06) உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

06) உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்

முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட ‘இஸ்ராயில்’ என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர்தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வானவர் என்று பரவலாக நம்புகின்றனர்.

ஆனால் ‘இஸ்ராயீல்’ என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை. இதற்குச் சான்றும் இல்லை. ஒரே ஒரு வானவர் தான் அத்தனை பேருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்த சான்றும் இல்லை.

திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உயிரைக் கைப்பற்றுவதற்கு வானவர்கள் இருப்பதாகப் பின்வரும் வசனம் கூறுகிறது.

 

 قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ

 

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 32:11)

உயிர்களைக் கைப்பற்ற வானவர்கள் வருவார்கள் என்று பன்மையாகத்தான் திருக்குர் ஆன் கூறுகிறது. இதிலிருந்து உயிர்களைக் கைப்பற்றுவதற்கு ஒருவர் இருக்க முடியாது என்று தெளிவாகிறது.

 

اِنَّ الَّذِيْنَ تَوَفّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ‌ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِىْ الْاَرْضِ‌ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا‌ؕ فَاُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَسَآءَتْ مَصِيْرًا ۙ‏

 

தமக்குத்தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறு வார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?” என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடமாகும்.

(அல்குர்ஆன்: 4:97)

 

 الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ‌ فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَـعْمَلُ مِنْ سُوْۤءٍؕ بَلٰٓى اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

 

தமக்குத்தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, “நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை” என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்த வன். “நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள்” (என்று கூறப்படும்) பெருமை யடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன்: 16:28)

فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ‏

அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும்போது எப்படி இருக்கும்?

(அல்குர்ஆன்: 47:27)

நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்கனைக் கைப்பற்றுவார்கள் என்று வானவர்கள் குறித்து பின்வரும் வசனங்களிலும் காணலாம்.

 

 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏

 

“அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்ககளைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது கேட்பார் கள். “அவர்கள் எங்களைவிட்டும் மறைந்து விட்டனர்” என அவர்கள் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 7:37)

 

 وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً  ؕ حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ‏

 

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்து பவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்பு கிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 6:61)

உயிர்களைக் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வசனங்கள் பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வான்வரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.

ஒரு வானவர் உலகத்திலுள்ள அத்தனை பேருடைய உயிர்களையும் கைப்பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.