06) இறைவனுக்கு உருவம் கற்பித்தல்
கடவுள் ஒரேயொருவர் தான் என நம்புவது எப்படி கடவுள் நம்பிக்கையின் அடிப்படையோ அதே போல, அந்த ஓரே கடவுள் அனைத்து வகையான பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவர் எனவும் நம்ப வேண்டும்.
கடவுள் மனிதனையெல்லாம் படைத்தார் என நம்புகிற நிலை மாறி, கடவுள்களை (?) மனிதன் உருவாக்கும் நிலையை நாம் இன்று காண்பதால்,கடவுளின் இலக்கணத்தையே மனிதன் சிறுமைப்படுத்த துவங்கி விட்டான்.
தாயை கடவுளாக கருதுகிறான். தான் நேசிக்கும் சினிமா பிரபலத்தை கடவுள் என்கிறான்.. தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சித் தலைவரை கடவுளே என அழைக்கிறான்.
கடவுள் என்றால் அனைத்து வகையிலும், அனைத்தை விடவும் மேன்மையான ஒருவராக இருக்க வேண்டுமே என்கிற அடிப்படை புரிதல் மனிதனுக்கு இருக்குமானால், அவனைப் போல சரி சமமான பலவீனங்களைக் கொண்ட ஒரு படைப்பை அவன் கடவுளாக கருதியிருக்க மாட்டான்.
இஸ்லாம், கடவுட்கொள்கையை முன்வைக்கும் போது, அந்த கடவுள் மனிதனின் கற்பனைக்கும் அப்பாற்பட்டவராக நம்பச் சொல்கிறது.