06) தூதரின் அவசியம்
அல்லாஹ்வுடைய வேதத்தை மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் வேலை. வேதம் தவிர வேறு வஹீ என்பது கிடையாது என்றெல்லாம் வாதிடுவது திருமறைக்குர்ஆனுக்கே எதிரானது என்பதை நாம் அறிந்து வருகிறோம்.
வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அனுப்பியிருக்கலாம். மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும்.
தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை முதலில் நம்ப வேண்டும். தங்களைப் போல் உண்ணுகின்ற, பருகுகின்ற ஒரு மனிதர் எப்படி கடவுளின் தூதராக இருக்க முடியும் என்ற சந்தேகம் காரணமாக தூதர்களை முதலில் மறுப்பார்கள். அவர் கடவுளின் தூதர் இல்லை என்றால் அவர் கொண்டு வந்தது கடவுளின் வேதம் அல்ல எனவும் மறுப்பார்கள்.
இதை ஏதோ அனுமானத்தின் அடிப்படையில் கூறுவதாக எண்ண வேண்டாம். இந்தக் காரணங்களைக் கூறி இறைத் தூதர்கள் மறுக்கப்பட்டதற்கு திருக்குர்ஆன் சாட்சி கூறுகிறது.
7. “இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.
தம்மைப் போன்ற மனிதர்களை இறைத் தூதர்கள் என்று நம்புவது மனிதர்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
வானிலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு புத்தகத்தை இறைவன் போட்டால் அது இறைவனின் வேதம் தான் என்று நம்புவதில் எந்தத் தயக்கமும் மக்களுக்கு இருக்காது. இவ்வாறு செய்வதில் ஏராளமான நன்மைகளும் ஏற்படும்.
அடி, உதை, உயிர்ப்பலி ஏதுமின்றி மக்கள் அனைவரும் எளிதாக இதை ஏற்றுக் கொள்வார்கள். இறைத்தூதர் வழியாக வேதம் கிடைக்கும் போது ஏற்படும் நம்பிக்கையை விட அதிகமான நம்பிக்கை இதனால் ஏற்படுவதால் வேதத்தில் உள்ளதை அப்படியே பின்பற்றுவார்கள்.
ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்த்து வேதங்களைப் போடுவதால் கருத்து வேறுபாடுகள் குறையும். வேதம் மட்டும் வழிகாட்டி விடும் என்றால் அல்லாஹ் இதைத் தான் செய்திருப்பான். வேண்டாத வேலையை அல்லாஹ் ஒரு போதும் செய்ய மாட்டான்.
நமது மூக்கை நாம் தொடுவதாக இருந்தால் கூட நேரடியாகத் தான் நாம் தொடுவோமே தவிர சுற்றி வளைத்துத் தொட மாட்டோம். அவ்வாறு யாரேனும் தொட முயன்றால் அவனுக்கு என்னவோ நேர்ந்து விட்டது எனக் கருதுவோம்.
நாமே இவ்வளவு தெளிவாக இருக்கும் போது எல்லாம் வல்ல இறைவன் வேண்டாத வேலையில் இறங்க மாட்டான்.
பேசாமல் வானிலிருந்து சில பிரதிகளை போட்டு எளிதாக வழி காட்டியிருப்பான்.
ஏன் அவ்வாறு செய்யாமல் ஒரு மனிதரைத் தனது தூதராக அனுப்பி மக்கள் நம்புவதற்குத் தயங்கும் நிலையை ஏற்படுத்தி அடி உதைகளுக்கு அவரை ஆளாக்க வேண்டும்? வேதத்தைக் கொண்டு வந்து தருவதைத் தவிர வேறொரு முக்கியமான பணியும் அவருக்கு இருந்தால் தவிர தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கவே மாட்டான்.
குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் அந்த முக்கியமான பணி என்ன என்பதைக் கூறுவார்களா?
குர்ஆனை வானிலிருந்து நேரடியாக மக்களுக்குப் போடாவிட்டால் மக்கள் எவ்வாறு தூதர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அப்படி அனுப்பியிருக்கலாம்.
இறைவனின் தூதர் என்று அனுப்பப்படுபவர் தங்களைப் போல் சாப்பிடக் கூடியவராகவும், பருகக்கூடியவராகவும் இல்லாத – ஏனைய பலவீனங்கள் இல்லாத – வானவர்கள் அனுப்பப்பட்டால் ஏற்பதற்கு தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது.
ஒரு வானவர் இறைத்தூதராக அனுப்பப்படும் போது அவர் எதையும் உண்ணாமல் பருகாமல் தங்களுடன் வாழும் போது அவரை இறைத் தூதர் என்று எளிதில் நம்பலாம். அவர் கொண்டு வந்தது இறை வேதம் தான் என்பதையும் நம்பலாம். இது தான் மக்களின் விருப்பமாக இருந்தது என்பதற்கு மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலேயே சான்று உள்ளது. அந்தக் கோரிக்கைக்கு அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கிறான்.
9. வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.
வானவரையே தூதராக அனுப்புமாறு இவர்கள் கேட்கின்றனர். வானவரை அனுப்புவதாக நாம் முடிவு செய்தாலும் அந்த வானவரை மனிதத் தன்மை கொண்டவராக மாற்றித் தான் அனுப்புவோம். மனிதத் தன்மையுடன் வரும் அவர் உண்பார் பருகுவார். ஏற்கனவே அவர்கள் எழுப்பிய அதே கேள்விகளை மீண்டும் எழுப்புவார்கள் என்று அல்லாஹ் விடையளிக்கிறான்.
“மலக்கை தூதராக அனுப்புவதாக இருந்தால் கூட அவரை மனிதராக மாற்றித் தான் அனுப்புவேன்” என்று அல்லாஹ் ஏன் கூறுகிறான் என்று சிந்திக்க வேண்டும். வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டும் தான் வேலை என்றால் மலக்கு வந்து கொடுத்தால் என்ன? மனிதர் வந்து கொடுத்தால் என்ன? மனிதர்களுக்கு மனிதர் தான் செய்முறை விளக்கம் செய்து காட்ட முடியும். நடைமுறைப்படுத்திக் காட்ட முடியும் என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் இருக்க முடியாது.
வேதத்தைக் கொண்டு வரும் தூதர்கள் வேதத்தின் போதனைகளுக்கு விளக்கம் கூறி செயல் முறை விளக்கமும் தர வேண்டியிருக்கின்ற ஒரே காரணத்தினால் தான்.
வானிலிருந்து வேதப் புத்தகத்தைப் போடாமல்…
மலக்குகளைத் தூதர்களாக அனுப்பாமல்…
மனிதர்களையே அனுப்புகிறான்.
இதிலிருந்து வேதம் மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறி வாழ்ந்து காட்டும் வேலையும் தூதர்களுடையது என்பதை விளங்கலாம்.
குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிப்போர், அல்லாஹ் ஒரு மனிதரைத் தூதர் என்று அனுப்பி வேண்டாத வேலையைச் செய்து விட்டான் என்று குற்றம் சுமத்துகிறார்கள் என்பதே அர்த்தமாகும்.
தூதரை அனுப்புவதால் பத்து பைசாவுக்குக் கூட பலனில்லாமல் இருந்தும் தேவையில்லாமல் அல்லாஹ் தூதரை அனுப்பினான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைக்கின்றார்கள் என்பது தான் இந்த வாதத்துக்குப் பொருளாக இருக்க முடியும்.
* அவர் பேசுவதெல்லாம் வஹீ என்று அல்லாஹ் கூறுவதாலும்,
* மூன்று வகையான வஹீ நபி (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதாலும்
* வேதத்துடன் ஹிக்மத்தையும் இறக்கி அருளியதாக அல்லாஹ் கூறுவதாலும்
* வேதத்தை ஓதிக் காட்டுவதுடன் அதைக் கற்றுக் கொடுக்கும் வேலையும் நபி (ஸல்) அவர்களுக்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதாலும்
* வேதத்தை ஓதிக் காட்டுவதுடன் அதைக் கற்றுக் கொடுக்கும் வேலையும் நபி (ஸல்) அவர்களுக்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதாலும்
* வேதத்துடன் சட்டம் வழங்கும் அதிகாரமும் வழங்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதாலும்
குர்ஆனை விளங்கிட நபிவழி அவசியம் என்பதைக் கடந்த இதழ்களில் விளக்கியுள்ளோம்.
மனிதனுக்கு மனிதனைத் தான் தூதராக அனுப்புவேன் என்று அல்லாஹ் பிரகடனம் செய்வது இதை மேலும் வலுப்படுத்துகின்றது. எனவே குர்ஆன் மட்டும் போதாது. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வளவு தானா ஆதாரங்கள்? என்று நினைக்க வேண்டாம். இன்னும் உள்ளன.