06) நியாயத் தீர்ப்பும் மனிதநேயமும்
இன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக் கொண்டிருக்கிறது. நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப் பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்த விடாமல் தடுத்து விடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.
நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்களும் யூதன், கிறிஸ்தவன், முஸ்லிம் என்று பார்க்காமல் மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சிறந்த சான்றாக உள்ளது.
யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் “மனிதர்கள்அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக! (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்” என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, “நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்” என்று கேட்டார்.
அந்த யூதர் தபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அபுல்காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?என்று கேட்டார். தபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ”நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்?” என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந் தார்கள். பிறகு “அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் (புகாரி: 3414)
யூதர் எடுத்து வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு அந்த அன்சாரித் தோழரிடம், ஏன் அடித்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் பின்பு அவரைக் கண்டித்ததும் மாற்றார்களிடத்தில் பெருமானார் காட்டிய மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது.