06) அபூதாலிபின் மரணம்

நூல்கள்: நபிகள் நாயகம் வரலாறு (கேள்வி பதில் வடிவில்)

கேள்வி: நபிகளாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் எந்த ஆண்டு இறந்தார்கள்?

பதில்: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரான பத்தாம் ஆண்டு (ஆதாரம்: பிதாயா வந்நிஹாயா, பாகம்: 3, பக்கம்: 98)

கேள்வி: இச்செய்தி ஆதாரப் பூர்வமானதா?

பதில்: ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு தான் கூறுகிறார்கள். ஆனால் சரியான அறிவிப்பாளர் வரிசையில் இந்தச் செய்தி பதிவு செய்யப்படவில்லை.

கேள்வி: அபூதாலிப் அவர்களின் மரணம் நெருங்கிய போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?

பதில்: அவர்களை இஸ்லாத்தில் இணைப்பதற்காக, ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வலியுறுத்துவற்காக அவர்களிடம் சென்றார்கள். (ஆதாரம்:(புகாரீ: 1360)

கேள்வி: அங்கு வேறு யார் யார் இருந்தார்கள்?

பதில்: அபூஜஹ்ல், அப்துல்லாஹ் பின் உமையா (ஆதாரம்:(புகாரீ: 1360)

கேள்வி: அபூதாலிப் அவர்களிடம் சென்ற நபிகளார், அவரிடம் என்ன கூறினார்கள்?

பதில்: “என் பெரிய தந்தையே! “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லி விட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று கூறினார்கள். (ஆதாரம்:(புகாரீ: 3884)

கேள்வி: இதைக் கேட்ட அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் உமையாவும் என்ன கூறினார்கள்?

பதில்: அபூதாலிபிடம் “அபூதாலிபே! (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று தொடர்ந்து கூறி வந்தனர். (ஆதாரம்:(புகாரீ: 3884)

கேள்வி: இறுதியில் யாருடைய கருத்தை அபூதாலிப் ஏற்றுக் கொண்டார்?

பதில்: “(என் தந்தை ) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையே தேர்வு செய்கிறேன்” என்று கூறி இணை வைப்புக் கொள்கையிலேயே இறந்தார். (ஆதாரம்:(புகாரீ: 3884)

கேள்வி: இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?

பதில்: “பாவமன்னிப்பு கோரக் கூடாது என்று எனக்குத் தடை விதிக்கப்படும் வரை நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்” என்றார்கள். (ஆதாரம்:(புகாரீ: 3884)

கேள்வி: அப்போது இறங்கிய வசனங்கள் எவை?

பதில்: இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரே யானாலும் அவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அல்குர்ஆன்: 9:113)

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 28:56) (ஆதாரம்:(புகாரீ: 3884)

அன்னை கதீஜா அவர்களின் மரணம்

கேள்வி: அன்னை கதீஜா (ரலி) எப்போது மரணமடைந்தார்கள்?

பதில்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் செல்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மரணமடைந்தார்கள். (ஆதாரம்:(புகாரீ: 3896)

கேள்வி: ஆமுல் ஹுஸ்ன் (கவலை ஆண்டு) என்று எதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?

பதில்: எந்த ஆண்டில் அன்னை கதீஜா (ரலி) அவர்களும் அபூதாலிப் அவர்களும் இறந்தார்களோ அந்த ஆண்டையே இவ்வாறு குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: முஹம்மத் ரஸுலுல்லாஹ் பாகம்: 1, பக்கம்: 139) (ஆனால் இதற்குச் சரியான அறிவிப்பாளர் வரிசை கிடையாது)

கேள்வி: அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புக்கள் பற்றி நபி மொழியில் கிடைப்பது என்ன?

பதில்: நபிகளார் அதிகமதிகம் நினைவு கூர்ந்த பெண்மணி (ஆதாரம்:(புகாரீ: 3817)

நபிகளார் அதிகம் அன்பு வைத்திருந்ததால் “இவர்களை விட்டால் வேறு பெண்களே இல்லையா?” என்று கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பொறாமைப்பட்ட பெண்மணி (ஆதாரம்:(புகாரீ: 3817, 3818)

“சுவர்க்கத்திற்குரியவர்” என்று நற்செய்தி கூறப்பட்ட பெண்மணி (ஆதாரம்:(புகாரீ: 3817)

“சுவர்க்கத்தில் முத்து மாளிகைக்கு உரியவர்” என்று நற்செய்தி கூறப்பட்ட பெண்மணி (ஆதாரம்:(புகாரீ: 3817)

அல்லாஹ்வும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு ஸலாம் கூறியுள்ளார்கள். (ஆதாரம்:(புகாரீ: 3820)

உலகில் மிகச் சிறந்த பெண்மணிகளில் ஒருவராக நபிகளார் இவர்களை குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்:(புகாரீ: 3432)