிகள் நாயகம் வாழ்ந்துள்ளார்கள்.
அதுவும் தன்னை விட 15 வயது மூத்த பெண்மணியுடன் நபிகள் நாயகம், கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் புரிகின்ற போது கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே திருமணமாகி தனது கணவனை இழந்த விதவைப் பெண்மணியாவார்.
பெண்கள் மீது ஆசை கொண்ட ஒரு நபர் தனது இளமைப்பருவ காலகட்டத்தில் வயது முதிர்ந்த விதவைப் பெண்ணைத்தான் திருமணத்திற்குத் தேர்வு செய்வாரா?
பெண்கள் மீது ஆசை கொண்ட நபராக இருந்தால் தன்னுடைய 25ம் வயதிலிருந்து தனக்கு முதுமை எட்டிப்பார்க்கும் 50ம் வயது வரை வேறு யாரையும் திருமணம் செய்யாமல் அந்த ஒரு பெண்ணுடனே வாழ்வைக் கழிப்பாரா?
சுமார் 25 வருடம் கதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்துள்ளார்கள்.
அதுவும் ஏனோதானோவென்று அல்ல. மிகுந்த சந்தோஷத்துடன் கதீஜா (ரலி) அவர்களுடன் நபிகள் நாயகம் இல்லற வாழ்க்கை நடத்தினார்கள்.
இறைவனின் புறத்திலிருந்து முதல் கட்டமாக தூதுச் செய்தி அறிவிக்கப்பட்ட துவக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது அச்சம் கொள்ளலானார்கள். தமது அச்சத்தை தம் நேசத்திற்குரிய மனைவி கதீஜா (ரலி) அவர்களிடமே தெரிவித்து ஆறுதலடைந்தார்கள்.
இறைச்செய்தி அருளப்படும் முன்பு ஹிரா எனும் குகையில் தனிமையில் நபியவர்கள் தங்கிய போது பல கிலோ மீட்டர் கடும் சிரமத்துடன் பயணம் மேற்கொண்டு மலையேறி நபிகள் நாயகத்திற்கு உணவளிப்பவராகவும் இதே கதீஜா (ரலி) அவர்களே திகழ்ந்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் இறப்பெய்திப் பல வருடங்கள் உருண்டோடிய பிறகும் கூட அவ்வப்போது கதீஜா (ரலி) அவர்களை நேசத்துடன் நினைவுகூர்பவர்களாக நபிகள் நாயகம் இருந்துள்ளார்கள்.
எவ்வளவு இனிதாய் நபிகள் நாயகம் கதீஜா (ரலி) இருவருக்குமான இல்லற வாழ்வு அமையப்பெற்றுள்ளது.
கதீஜா (ரலி) மரணிக்கும் போது அவர்களின் வயது 65. நபிகள் நாயகத்தின் வயது 50.
ஒரு மனிதனின் இளமைப் பருவ காலமான 20 முதல் 40-45 வயது வரையில் தான் பெண் மீதான அதிக ஈர்ப்புடன் இருக்கும் காலமாகும். அந்த காலகட்டத்தில் நபிகள் நாயகம் ஒரு மனைவியுடன் தான் வாழ்ந்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தவை யாவும் தமது ஐம்பதாவது வயதிலும் அதன் பிறகுமான கால கட்டத்திலாகும்.
பெண்களின் மீதான ஆசையால் தான் நபிகள் நாயகம் பல திருமணங்களை செய்து கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் தமது ஐம்பதாம் வயது வரை அதற்காக ஒருவர் பொறுமை காக்க வேண்டுமா?
கதீஜா (ரலி) அவர்கள் இருக்கும் போதே, தமது இளைமைப்பருவ கால கட்டத்திலேயே பல திருமணங்களைச் செய்திருக்கலாமே? அதற்கு என்ன தடை இருந்தது?
கதீஜா (ரலி) அவர்களோ விதவைப் பெண்.
வயது மூத்த பெண்மணி.
அவர்களின் சமூகத்தில் பல திருமணம் சாதாரண ஒன்று என்பதால் சமூகத் தடையும் எதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ இளைஞராகவும் சமூக அந்தஸ்து உள்ளவராகவும் இருந்தார்கள்.
போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுப்பதற்குப் பலர் தயாராக இருந்தனர்.
இப்படி தமது இளைமைப்பருவ காலத்திலேயே பல திருமணங்களைச் செய்து கொள்வதற்கான எல்லா காரணிகளும் இருந்தும் அந்த வழிமுறையை நாடாமல் தமது ஐம்பதாம் வயதிற்குப் பிறகே பல திருமணங்களை நாடியுள்ளார்கள் என்றால் நிச்சயம் அதற்கு பெண்கள் மீதான ஆசை என்ற காரணத்தை கூறவே இயலாது.
இத்தகைய தன்மை கொண்ட ஒருவரின் தன்மையை நடுநிலையுடன் கவனித்தாலே அவர்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு எவ்வளவு அபாண்டமானது என்பதை புரியலாம்.
முதல் மனைவி கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பிறகு நபிகள் நாயகம் பல திருமணங்களைப் புரிந்தார்கள்.
அந்தத் திருமணத்திற்கும் இவர்கள் கூறும் பெண்கள் மீதான ஆசை என்ற குற்றச்சாட்டு பொருந்தாது.
ஏனெனில் தமது ஐம்பது வயதுக்குப் பிறகு, அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களில் ஆயிஷா (ரலி) என்ற மனைவியாரைத் தவிர மற்ற அனைவரும் விதவை அல்லது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களாவர்.
அவர்கள் யார்? யார்?
அவர்களை நபிகள் நாயகம் எப்போது திருமணம் செய்து கொண்டார்கள் என்ற விபரத்தைக் காண்போம்.